பயனாளிகளுக்கு நியாய விலையில் மணல் கிடைக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Thursday, April 4th, 2019

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் பிரதேசத்தில் புத்துவெட்டுவான், கொக்காவில், முதிரைச்சோலை போன்ற பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட காடுகள் அழிக்கப்பட்டு, கிரவல் மண் அகழ்வுகள் கடந்த பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கிருந்த பெறுமதிமிக்க மரங்கள் பல தரிக்கப்பட்டுள்ளன. இங்கு அகழப்படுகின்ற கிரவல் மண் அனைத்தும் இந்தப் பகுதியின் அபிவிருதிப் பணிகளுக்கன்றி வேறு மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதாகக் கூறப்படுகின்றது.

முன்னர் வளமான சமதரையாகவும், சோலையாகவும் காணப்பட்ட இந்தப் பகுதியானது இன்று பாரிய குழிகளைக் கொண்ட வெறும் நிலமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது.

கிளிநொச்சி வன்னேரிக்குளம் ஆற்றுப்படுக்கைகளில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுகள் காரணமாக வன்னேரிக்குளத்தின் நீர் பின்வழியாக வெளியேறி விவசாய மக்களின் விவசாய செய்கைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இங்கிருந்து அகழப்படுகின்ற மணல் பிற மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஊற்றுப்புலம் கிராமத்தின் ஆற்றுப்படுக்கைகள் மற்றும் புதுமுறிப்புக்குளத்தின் சுற்றாடல் என்பவற்றில் மணல், கிரவல் அகழ்வுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு, இப்பகுதியிலும் விசாயத்துறையானது பெருங் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறு பெருந்தொகையான மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இந்த மாவட்டங்களின் கட்டுமாணத் தேவைகளுக்கான மணலைப் பெற இயலாத நிலையிலேயே எமது மக்கள் இருந்து வருகின்றனர்.

புவிச் சரிதவியல் அளவைச் சுரங்கமானது நாடளாவிய ரீதியில் சுமார் 5 ஆயிரம் வரையிலான அனுமதிப் பத்திரங்களை மணல் அகழ்வு செயற்பாடுகளுக்காக வழங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஆனாலும், நாட்டில் குறிப்பாக, வடக்கு கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோதமான மணல் அகழ்வுகள் மிகப் பாரிய பரிமாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே, இத்தகைய சட்டவிரோதமான செயற்பாடுகள் தொடர்பில் அதிக அவதானமெடுத்து, அதனைத் தடுப்பதற்கும், சட்டரீதியிலான மணல் அகழ்வுகளால் கிடைக்கப் பெறுகின்ற மணலினை அதிகளவில் அந்தந்த மாவட்டங்களின் தேவைகளுக்கு நியாய விலையிலும் இலகுவாகவும், பயனாளிகளுக்குக் கிடைக்கக்கூடிய வகையிலுமான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற விடயத்தை இங்கே வலியுறுத்த விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சு, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts:

போராட்டத்தின் பங்காளிகளே மாகாணசபையை நிர்வகிக்க வேண்டும் - டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!
யாருடன் கூட்டுச் சேர்ந்தாலும் எமது மக்களின் அபிலாசைகளையே வலியுறுத்துவோம் - வவுனியா மாநாட்டில் செயலாள...
எக்ஸ்பிரஸ் பேர்ள் அனர்த்தம்: பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவது தொடர்பில் அமைச்சர்...