நீர்வேளாண்மை உற்பத்திகளை விஸ்தரிக்க நடவடிக்கை – வங்கிக் கடன் வசதிகளுக்கும் ஏற்பாடு என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, December 26th, 2021

நீர்வேளாண்மை மூலமான உற்பத்திகளை விஸ்தரிக்கும் நோக்கில் வங்கிக் கடன் வசதிகயுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், சமுர்த்திப் பயனாளர்களாக இருக்கும் கடற்றொழிலாளர்கள் சமுர்த்தி வங்கியின் ஊடாக தலா 50 இலட்சம் ரூபாய் வரையிலான கடனையும், பிரதேச அபிவிருத்தி வங்கியின் மூலம் சுமார் 250 இலட்சம் ரூபாய் வரையிலான கடனையும் பெற்று நீர்வேளாண்மை செயற்பாடுகளுக்கான ஆரம்ப முதலீடுகளாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் அமைச்சர டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அமைச்சரின் யாழ். அலுவலகத்தில்  நடைபெற்றது.

பிரதேச செயலாளர்கள், கடற்றொழில்சார் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் கடற்றொழில் சங்கங்கள் மற்றும் சமாசங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது பிரச்சினைகளை வெளிப்படுத்தினர். இதன்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

நீர்வேளாண்மை எனப்படும் நன்னீர் மீன் வளர்ப்பு, பருவகால மீன் வளர்ப்பு மற்றும் கொடுவா மீன், இறால், நண்டு, கடலட்டை போன்ற பண்ணை வளர்ப்புத் திட்டங்களை விருத்தி செய்வதன் மூலம் வடக்கு மாகாணத்தில் பொருளாதாரத்தை வலுப்படுத்தவதற்கும் தான் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நீர்வேளாண்மையில் ஈடுபடுகின்றவர்களுக்கான முதலீடுகளை பிரதேச அபிவிருத்தி வங்கி மற்றும் சமுர்த்தி வங்கி ஆகியவற்றின் ஊடாக கடன் உதவிகளைப் பெற்றுக் கொடுக்கும் ஏற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று அறிவித்திருந்தார்.

சம்மந்தப்பட்ட வங்கிகளின் பிரதேசப் பிரதானிகள் மற்றும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள்  கலந்து கொண்ட இன்றைய  விசேட கூட்டத்திலேயே கடற்றொழில் அமைச்சரினால்  மேற்படி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே வடக்கில் இதுவரை உருவாக்கப்பட்டுள்ள அனைத்து கடலட்டைப் பண்ணைகளும் அந்தந்தப் பிரதேச மக்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குறுகிய நலன் கொண்ட அரசியலுக்காக தென்னிலங்கை மக்களுக்கு கடலட்டைப் பண்ணைகள் வழங்கப்படுவதாக பொய்யான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதேவேளை, தென்னிலங்கையை சேர்ந்தவர்களுக்கு கடலட்டைப் பண்தைகளை வழங்கக் கூடாது என எந்த வகையான எண்ணமும் தன்னிடம் இல்லை என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேசிய அமைச்சராக பணியாற்றுகின்ற தான், ஒவ்வொரு வேலைத் திட்டங்களிலும் அந்தந்தப் பிரதேச மக்களுக்கே முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்ததுடன், தென்னிலங்கை மாவட்டங்களில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த மக்கள் பல்வேறு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமையையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை நிபந்தனைகளை மீறித் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் உள்ளூர் இழுவைமடித் வலைத் தொழிலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இழுவைமடி வலைத் தொழிலில் ஈடுபடுகின்ற குருநகர் மற்றும் வல்வெட்டித்துறை கடற்றொழிலாளர்களுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் “இழுவைமடி வலைத் தொழில் இலங்கையில் தடைசெய்யப்பட்ட தொழில் முறையாகும். இருப்பினும் உள்ளூர் மீனவர்களின் நலன் கருதி குறித்த சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதுவரையில், நாரா எனப்படும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி முகவர் நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாத்திரம் நிபந்தனைகளின் அடிப்படையில் தொழிலில் ஈடுபட முடியும்.

ஆனால்,  நிபந்தனைகளை மீறி,  ஏனைய தொழிலாளர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் தொழில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் கிடைக்கின்றன. குறித்த நிபந்தனைகளை மீறுகின்றவர்களுக்கு எதிராக கடுமைான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அவ்வாறானவர்கள் தொழிலில் ஈடுபட முடியாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: