படிப்பினைகள் பாடமாகாவிட்டால் நல்லிணக்கம் சாதியம் ஆகாது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Tuesday, March 12th, 2019

கடந்த காலத்திலிருந்து இந்த நாடு பாடம் படித்துக் கொள்ளாத நிலையிலே கடந்த காலத்தை மறப்போம் என்பதை எமது மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதையே நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்பகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்;தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் இடம்பெற்ற வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இம் முறை வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த ஊதியத்திற்கென 50 ரூபா ஒதுக்கப்படுமென கூறப்பட்டு வந்துள்ள நிலையில், தோட்டத் தொழிலாளர்களது ஊதியப் பிரச்சினைக்கு தேயிலை சபையுடன் கலந்துரையாடி உடனடித் தீர்வு எட்டப்படும் எனக் குறிப்பிட்டுள்ளதுடன் வேறு எவ்விதமான குறிப்புகளும் அது தொடர்பில் இல்லை.

அத்துடன், ‘பனை நிதியம்’ என்றொரு விடயம் இம்முறை உள்ளடக்கப்பட்டுள்ளது. இதற்கென 2,500 மில்லியன் ரூபா முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பங்களிப்புச் செய்யுமாறு நலன்விரும்பிகள், கொடை வள்ளல்கள் மற்றும் விஷேடமாக புலம்பெயர் மக்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இச்செயற்பாடானது நிலைபேற்றைக் கொண்டதா? என்றொரு சந்தேகத்தையே ஏற்படுத்துவதாக உள்ளது. இத்தகையதொரு நிதியம் திறைசேரியினால் நிர்வகிக்கப்படுகின்ற நிலையில், இதற்கு பங்களிப்பு வழங்குவதற்கென எவரும் முன்வருவார்களா? என்பது சந்தேகமாகவே இருக்கின்றது.

ஏற்கனவே வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வீடமைப்புத் திட்டத்திற்கென ஒதுக்கப்படதாகக் கூறப்பட்ட நிதியே  இல்லை என திறைசேரி கூறியிருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இது ஒரு கேள்விக்குறியான நிலைமையினையே கொண்டிருக்கிறது என்பதால்,  இத்திட்டத்தின் கீழான ஏற்பாடுகள் தொடர்பில் நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

அதேநேரம், ‘பனை நிதியம்’ என்கின்ற பெயர் எமது பகுதியினை அடையாளப்படுத்துவதாக அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது. எனினும், பனை வளத் தொழில் சார்ந்த மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துகின்ற திட்டங்களும் அதில் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும்.

எனினும், இத்தகைய ஏற்பாடுகள் மாகாண ரீதியில் நிர்வகிக்கப்படக்கூடிய நிலைமைகளைக் கொண்டிருப்பின், அவற்றுக்கான பங்களிப்புகளை சமூகம் சார்ந்த பலரிடமும் எதிர்பார்க்கக் கூடியதாக இருக்கும்.

அடுத்து,  நல்லிணக்கம் தொடர்பில் கடந்த பல வருடங்களாக பிரஸ்தாபிக்கப்பட்டு, அதற்கென பல்வேறு தொகையிலான நிதி ஒதுக்கீடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. இந்த செயற்திட்டங்களின் ஊடாக இன்று இந்த நாட்டில் நல்லிணக்கம் என்பது எந்தளவிற்கு வலுப்பெற்றுள்ளது? என்பது கேள்விக்குறியேயாகும்.

பிரதமரின் கீழ் இயங்கும் நல்லினக்கப் பொறிமுறை ஒருங்கிணைப்புச் செயலகத்தின் மூலமாக விழிப்புணர்வு மற்றும் தெளிவுபடுத்தல் நிகழ்ச்சிக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

அதேநேரம், கலை மற்றும் கலாசாரத்தின் ஊடான சமாதானத்திற்கான நிகழ்ச்சித் திட்டம் எனக் கூறப்பட்டு, மேலுமொரு தொகை நிதி தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், வடக்கு மாகாணத்தில் நிலைபேரான வாழ்வாதாரத்தினை ஏற்படுத்தவும், நல்லிணக்கத்தினை உறுதிப்படுத்துவதற்குமாக ‘கடந்த காலத்தை மறப்போம் – எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவோம்’ என்றொரு திட்டம் தொடர்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த காலத்திலிருந்து இந்த நாடு பாடம் படித்துக் கொள்ளாத நிலையிலே கடந்த காலத்தை மறப்போம் என்பதை எமது மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதையே நான் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இந்த நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ள பாதிப்புகள் தொடர்பில் பல்வேறு ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு, பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பரிந்துரைகள் கடந்த கால அனர்த்த நிகழ்வுகள்  மீள ஏற்படாதிருக்கும் வகையிலும், பாதிப்புகளுக்கு உட்பட்டோருக்கு நியாயம் – நீதி வழங்கப்பட வேண்டியதற்காகவும் முன்வைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் அப் பரிந்துரைகளில் ஒன்றாவது இதுவரையில் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

Related posts:


வதிரி மெ.மி.த.க பாடசாலை அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பாடசாலை கல்விச் சமூகம்...
சுனாமி பேரலையால் உயிர் இழந்த உறவுகளை நினைவுகூர்ந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!
இழப்பீடுகளை பெற்றுக்கொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வலி கிழக்கு பிரதேச விவசாயிகள் நன்றி தெரி...