நெடுந்தீவு இறங்குதுறை விரிவாக்கம் நெடுந்தாரகையின் இலவச போக்குவரத்து குறித்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

நெடுந்தீவு இறங்குதுறையில் போதிய வசதிகளில்லாத காரணத்தினால் பயணிகள் எதிர்கொள்கின்ற சிரமங்களைத் தவிர்க்கும் வகையில் மேற்படி இறங்குதுறையை விஸ்தரிப்பு செய்வது குறித்தும், அதேநேரம், நெடுந்தீவு மக்களின் நலன்கருதி இலவசப் போக்குவரத்தினை மேற்கொள்ளும் பொருட்டு திட்மிடப்பட்டு கொண்டுவரப்பட்ட நெடுந்தாரகை படகினை அந்த நோக்கத்திற்காகவே பயன்படுத்துவது குறித்தும் அரசுடன் கதைத்து, நடவடிக்கை எடுக்கப்படுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேற்படி விடயங்கள் தொடர்பில் நெடுந்தீவு மக்கள் பிரதிகள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், நெடுந்தாரகை படகினை எமது மக்களது நலன் கருதி இலவச போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்துவதற்காகவே உருவாக்க எண்ணி அப்போது அதற்கென நெல்சிப் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக நிதி ஒதுக்கீட்டினைச் செய்திருந்தோம். பின்னர், ஆட்சி அதிகாரம் மாறிய நிலையில், இன்று போக்குவரத்தில் அது ஈடுபடுத்தப்பட்டுள்ள போதிலும், பயணிகளிடமிருந்து கட்டணம் அறவிடப்படுவதாகத் தெரிய வருகிறது.
கடந்த காலத்தில் நாம் நெடுந்தாரகையை கொண்டு வருவதற்கான எற்பாடுகளை ஆரம்பித்ததுபோல், வடதாரகையைக் கொண்டு வந்திருந்தோம். எனினும், நெடுந்தீவு இறங்குதுறை ஆழப் பிரச்சினை காரணமாக ஆரம்பத்தில் அதனை கரையுடன் இணைப்பதற்கான சிரமங்கள் காணப்பட்ட போதிலும், அக் காலப்பகுதியில் மேற்படி இறங்குதுறையை ஆழமாக்குதல் மற்றும் புனரமைப்புப் பணிகளை முன்னெடுத்திருந்தோம். அந்த வகையில் வடதாரகைக்கென கட்டணங்கள் அறவிட நாம் அனுமதித்திருக்கவில்லை. தற்போது நெடுந்தாரகைக்கென கட்டணங்கள் அறவிடப்படுகின்றன. இதற்கு வினைத்திறனற்றதும், மக்கள் நலன் சாராததுமான நிர்வாகமே காரணமாகும்.
அதே நேரம், தற்போது மேற்படி இறங்குதுறை வசதியின்மை தொடர்பாகவும் பல்வேறு தேவைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனை அவதானத்தில் கொண்டு, அரசுடன் கதைத்து வெகுவிரைவில் இந்த இறங்குதுறை விஸ்தரிப்பு மற்றும் நெடுந்தாரகையிலான இலவசப் பயணிகள் போக்குவரத்து தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
பொன்னாலைப் பகுதி மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா அவதானம்!
சமூகத்தின் நற் பிரையைகளை வளர்க்கும் களமாக விழங்குவது சனசமூக நிலையங்கள் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவ...
இருப்பதை பாதுகாத்து மேலும் முன்னேறுவதே எமது இலக்கு - தென்மராட்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
|
|