நீதி கேட்டு போராடும் துணிச்சலை எமது மக்கள் மனதில் விதைத்தவர்கள் நாங்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.எடுத்துரைப்பு!

Tuesday, April 2nd, 2019

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நடத்தும் போராட்டம் நியாயமானது. அவர்களது போராட்டத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதே சிலரது விருப்பமாக இருக்கலாம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு, அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஆனாலும் அவர்களுக்கு நீதி வேண்டும் என்பது மட்டுமே எமது நிலைப்பாடு. எமது மக்கள் காணாமல் ஆக்கப்படும் போதும், கைது செய்யப்படும் போதும், அந்த அவலங்களை அடுத்தவன் வீட்டு பிரச்சினையாக புறந்தள்ளிவிட்டு, அம்புலி மாமா கதைகளும், ஆட்டுக்குட்டி கதைகளும் அளந்து கொண்டிருந்தவர்கள், யுத்தம் முடிந்தவுடன் மட்டும் புற்றீசல்கள் போல் புறப்பட்டு வந்து இன்று வாயால் வடை சுட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்காக அவர்களது உறவுகள் இந்த மண்ணில் இன்னமும் நீதி கேட்டு போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்றால், முதன் முதலில் இந்த மண்ணில் எமது மக்களுக்கு நீதி கேட்டு போராடும் துணிச்சலை வளர்த்தவர்கள் நாங்கள்.

1995 இல் யாழில் நடந்த சூரியக்கதிர் படை நடவடிக்கையின் போது பலநூறு பேர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்கள். அப்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை திரட்டி காணாமல் போனோர் பெற்றோர் பாதுகாவலர் சங்கம் அமைத்து தொடர் போராட்டங்களை நடத்தியவர்கள் நாங்கள்.

அது மட்டுமன்றி நாடாளுமன்றத்திலும் அதற்கெதிரான குரல்களை எழுப்பியவர்கள் நாங்கள். அதன் மூலம் அரசுக்கு அழுத்தம் கொடுத்தவர்கள் நாங்கள். சர்வதேசத்தின் மத்தியிலும் அம்பலப்படுத்தியவர்கள் நாங்கள். அத்தகைய எமது போராட்டங்களின் மூலம் அன்று காணாமல் போதல் மற்றும்  கைதுகளை முடிந்தளவு நாம் கட்டுப்படுத்தியிருந்தோம்.

அப்போதே அந்த போராட்டங்களுக்கு சக கட்சி தலைமைகளும் வலுச்சேர்த்திருந்தால், நீதி கூட  கிடைத்திருக்கும். அது மட்டுமன்றி இன்று நடக்கும் காணாமல் போன உறவுகளுக்கான போராட்டங்களுக்கும் இதுவரை நீதி கிடைத்திருக்கும்.

அன்று நாம் நடத்திய போராட்டங்களுக்கு வலுச்சேர்ப்பதற்கு மாறாக தமது அரசியல் ஆதாயங்களுக்காக அதை திசை திருப்பி சென்றவர்களே, இன்று வந்து நெருப்புக்கண்ணீர் விடும் எமது மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

வடக்கில், யாழ் கிருசாந்தி, புங்குடுதீவு சாரதாம்பாள், மற்றும் கிழக்கில் கோணேஸ்வரி என தொடர்ந்து பாலியல் வன்புணர்வுகளும் படுகொலைகளும் நடந்தேறிய போது, அவைகளுக்கு எதிராக இந்த நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி அவைகளை அம்பலப்படுத்தியவர்கள் நாங்கள். தொடர் பாலியல் வல்லுறவு படுகொலைகளை தடுத்து நிறுத்தியவர்கள் நாங்கள்.

இவைகளுக்கு எதிராக நாம் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த போது, தவிர்க்க முடியாமல் பங்கிற்கு தாமும் குரல் கொடுப்பதுபோல் இந்த சபையில் குரல் எழுப்பியவர்கள், தமது உரை முடிந்ததுதும், எந்த படையினரை சுட்டிக்காட்டி தமது உரையை நடத்தினார்களோ, அதே படைகளை வழிநடத்தும் பாதுகாப்புக்கு பொறுப்பானவர்களுடன்  நாடாளுமன்ற உணவு விடுதியில் கைகுலுக்கி, தாம் ஆற்றிய உரைக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்ட வெட்கம்  கெட்ட அரசியல் பிழைப்புகளையும் இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அவர்கள் இன்றும் இந்த சபையில் சாத்தான்கள் போல் வேதம் ஓதிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். காணாமல் போதல்களுக்கு காரணமானவர்களை சுட்டிக்காட்டுவதற்கு மாறாக, தமது அரசியல் காழ்ப்புணர்ச்சிகளின் காரணமாக அடுத்தவர்கள் மீது தொடர்ந்தும் பழிகளை சுமத்தி வந்ததாலுமே, எமது மண்ணில் உண்மையாகவே காணாமல் ஆக்கியவர்கள் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறார்கள்.  காணாமல் போதல்கள் நீடித்த துயர்களாகவும் இருந்து வந்திருக்கிறது.

Related posts:

மதச் சின்னங்களை மக்கள் மீது திணிக்காதீர்கள் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
யாழ். பல்கலையின் பணிகளுக்கு வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தோருக்கு முன்னுரிமை வழங்காமைக்கு காரணம் என்ன? ...
விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுபெற்றுத் தாருங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம்...

எனது கோரிக்கைகளை இந்தியா நிறைவேற்றித் தந்தது - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா M.P. தெரிவிப்பு!
கிளிநொச்சி மக்களை கொரோனா பாதிக்காத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ...
வடக்கில் கல்விச் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ள அமைச்சர்களான டக்ளஸ் த...