நீருக்கான தட்டுப்பாடு நிலவும் நமது நாட்டில் இயற்கை நீர் வளங்களை வெளிநாட்டு நிறுவனத்திற்கு தாரைவார்ப்பதா?- நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Thursday, February 23rd, 2017

இலங்கையில் தற்போது குடி நீர் மற்றும் நீருக்கான தட்டுப்பாடுகள் பாரியளவில் ஏற்பட்டிருக்கும் நிலையில், எமது நீர் வளங்களை மையமாகக் கொண்டு, வெளிநாடுகளுக்கான உற்பத்திகளை மேற்கொள்கின்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அவற்றைத் தாரைவார்ப்பதற்கான  திட்டமொன்று இருப்பதாகச் சுட்டிக் காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இது தொடர்பிலான உண்மை விபரங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டுமென சர்வதேச வர்த்தக மற்றும் அபிவிருத்தி மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவிடம் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த செயலாளர் நாயகம் அவர்கள், எமது நாட்டை கொக்கா கோலா குளிர்பான உற்பத்தியின் மையமாக மாற்றுவதும், அதன் பிரகாரம் இங்கு உற்பத்தி செய்யப்படும் கொக்கா கோலா குளிர்பான உற்பத்திகளின் இறுதி விளை பொருட்களை ஆசியாவில் அந் நிறுவனத்தின் பாரிய சந்தையாக விளங்குகின்ற இந்திய நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதே அந் நிறுவனத்தின் நோக்கம் என்றும், இதற்கென எமது நாட்டின் இயற்கை நீர் வளங்கள் மற்றும் தேயிலை உற்பத்திகள் போன்றவற்றை அந் நிறுவனம் பயன்படுத்தப் போவதாகவும் தெரிய வருகிறது.

இத் திட்டம் எமது நாட்டில் செயற்படுத்தப்படுமானால், பெருமளவில் அந்நியச் செலாவணியைப் பெற்றுக் கொள்ள இயலும் என்பதும், ஒருதொகை வேலை வாய்ப்புகளை வழங்க முடியும் என்பதும் எமக்கு இருக்கின்ற சாதகமான நிலை என்ற போதிலும், எமது நாட்டின் நீர் வளங்கள் தொடர்பில் நாம் அதிகமாக சிந்திக்க வேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

மேற்படி நிறுவனமானது தனது பாரிய சந்தையான இந்தியாவுக்கு குளிர்பானம் மற்றும் அதனோடு கூடிய ஏனைய அனைத்து உற்பத்திகளையும் வழங்க இலங்கையைத் தெரிவு செய்திருக்கும் நிலையில், இந் நிறுவனம் இதற்கான உற்பத்தி மையங்களை இந்தியாவில் அமைத்தால் வசதியாகவும், உற்பத்திச் செலவினைக் கூடிய வரையில் குறைத்துக் கொள்ளவும் ஏதுவாக இருக்கும். அப்படி இருந்தும் இதற்காக ஏன் இலங்கையைத் தேர்ந்தெடுக்கிறது? என்ற கேள்வி எழுவது நியாயமானதாகும்.

மேற்படி நிறுவனத்தின் இந்தியச் சந்தையானது சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனக் கூறப்படும் நிலையில், இந்திய மாநிலங்கள் பலவற்றில் சுமார் 57க்கும் அதிகமான தொழிற்சாலைகளை இந்த நிறுவனம் கொண்டிருக்கிறது. இந்தியாவின் நீர்வளத்தைப் பாரியளவில் பயன்படுத்தி வருகின்ற இந்த நிறுவனம், பல சந்தர்ப்பங்களில் இந்திய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட அளவையும் மீறி நீரை அதிகளவில் பயன்படுத்தியுள்ள சந்தர்ப்பங்கள் ஏராளம் என்றும், இது தொடர்பில் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் அங்குள்ள சமூக ஆர்வலர்கள் இந்த நிறுவனத்தைத் தடை செய்ய வேண்டும் எனக் கோரி பல்வேறு வகையில் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர் என்றும் தெரிய வருகின்றது.

இந்தியாவிலும் நீர்த் தட்டுப்பாடு என்பது பாரியதொரு பிரச்சினையாக உருவெடுத்து, விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்ந நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் பெப்சி கோலா மற்றும் கொக்கா கோலா நிறுவனங்கள் தாமிரபரணி நதியிலிருந்து நீர் எடுப்பதற்கான தடையுத்தரவை அண்மையில் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் நிலக்கீழ் நீர்வளம் தற்போது 54 வீதமாக வீழ்ச்சி கண்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், மேற்படி நிறுவனத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்களிலும் ஏற்பட்டுள்ள பொது மக்கள் எதிர்ப்பு காரணமாக இந்த நிறுவனத்தின் பல்வேறு கிளைகள் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவரும் நிலையிலேயே இந்த நிறுவனம் இலங்கையை தனது மையமாகக் கொண்டு இந்தியாவின் சந்தையை நிலைநிறுத்தப் பாரக்கின்றது என்றும் தெரிய வருகிறது.

தற்போது எமது நாட்டிலும், நீர்த் தட்டுப்பாடு மிகவும் உக்கிரமடைந்து வரும் நிலையே காணப்படுகின்றது. மழை வீழ்ச்சியில் ஏற்படுகின்ற மாற்றங்களால் பயிர்ச் செய்கைகள் பாதிக்கப்பட்டும், குடி நீரின்றியும், நாளாந்தம் எமது மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வறட்சி காரணமாக வடக்கு – கிழக்கு உட்பட்ட கரையோரப் பகுதிகளில் உவர் நீர் புகுந்து, அப்பகுதிகள் உவர் நீர்த் தன்மை கொண்ட பகுதிகளாக மாற்றம் பெற்று வருகின்றன.

எனவே, கொக்கா கோலா நிறுவனத்தின்  உற்பத்தி மையம் இலங்கையில் அமைக்கப்படக்கூடிய சாத்தியக் கூறுகள் தொடர்பிலும், இந்திய சந்தையே மேற்படி நிறுவனத்தின் உற்பத்தி நோக்கம் எனில், எமது மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கே இங்கு நீரில்லாத நிலையில், இந்திய சந்தைக்குரிய கேள்விகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கான நீரினைப் பெற்றுக் கொள்வது எந்த வகையில் சாத்தியம் என்பதையும் தெளிவுபடுத்துமாறும் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊடகப் பிரிவு,

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி.

coca-cola-and-kelani-river

Related posts:

தமிழ் மொழியை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றிவரும் ஒரே தலைவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே - வலிகாமம் வடக...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் திருமலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் விஷேட கலந்தரையாடல்!
பொருத்தமான இடங்களில் மின் உற்பத்திக்கான சூரியகலன் தொகுதிககளை அமைப்பது தொடர்பாக மீள்புதுப்பிக்கத்தக்க...