நுண்கடன் முறைமை முற்றாக தடைசெய்யப்படவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Friday, June 8th, 2018

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே எமது மக்களை வாட்டி, வதைக்கின்ற மேற்படி நுண்கடன் நிதி நிறுவனங்கள் தொடர்பில் இந்த அரசு வலுவுள்ள, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்த விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றையதினம் நடைபெற்ற நாட்டிலுள்ள நிதி நிறுவனங்கள் தொடர்பாக நிலவுகின்ற பிரச்சினைகள் பற்றிய சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

 ‘மலர்ந்தது தமிழர் ஆட்சி’ என்று கூறிக் கொண்டு வந்த வடக்கு மாகாண சபையின் மூலமும் எவ்விதமான மக்கள் நலன்சார் திட்டங்களும் இல்லாத நிலையில், எமது மக்கள் இத்தகைய நுண்கடன் நிதி நிறுவனங்களின் சூழ்ச்சிகளில் சிக்குண்டு பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது. இதே போன்றதொரு நிலைமையினைத்தான் அன்று ‘தமிழனின் வங்கி’ என்று கூறிக் கொண்டு வந்திருந்த சப்றா நிதி நிறுவனமும் எமது மக்களை பல்வேறு பாதிப்புகளுக்கு உட்படுத்தியிருந்தது.

வடக்கு, கிழக்கு மக்களுக்கான பொருளாதார உளவியல் யுத்தமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இந்த நுண் கடன் நிதி நிறுவனங்களின் நடவடிக்கைகள் காரணமாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளாந்தம் தற்கொலைக்கு முயற்சிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுகின்ற பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தும் வருகின்றனர்.

இத்தகைய நுண் கடன் நிதி நிறுவனங்கள் தொடர்பில் அரச தரப்பினருக்கு பல்வேறு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலும், அரசு இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை இதுவரையில் எடுத்துள்ளதாகத் தெரிய வரவில்லை. ஏற்கனவே எமது மக்களின் பணத்தை மோசடி செய்துள்ள சப்றா நிதி நிறுவனத்தின் மோசடிக்காரர்கள் இத்தகைய நிதி நிறுவனங்களின் பின்னணியில் அல்லது வழிகாட்டிகளாக தற்போதும் இருக்கின்றார்களா? என்பது தெரியாது. சிலவேளை அப்படி இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றே கூற வேண்டும்.

இத்தகைய நிலையில் இலங்கை மத்திய வங்கியின் 2017ஆம் ஆண்டுக்கான அறிக்கையின் இரண்டாவது பகுதியிலே, வங்கிகளற்ற நிதி நிறுவனங்கள் மேற்பார்வை எனும் தலைப்பின் கீழ் மொத்தமாக 51 நிதி நிறுவனங்கள் செயற்பாட்டில் இருப்பதாகவும், மேலும் 68 நிதி நிறுவனங்களை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது.

இவ்வாறான அனுமதிகள் வழங்கப்படுகின்ற நிலையில், நுண் கடன் பிரிவுகளின் கட்டளைக்கும், மேற்பார்வைக்குமான திணைக்களம் ஒன்றும் செயற்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகின்ற நிலையில், மேற்படி நுண் கடன் நிதி நிறுவனங்களால் எமது மக்கள் தற்கொலைக்கு துணிகின்ற நிலைமைகள் ஏன் ஏற்படுகின்றன? என்ற கேள்வியே எமது மக்கள் முன்பாக எழுந்துள்ளது.

இன்று எமது மக்கள் பொருளாதார வலிமை இழந்தவர்களாக இருக்கின்ற நிலையில், அவர்களால் ஈட்டப்படுகின்ற சொற்பமான நிதிகூட பினான்ஸ், லீசிங், நுண்கடன் வட்டி, வீடமைப்புக் கடன் வட்டி போன்ற பல்வேறு பிரிவுகளால் தென் பகுதி நோக்கியே அவை நகர்த்தப்பட்டு வருகின்றன.

அது போதாமைக்கு பிற மாவட்டங்களிலிருந்து சென்று வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வளங்கள் சூறையாடப்படுகின்ற நிலைமைகளும் இல்லாமல் இல்லை. பல்வேறு தொழில்சார் இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன.

எனவே, வடக்கு, கிழக்கு மாகாணங்களிலே எமது மக்களை வாட்டி, வதைக்கின்ற மேற்படி நுண்கடன் நிதி நிறுவனங்கள் தொடர்பில் இந்த அரசு வலுவுள்ள, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்த விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

Related posts:


உரிமைகள் மறுக்கப்பட்ட ஓர் இனமாகவே எமது மக்கள் இந்த நாட்டில் வாழ்கின்றார்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் ...
தென்னிலங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு...
யாழ். பல்கலையின் பணிகளுக்கு வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தோருக்கு முன்னுரிமை வழங்காமைக்கு காரணம் என்ன? ...