பயனற்ற அலுவலகங்களுக்கு மக்கள் பணத்தினை வீண்விரையம் செய்யாதீர்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி. தெரிவிப்பு!

Tuesday, April 2nd, 2019

இந்த நாட்டின் வரலாற்றை திரும்பிப் பார்க்கின்றபோது, ஒரு இனத்தைச் சேர்ந்த மக்கள் மாத்திரம் வலிந்து காணாமற் போகச் செய்யப்படவில்லை. சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் கூட இந்த நிலைமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு, அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

தற்போது வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற 11 மாணவர்கள் – இளைஞர்கள் கடத்தல் மற்றும் வலிந்து காணாமற் போகச் செய்யப்பட்டமை தொடர்பான சம்பவத்தை எடுத்துக் கொண்டால், அதில் மூவினங்களைச் சேர்ந்த இளைஞர்களும் வலிந்து காணாமற் போகச் செய்யப்பட்டுள்ளனர்.

வலிந்து காணாமற் போகச் செய்யப்பட்டவர்களது உறவினர்களது அபிலாசைகளை நிறைவேற்ற இயலாத வகையில் அலுவலகங்களை அமைத்துக் கொண்டு, அதற்கென எமது மக்கள் பணத்தினை செலவு செய்வதில் எவ்விதமான பயனும் இல்லை என்றே கூற வேண்டியுள்ளது.

வலிந்து காணாமற் போகச் செய்யப்பட்டவர்களது உறவினர்கள் அண்மையில் தங்களது போராட்டத்தின் இரண்டாண்டு நினைவையொட்டி கிளிநொச்சியில் ஒரு கவனயீர்ப்பு போராட்டப் பேரணியை ஆரம்பித்து, இந்த காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகம் வேண்டாம் எனக் கூறி, அதற்கான எதிர்ப்பினை தெரிவித்திருந்த சமயத்தில், போலி தமிழ்த் தேசியம் பேசுகின்ற ஓர் அரசியல்வாதியின் ஏற்பாட்டில் சிலர் அந்தப் பேரணிக்குள் பலவந்தமாகப் புகுந்து, ‘வேண்டும். வேண்டும். இந்த அலுவலகம் வேண்டும்!’ என எமது மக்களது அபிலாசைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்திருந்த ஒரு சம்பவமும் இடம்பெற்றிருந்தது.

இவ்வாறு, எமது மக்களுக்கு எதிரான ஒரு செயற்பாட்டை மேற்கொண்டு, வலிந்து காணாமற் போகச் செய்யப்பட்ட உறவுகளது உணர்வுகளை ஒடுக்கும் முகமாக செயற்பட்டிருந்த அந்த தமிழ் அரசியல்வாதிக்கு இந்த அலுவலகம் ஏதேனும் நிதி ஒதுக்கீடுகளை கொடுத்ததா? என்பது தெரியாது. ஆனால், அவர் அவ்வாறு செயற்பட்டதைப் பார்க்கின்றபோது, எமது மக்களிடையே அவ்வாறானதொரு சந்தேகமும் ஏற்பட்டிருக்கின்றது.

எனவே, எமது மக்களிடையே இத்தகைய கேவலமான செயற்பாடுகளின் மூலமாக இந்த அலுவலகத்தை திணிக்க முற்படாமல், அதனுடைய செயற்பாடுகளின் மூலமாக – எமது மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதன் ஊடாக எமது மக்களின் நம்பிக்கையை அதன்பால் ஈரத்துக் கொள்ள முற்பட வேண்டும் என்பதையே இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

Related posts:

ஒருவருக்கு இருக்கும் பெயர் இன்னெருவருக்கும் இருக்கும் என்பதை தேர்தல் ஆணைக்குழு அறிந்திருக்கவில்லையா...
புதிய ஆண்டில் நல்ல தீர்வு கிடைக்கும் - நம்பிக்கையுடன் பணிகளை தொடருங்கள் – நியமனம் கிடைக்காத டெங்கு ...
போக்குவரத்து நெருக்கடிகளை நிவர்த்திப்பதற்கு ஏற்பாடுகளை செய்துதருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ...