பறிக்கப்படும் நிரந்தர நியமனத்துக்கான உரிமையை பெற்றுத் தாருங்கள்: வடக்கு மாகாணசபையால் உள்வாங்கப்பட்ட பாடசாலை பணியாளர்கள் டக்ளஸ் எம்.பியிடம் கோரிக்கை!

Saturday, January 19th, 2019

வடக்கு மாகாண சபையால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு நியமனம் வழங்கப்பட்டு பாடசாலை பணியாளர்களாக பணியாற்றிவரும் ஊழியர்கள் தாம் இதுவரை குறித்த பதவியில் நிரந்தரமாக்கப்படாததால் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் குறித்த பதவியின் நிரந்தர நியமனத்தை தமக்கு பெற்றுத்தருமாறும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த பாதிக்கப்பட்ட பாடசாலைப் பணியாளர்கள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொர்பில் தெரிவித்திருந்தனர். இதன்போதே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில் –

கடந்த 2011.12.23 ஆம் திகதி வடக்கு மாகாண சபையால் பிரசுரிக்கப்பட்ட தொழிலாளர் ஆட்சேர்ப்பு செய்வதற்கான வர்த்தமானியின் பிரகாரம் 14 பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தன. இதற்கு அமைவாக தாம் அந்த வர்த்தமானியில் கோரப்பட்ட கல்வித் தகைமைக்கு ஏற்ப குறித்த பதவிக்கு விண்ணப்பித்து பாடசாலை பணியாளர் தொழில் நிலைக்கான நியமனம் 2013.06.17 அன்று வழங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை தாம் குறித்த பணியை மேற்கொண்டு வருகின்றோம்.

ஆனாலும் குறித்த பதவி நிலைக்கான நிரந்தர உள்வாங்கலில் இதுவரை தாம் உள்வாங்கப்படாது புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம். அது தொடர்பில் துறைசார் தரப்பினரிடம் விண்ணப்பித்திருந்த போது அவர்கள் எமது பதவிநிலை நியமனத்தின் கல்வித்தரம் தரம் 9 இருந்து கல்விப் பொதுத்தராதர சாதாரணதரத்தில் 2 சி, 4 எஸ் என அமையவேண்டும் என்பதால் நிரந்தர நியமனத்தில் உள்வாங்க முடியாது என தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 7 வருடங்களுக்கு மேலாக குறித்த தொழிலில் தாம் பணியாற்றி வரும் நிலையில் உள்வாங்கப்பட்ட தகைமைகளை கருத்தில் கொள்ளாது தற்போது புதிய கல்வித்தரத்தை காரணம் காட்டி எமது தொழில்வாய்ப்பு பறிக்கப்படும் நிலை காணப்படுகின்றது.

எமது குடும்ப வாழ்வாதாரத்திற்கான பொருளாதாரமாக இந்த தொழில்வாய்ப்பே இருப்பதால் இந்த பிரச்சினைக்கான நீதியை பெற்று தருவதுடன் தாம் தொடர்ந்தும் குறித்த பணியை மேற்கொள்வதற்கு பணிநிலையை நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு தருமாறும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம்  கோரிக்கை விடுத்தனர்.

பாடசாலைப் பணியாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் துறைசார் தரப்பினருடன் குறித்த விடயம் தெர்டர்பாக பேச்சுக்களை மேற்கொண்டு தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_20190119_091410

Related posts:


சரணாகதி அரசியல் செய்வது யார் என்பதை மக்கள் இன்று உணர்ந்துள்ளனர் – யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் எம்.பி. தெர...
ஜனாதிபதியின் “வீட்டுக்கு வீடு தென்னை மரம்” திட்டம் - வடக்கில் வலுப்படுத்துகிறார் அமைச்சர் டக்ளஸ்!
வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கத்...