பாதிப்புகளுக்கு பரிகாரம் செய்ய அவசரகால அலுவலகம் அவசியம் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Tuesday, May 21st, 2019

தற்கொலைத் தாக்குதல்கள் காரணமாக உயிரிழந்தோருக்கும், காயமடைந்தோருக்கும், அதன் பின்னரான வன்முறைத் தாக்குதல்கள் காரணமாகப் பாதிக்கப்பட்டோருக்கும் வழங்கப்படுவது போன்றே வாழ்வாதார ரீதியில் பாதிக்கப்பட்ட தொழில்வாய்ப்புகளைக் கொண்டிருந்த அனைவருக்கும் இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டிய தேவையை இங்கு வலியுறுத்துகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 2008 ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டபின் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இன்னொரு பக்கமாக இந்த செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டம் எனப் பார்க்கின்றபோது, மக்களின் நன்மை கருதிய உத்தேச பொருள் மற்றும் சேவைகள் வழங்கலுக்கு தொடர்புடையதான முக்கியத்துவமும், போதியளவு தொகையிலான அந்நியச் செலாவணி நாட்டுக்குள் பய்;வதற்கும், போதியளவு தொழில்வாய்ப்புகள் உருவாக்கம் மற்றும் வருமான உருவாக்கங்களுக்கான சந்தர்ப்பங்களை மேம்படுத்தல், மற்றும் தொழில்நுட்ப ரீதியில் எதிர்பார்ப்பு கொண்டுள்ள நன்மையான மாற்றங்கள் ஊடான நாட்டின் தன்மையில் குறிப்பிடத்தக்களவு மாற்றம் செய்யக் கூடிய திட்டங்கள் இதில் அடங்குவதாக வரைவிலக்கணம் குறிப்பிடுகின்றது.

அந்த வகையில், நீங்கள் இதுவரையில் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பிலான பின் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? என்பது தெரியாது. அவ்வாறு ஏதேனும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவா? என்பது தொடர்பில் அறியவும் விரும்புகின்றேன்.

2008ஆம் ஆண்டில் இந்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டபோது, இதன் ஊடாக கசினோ போன்ற சூதாட்டங்கள் நாட்டுக்குள் சட்டரீதியாக நுழைந்து, இந்த நாட்டின் கலாசாரத்தில் மிகுந்த பாதிப்பினை உண்டுபண்ணும் என்று கூறி, எதிர்ப்பு தெரிவித்திருந்த தரப்பினரே இன்று இச்சட்டம் பற்றி தொடர்ந்தும் அக்கறை காட்டி வருவதானது, இச் சட்டத்தின் எத்தகைய நன்மை குறித்து? என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை.

அதேநேரம், இந்த ஆண்டின் ஆரம்ப காலகட்டத்தை எடுத்துக் கொண்டால் இந்த நாட்டின் வர்த்தக வங்கிகளில் கிட்டத்தட்ட 7 வங்கிகள் வரையில் இலாபத்தில் வீழ்ச்சி நிலையைக் கண்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. இந்த வீழ்ச்சி நிலையானது நூற்றுக்கு 12 முதல் 57 வீதம் வரையிலானது என்றும் தெரிய வருகின்றது. அதாவது, ஏப்ரல் 21ஆம் திகதி தற்கொலைத் தாக்குதலுக்கு முந்தைய நிலை இதுவெனில், மேற்படித் தாக்குதலின பின்னர் இந்த வங்கிகளின் வீழ்ச்சி நிலை எந்தளவிற்கு இருக்குமென யூகிக்க முடிகின்றது.

எனவே, நாட்டின் இன்றைய நிலைமையினை முன்னிறுத்தி, அதற்கு ஏற்ற வகையிலான உடனடி மற்றும் நீண்ட கால திட்டங்களை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பப்பட வேண்டியது அவசியமாகும். அதைவிடுத்து, அனர்த்தங்களையும், விபரீதங்களையும் முன்வைத்து அரசியல் நடத்திக் கொண்டிருந்தால், இப்போதுகூட இந்த நாடும் நாட்டு மக்களும் வெளிநாடுகளுக்கு அடகு வைக்கப்பட்டு வருவதைப்போல, இந்த நிலை மாறி,; இந்த நாடும், நாட்டு மக்களும் மொத்தமாகவே  வெளிநாடுகளுக்கு விற்கப்பட வேண்டிய நிலைமையும் உருவாகலாம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

வறுமையில் வீழ்ந்து கிடக்கும் உங்களது பிரதேசத்தை தூக்கி நிறுத்த அயராது பாடுபடுவேன் - முல்லை மக்களிடம்...
கடற்றொழிலாளர்களின் வாழ்வியலை பாதிக்கும் நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...
கடற்றொழிலாளர்களின் நலன்களுக்கு முரணாக எந்தவொரு செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பமாட்டாது – அமைச்சர் டக்ளஸ்...