பலாலி விமான நிலையத்தை சீர் செய்து வடக்கின் பொருளாதாரத்தை மேம்படுத்த துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!

Saturday, May 12th, 2018

எமது நாட்டின் உல்லாசப் பிரயாணத் துறையானது மேலும் மேம்பாடுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டிய நிலையே காணப்படுகின்றது. அந்த வகையில் வடக்கு மகாணத்தில் தற்போது நிலவுகின்ற பொருளாதாரப் பிரச்சினைகளை ஈடுசெய்து கொள்ளக்கூடியதாக பலாலி விமான நிலையத்தினை சீர் செய்து, அதனை பிராந்திய மற்றும் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான வழிவகைகளை இந்த அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

தேசிய கணக்காய்வுச் சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு, சிவில் விமான சேவைகள் சட்டத்தினை மறுசீரமைப்பதற்கான சட்டத் திருத்தம் தொடர்பான விவாதத்தின் பின் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

பலாலி விமான நிலையத்தினை மீள சீர் செய்து, உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்காகன போக்குவரத்தினை ஆரம்பிக்க முடியும். அதற்கென ஓடு தளம், கட்டுப்பாட்டு அறைகள், பயணிகள் தங்குமிடம், சோதனைக்கூடம், சிட்டைப் பிரிவு, சுங்க அதிகாரிகள் பிரிவு, சிவில் பாதுகாப்புப் பிரிவு போன்றவற்றின் அமைவிடங்கள் அமைக்கப்பட வேண்டும். இந்த அனைத்து அமைவிடங்களையும் அமைப்பதற்கு பலாலி விமான நிலையத்தினை அண்டிய நிலப் பகுதி போதுமானது என, பலாலி விமான நிலையத்தினை ஆய்வு செய்வதற்காக வருகை தந்திருந்த சென்னை விமான நிலையத்தின் பணிப்பாளர் தீபக் சாஸ்திரி தெரிவித்திருந்தார்.

எனவே, மேற்படி விமான நிலையத்தின் விஸ்தரிப்பிற்கென எமது மக்களுக்குரிய காணி, நிலங்கள் சுவீகரிக்கப்பட வேண்டியத் தேவை இருக்காது.

இன்றைய நிலையில், இந்தியாவிலிருந்தும், பிற நாடுகளிலிருந்தும் பல பக்தர்கள் வடக்கு மாகாணத்தை நோக்கி வருகை தருகின்றனர். வடக்கு மாகாணத்தைப் பார்ப்பதற்கென்றே பல்நாட்டு உல்லாசப் பிரயாணிகளும் அன்றாடம் வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.

அத்துடன், வடக்கு மாகாணத்திலிருந்து அன்றாடம் இந்தியா உட்பட்ட பிற நாடுகளுக்குச் செல்கின்றவர்களது, பிற நாடுகளிலிருந்து வருகின்றவர்களது வருகையும் அதிகரித்தே காணப்படுகின்றது. குறிப்பாக, புலம்பெயர்ந்து வாழுகின்ற எமது மக்கள் மிக அதிகமாக தங்களது தாய்நாட்டுக்கு வருகைதந்த வண்ணமிருக்கின்றனர். இவர்களது வருகைகளை மேலும் ஊக்குவிக்கின்ற வகையில் இந்த விமானப் போக்குவரத்துச் சேவை மீள செயற்படுத்தப்பட்டால், பாரிய முதலீடுகளையும் நாம் எதிர்பார்க்க முடியும்.

இலங்கை வருகின்ற  உல்லாசப் பிரயாணிகள் கொழும்பு வந்து, வடக்கு மாகாணத்தைச் சென்றடைவதற்கு பல மணி நேரங்களைச் செலவிட வேண்டியதும், பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியதுமான நிலைமைகளும் காணப்படுவதால், எமது நாட்டின் உல்லாசப் பிரயாணத்துறையினை மேலும் மேம்படுத்தும் வகையிலும், வடக்கின் உல்லாசப் பிரயாண மையங்களை வளப்படுத்தி, ஊக்குவித்து, பொருளாதார ஈட்டல்களுக்கு வழிவகுக்கும் வகையிலும் பலாலி விமான நிலையத்தின் சீரமைப்பு என்பது அவசியமாகவுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:

அரசியலில் பெண்களின் பிரதிநி தித்துவம் அதிகரிக்கப்படும்போது தான் சமூக மாற்றத்தை கொண்டு வரமுடியும் - ட...
உண்ணாவிரதமிருக்கும் தமிழ்க் கைதிகளின் கோரிக்கையை அரசாங்கம் விரைவாக நிறைவேற்ற வேண்டும்
வாழ்வாதாரத்தை பாதுகாக்காது வாய்ச்சவாடல் விடுவதால் பயனில்லை - கோரக்கன்கட்டு மக்கள் மத்தியில் செயலாளர்...