பாடநூல் தவறுகளைத் திருத்த அமையப்பெற்றது விஷேட குழு !

பாடநூல்களில் தமிழ் பேசும் மக்களின் வரலாறுகள் மறைக்கப்பட்டும், திரிபுபடுத்தப்பட்டும் இருப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியும், கல்வி அமைச்சில் அதிகாரிகளுடன் கலந்துரையாடியும் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக, தமிழ் பாடநூல்கள் தயாரிக்கும் உத்தியோகத்தர்களுக்கு துறைசார் ஆலோசனைகளை வழங்குவதற்கு விஷேட குழு ஒன்றை அமைப்பதற்கான கலந்துரையாடல் கொழும்பில் இன்று ( 05.02.2017) நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் மூத்த தமிழ் வரலாற்றுப் பேராசியர்களும், துறைசார் விரிவுரையாளர்களும்,கலந்து கொண்டிருந்தனர். வரலாற்றுப் பாடநூல்களில் மட்டுமல்லாமல்,தமிழ் பாடம், இந்து சமயப் பாடங்களிலும் பல்வேறு தவறுகளும், குறைபாடுகளும் காணப்படுவது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
இன்றைய கலந்துரையாடலின் இறுதியில் தமிழர் வரலாறு மற்றும் தமிழ் பாடங்களை ஆழமாக கற்றறிந்த நிபுனத்துவம் வாய்ந்த ஒன்பது பேர் அடங்கிய விஷேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர்,தமிழர் வரலாறு, தமிழ் மற்றும் இந்து சமயம் ஆகிய பாடப்புத்தகங்களில் காணப்படும் குறைபாடுகளையும், தவறுகளையும் திருத்திக்கொள்வது தொடர்பாக கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து பணிகளை முன்னெடுப்பார்கள்.
இவ்விடயங்கள் தொடர்பாக கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சியான கலந்துரையாடல்களும், ஆய்வுகளும் நடைபெற்றுவந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
Related posts:
|
|