நிலையான பொருளாதார வியூகத்தின் பலவீனமே இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கு காரணம் – டக்ளஸ் எம்.பி நாடாளுமன்றில் சுட்டிக்காட்டு!

Thursday, October 11th, 2018

நாட்டின் பொருளாதார வியூகத்தின் பலவீPPனத் தன்மை காரணமாகவே அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி நாளுக்கு நாள் குறைந்து 172 ரூபாவினையும் இன்று கடந்து செல்கிறது. இந்த வருட இறுதிக்குள் இது 200 ரூபாவினை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றே கூற வேண்டியிருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற ஏற்றுமதிகள் மற்றும் இறக்குமதிகள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான 2 கட்டளைகள், இலங்கை ஏற்றுமதி சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த சுமார் 2008ஆம் ஆண்டு முதற்கொண்டு இந்த நாட்டில் தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் முகமாக கொள்கைகள் வகுக்கப்பட்ட போதும், ஏற்றுமதித்துறை தொடர்பில் உரிய அவதானங்கள் செலுத்தப்பட்டிருக்கவில்லை என்றே தெரிய வருகின்றது.

ஏற்றுமதியானது இந்த நாட்டில் அதிகரிப்பினைக் காட்டி வருவதாக அமெரிக்க டொலர்களில் எவரும் புள்ளிவிபரங்களைக் காட்டினாலும், இந்த நாட்டின் தேசிய வருமானத்தின் விகிதாசாரப்படி நோக்குமிடத்து இந்த நாட்டின் ஏற்றுமதித்துறையின் வீழ்ச்சி நிலையினை அவதானித்துக் கொள்ள முடியும்.

கடந்த வருடத்தை எடுத்துக் கொண்டால், ஏற்றுமதி வருமானம் சற்று கூடிய அதிகரிப்பினைக் காட்டுகின்றபோது, மறுபக்கத்தில் இறக்குமதி செலவீனம் வெகு துரித அதிகரிப்பினை எட்டியிருந்தது. அதாவது, ஏற்றுமதி வருமானம் 11 அமெரிக்க டொலர் பில்லியன் என்கின்றபோது, இறக்குமதி செலவீனம் 20 அமெரிக்க டொலர் பில்லியனாகி, ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையிலான வித்தியாசம் 9 அமெரிக்க டொலர் பில்லியன்களைக் காட்டியிருந்தது.

எனவே, எதிர்காலத்தில் மேம்படுத்திக் கொள்ளத்தக்க ஏற்றுமதித் துறைகள் எவை என்பது தொடர்பில் இந்த நாடு இனங்காண வேண்டியத் தேவையே இன்று முக்கியமானது என்று கருதுகின்றேன்.

அதனுடன், எதிர்காலத்தில் மேம்படுத்தக் கூடிய சேவைகள் தொடர்பிலும் அதிக அவதானத்தைச் செலுத்த வேண்டும். இதன்போது, கணனித் தொழில்நுட்பத்துடன் இணைந்த ஏற்றுமதிக்குரிய சேவைகள் தொடர்பில் அதிக அவதானங்களைச் செலுத்துவது மிகவும் நன்மையாகும் என்றே குறிப்பிட வேண்டும்.

வர்த்தக ஒப்பந்தங்களின் ஊடாக வெளிநாடுகளில் இலங்கை ஏற்றுமதியாளர்கள் முகங்கொடுக்கின்ற வர்த்தகத் தடைகள் தொடர்பில் அவதானங்களைச் செலுத்தி, அத் தடைகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பது ஒரு நல்ல முயற்சியாகும். என்றாலும் இத் தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தொடர்பிலான உள்நாட்டுக் காரணிகள் தொடர்பிலும் அவதானங்களை செலுத்த வேண்டியது முக்கியமாகும் என்பதை செயற்பாட்டு ரீதியாக நிரூபிப்பதற்கும் இந்த அரசு ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

Related posts:

தனியாரால் அபகரிக்கப்பட்ட “பாடுகளை” மீளவும் பெற்றுத்தாருங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கச்சாய...
அரசியல் நோக்கத்திற்காக 13 ஐ பயன்படுத்தி குழப்பம் விளைவிக்கின்றனர் - நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் சா...
கடற்றொழிலாளர்களின் எரிபொருள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - 21 ஆம் திருத்தச் சட்டத்தினால் 13 ஆம் தி...