பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டறவுச் சங்கத்தினரின் கோரிக்கைகள் தொடர்பில் சாதகமான தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, January 16th, 2021

பனைவள உற்பத்திகள் மேம்பாடு பனைவளத் தொழில் வல்லுநர்களது நிலையான வாழ்வாதாரங்கள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வட மாகாண பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் திகதி பொருந்தோட்ட அமைச்சர் ரமேஸ் பத்திரன அவர்களை அவரது அமைச்சில் சந்தித்து விஷேட கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.

இதன் பிரகாரம், பனங் கள்ளினை போத்தலில் அடைப்பதற்கான உற்பத்தி வரியை 25 ரூபாவினால் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தற்போது 15 நாட்களுக்கொரு முறை செலுத்த வேண்டிய வரித் தொகையை போத்தல் கள்ளினை விற்பனை செய்யும் காலத்தில் செலுத்துவதற்கு வசதியேற்படுத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பருவமற்ற காலங்களிலும், இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுகின்ற காலங்களிலும் தொழில் வாய்ப்புகளின்றி பாதிக்கப்படுகின்ற  பனைவளத் தொழில் வல்லுநர்களது நலன்கருதி நிவாரண முறைமை ஒன்றினை ஏற்படுத்துவது தொடர்பில் அவதானங்கள் செலுத்தப்பட்டுள்ளதுடன், பனங் கருப்பட்டி, பனங் கற்கண்டு, ஒடியல் மா உள்ளிட்ட பனை உற்பத்திகளை ஊக்குவிக்கும் வகையில் தொழில் உபகரணங்கள் பெறவும்,  தொழிற்சாலைகளின் நவீனமயமாக்கல் பணிகளுக்காகவும் 50 வீத அரச மானியம் (ஏனைய 50 வீதத்தை சங்கங்கள் பொறுப்பேற்கும் வகையில் வழங்குவதற்கும், விவசாய நவீனமயமாக்கல் துறையின் கீழ் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதென்றும், மேலும் நிவாரணங்கள் குறித்து இத் துறையின் கீழ் பரிசீலிக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், ஏற்கனவே நடைமுறையில் இருந்ததைப் போன்று,  பனை மற்றும் தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களில் பனஞ் சாராயத்தை மாத்திரம் விற்பனை செய்வதற்கான மேற்படி சங்கத்தினரின் கோரிக்கை தொடர்பில் கௌரவ பிரதமர் அவர்களுடன் கலந்துரையாடுவதென்றும்> பனை அபிவிருத்திச் சபையின் பணிப்பாளர்ச் சபைக்கு மேற்படி பனை தென்னை வள அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

தற்போது பனஞ் சாராய உற்பத்திக்கென ஓர் அறுதி லீற்றருக்கு அறவிடப்படுகின்ற 4050 ரூபா மதுவரியை குறைப்பது தொடர்பில் அவதானங்கள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், அனைத்து பனை வள உற்பத்தித் தொழிற்சாலைகளையும் நவீனமயப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கென வங்கிக் கடன்களை பெறுவது மற்றும் மேற்படி உற்பத்தித் தொழிற்சாலைகளை பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களுடன் இணைந்த இத்துறை சார்ந்த பொதுமக்கள், தனியார் நிறுவனங்களாக தரமுயர்த்துவது குறித்தம் மேற்படி சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதாகவும் முடிவெடுக்கப்பட்டன.

பனை சார்ந்த உற்பத்திகளை நாடாளாவிய ரீதியில் அமைந்துள்ள தனியார் பல்பொருள் அங்காடிகளில் விற்பனைக் கூடங்களை அமைத்து சந்தைப்படுத்துவதற்கும், வெளிநாட்டு சந்தைவாய்ப்புகளை பரவலாக்குவதற்கும், புலம்பெயர் உறவுகள் மத்தியில் நியாயாமான விலைகளிலும், இலகுவாகவும் கிடைக்கக்கூடிய வகையில் இவ்வுற்பத்திகளை ஏற்றுமதி செய்வது தொடர்பிலும் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும், தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்துடன் இணைந்து மேலும் நிலையான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதெனவும், பனை மரங்களை தரிப்பது தொடர்பில் பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பரிந்துரை அவசியம் என்றும் இவ்விடயங்கள் தொடர்பில் விரைவில் யாழ்ப்பாணத்தில் மேற்படி சங்கப் பிரதிநிதிகளுடன் விஷேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி கலந்துரையாடலில் பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் திரு. ரவீந்திர ஹேவாவிதாரன பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் திரு. கிருசாந்த பதிராஜ தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத் தலைவர் திரு அசோக்க சிறிவர்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts:


புலம்பெயர் இலங்கையர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை : ஆராயும் குழுவில் டக்ளஸ் தேவானந்தா!
நீடித்த மகிழ்ச்சிக்காக நிரந்தர ஒளியேற்ற புது நிமிர்வுடன் உழைப்போம் : தீபாவளி வாழ்த்துச் செய்தியில் அ...
பொருளாதார நெருக்கடிகளை மக்கள் எதிர்கொள்ளும் நோக்கில் சாதகமான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பா...