பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, November 29th, 2016

இலங்கையில் தொடர்ந்து ஒரு சர்ச்சைக்குரிய துறையாகவே எமது ஊடகத்துறை இருந்து வருவதை காணக்கூடியதாக இருக்கிறது. அந்த வகையில் எமது ஊடகத்துறையானது அதனது அடிப்படை பண்புகளை இழந்து நிற்கின்றதாகவும்,  அதற்குரிய சுதந்திரத்தை அளவுக்கதிகமாக எடுத்துக் கொண்டு அனுபவித்து வருகின்றது என்றும் அதன் மீதான எதிர்ப்புக் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

பக்க சார்பு என்ற நிலைக்கு உட்பட்டு. பல ஊடகங்கள் செயற்பட்டு வருவதாகவும் ஒரு விமர்சனம் தொடர்ந்து இங்கே முன்வைக்கப்படுகின்றது. இதற்கு நிறையவே உதாரணங்களையும் பலர் முன்வைத்து வருவதையும் இதே ஊடகங்களே வெளியிட்டும் வருகின்றன. என்னைப் பொறுத்த வரையில் ஊடகங்கள் பக்க சார்பற்ற வகையில் செயற்பட்டு, எமது மக்களுக்கு உடனுக்குடன் உண்மையான செய்திகளை வெளிப்படுத்தி, அம் மக்களை நேர் வழிப்படுத்த வேண்டும் என்பதை நான் இங்கு தெளிவுபடுத்த விரும்புகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் செலவுத் திட்டம் தொடர்பிலான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு, நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

தகவல்களை சந்தைப்படுத்துவதன் ஊடாக, அதனது விற்பனைப் பெறுமதியை அதிகரித்துக் கொள்ள முடியும் என்ற நோக்கில் மாத்திரம் செயற்படுகின்ற சில ஊடகங்கள், மக்களை அடிக்கடி ஒருவித பதற்றத்துடனும், குழப்பத்துடனும் வைத்துக் கொள்ளும் நிலைப்பாட்டினையே கொண்டிருக்கின்றன.

இவ்வாறான சில ஊடகங்கள் உறுதிப்படுத்தல்கள் இன்றிய நிலையில், நுகர்வுச் சந்தையை மாத்திரம் கருத்தில் கொண்டு செய்திகளை வெளியிடுவதால், எது உண்மை? எது பொய் என்பதை அறிய முடியாத நிலையில் எமது மக்கள் கைவிடப்படுகின்றனர்.

இந்த நிலையிலிருந்து விடுபட்டு, மக்களுக்குப் பொறுப்பு கூறுகின்ற அதி முக்கிய களமாக இந்த ஊடகத்துறை அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

தகவல் அறியும் சட்டமானது கடந்த ஜூன் மாதம் 25ம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது 06 மாத காலத்திற்குள் நடைமுறைக்கு வருமென அப்போது கூறப்பட்டது. எனவே, அதனது  தற்போதைய நிலை என்ன என்பதை இங்கு அறிய விரும்புகின்றேன்.

அத்துடன், ஊடகங்களை ஒழுங்கு விதிகளுக்கு உட்படுத்தும் வகையில் சுயாதீன ஊடக ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும், இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் ஊடக அமைச்சர் கூறியுள்ளதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

அந்த ஆணைக் குழு குறித்தும். அதனது செயற்பாடுகள் குறித்தும் அறிந்து கொள்ள விரும்புகின்றேன். அதே நேரம், கடந்த மார்ச் மாதம் தென் பகுதியிலிருந்து வடக்கு நோக்கி மேற்கொள்ளப்பட்டிருந்த ஊடகவியலாளர்களது நல்லிணக்க விஜயத்தின்போது, வடக்கில் யுத்தப் பாதிப்புகளுக்கு உள்ளான மூன்று ஊடகவியலாளர்களுக்கு வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது என்றும், இதன் பிரகாரம், மூன்று ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, ஒருவருக்கு தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகள் அமைத்துத் தரப்படுமென்று கூறப்பட்டு, அவற்றின் பொறுப்பினை தென் பகுதியிலுள்ள மூன்று ஊடக நிறுவனங்கள் பொறுப்பேற்ற நிலையில், ஒரு வீட்டுக்கான அடிக்கல்லும் நடப்பட்டது என்றும் அறிய முடிகின்றது.

அதன் பின்னர், வடக்கு ஊடகவியலாளர்களது தென் பகுதிக்கான விஜயத்தின்போது, இவ்விடயம் குறித்த கௌரவ ஊடக அமைச்சர் அவர்களிடம் கேட்கப்பட்டபோது, அந்த வீடமைப்புப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும், விரைவில் அவை உரியவர்களுக்கு கையளிக்கப்படுமென்றும் அவர் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன.

எனினும், இதுவரையில் அந்த வீட்டுத் திட்டம் தொடர்பில் எவ்விதமான சாதகமான முன்னெடுப்புகளும் இடம்பெறவில்லை என்றே தெரிய வருகிறது. இந்த ஊடகவியலாளர்கள் மேற்படி வீட்டுத் திட்டத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ள காரணத்தால், இவர்களுக்கு வேறு வீட்டுத் திட்டங்கள் கிடைப்பதிலும் தடையேற்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பில் தற்போதைய உண்மை நிலை பற்றி கௌரவ அமைச்சர் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்றும்,

அதற்குரிய சாதகமான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன். நான் இங்கு குறிப்பிட்ட கடந்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தைப் போன்றே, வடக்கிலுள்ள ஊடகவியலாளர்களுக்கான ஏனைய அரச சலுகைகளின் நிலையும் காணப்படுகின்றன என்பதை இங்கு அவதானத்துக்குக் கொண்டு வர விரும்புகின்றேன்.

அந்த வகையில், தென் பகுதி ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதைப்போன்று, எமது வடக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கும் மடிக் கணினிகள், கையடக்கத் தொலைபேசிகள் போன்ற சலுகைகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும், எமது ஊடகவியலாளர்களது பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, கடன் அடிப்படையில் அன்றி, வரிச் சலுகையுடன் கூடிய மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கு ஒரு விஷேட திட்டமொன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறும், லசந்த விக்கிரமதுங்ஹ மற்றும் பிரகீத் எக்னெலிகொட போன்ற ஊடகவியலாளர்களது கொலை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, முன்னெடுக்கப்பட்டு வருவதைப் போன்று, கொல்லப்பட்ட, படுகாயமடைந்த ஏனைய அனைத்து ஊடவியலாளர்கள் தொடர்பிலும், தாக்குதல்களுக்கு உள்ளான ஊடக நிறுவனங்கள் தொடர்பிலும் உரிய விசாரணைகளை மேற்கொண்டு, குற்றவாளிகள் இனங்காணப்பட்டு, தண்டிக்கப்பட  நடவடிக்கை எடுக்குமாறும், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்த ஊடகவியலாளர்களது குடும்பங்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை ஈட்டிக் கொள்ளக்கூடிய வகையில் ஒரு விஷேட திட்டம் என்ற அடிப்படையில் ஒரு நிதியுதவித் திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், வடக்கு – கிழக்கு ஊடகவியலாளர்களுக்கென ஒரு வீட்டுத் திட்டத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கௌரவ அமைச்சர் கயந்த கருணாதிலக்க அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

குறிப்பாக, வடக்கிலே செயற்பட்டு வருகின்ற சில ஊடக நிறுவனங்கள் – அந்த நிறுவனத்தில் தொழில் செய்கின்ற நிலையில் பாதிப்புகளுக்கு உள்ளாகும் அல்லது இறக்க நேரிடும் ஊடகவியலாளர்களுக்கென்று எவ்வித கொடுப்பனவுகளையும் அவர்களது குடும்பங்களுக்கு வழங்காத ஒரு நிலையே காணப்படுகின்றது. தங்களது ஊடக நிறுவனத்தில் பணிபுரிந்து இறக்கின்ற ஊடகவியலாளர்களது மரண செய்தியினை பிரசுரிப்பதற்குக்கூட அந்த ஊடகவியலாளரின் குடும்பத்தினரிடமிருந்து – அவர்களது பொருளாதார பினன்னடைவுகளையும் பொருட்படுத்தாது பணம் வாங்கும் நிலையில் ஊடகப் போராளிகள் எனக் கூறப்படுகின்ற  சிலரது  ஊடக நிறுவனங்கள் வடக்கில் செயற்படுகின்ற நிலையில், பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள அந்தக் குடும்பங்கள் பலத்த சிரமங்களை எதிர்கொள்கின்றன.

எனவே, தனியார் ஊடக நிறுவனங்கள் என்ற போதிலும், இவற்றில் பணி புரிகின்ற ஊடவியலாளர்களது நலன்களைப் பேணத்தக்க சில ஒழுங்கு விதிகளை இந்த நாட்டின் ஊடகத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் எடுக்க வேண்டும் என்றும் கௌரவ அமைச்சர் கயந்த கருணாதிலக்க அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

அதே நேரம் மேலுமொரு முக்கிய விடயத்தை இந்தச் சபையில் முன்வைக்க விரும்புகின்றேன். யுத்தம் காரணமாக உயிரிழந்த உறவுகளுக்கு நினைவேந்தல்களை முன்னெடுப்பதற்காக இந்த அரசு சுதந்திரமாக வழிவிட்டிருப்பது தொடர்பில் எமது மக்கள் சார்பாக எனது நன்றியை இந்த அரசுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

அந்த வகையில் முழுமையாக உயிரிழப்புகளுக்கு உட்பட்ட எமது உறவுகளை நினைவுகூற வழியேற்படுத்திக் கொடுத்ததைப்போல், தற்போது அறைகுறை உயிருடன் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய இந்த அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும், மீண்டும் இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

அதே நேரம், அரச தொலைக் காட்சிகளிலும், வானொலிகளிலும் தமிழ்ச் சேவைகளில் தேசிய கீதம் ஒலி – ஒளிபரப்பப்படும்போது, அதனைத் தமிழ் மொழியில் ஒலி – ஒளிபரப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்எ ன தெரிவித்துள்ளார்.

02

Related posts: