நிலைமாற்று நீதியை நிலைநாட்டுவது அரசின் கடப்பாடாகும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Thursday, March 21st, 2019

இன்று ஜெனீவா விவகாரமானது, இந்த நாட்டு தமிழ் – சிங்கள அரசியல் மேடையில்  இலவச சந்தைப் பொருளாக்கப்பட்டுள்ளது. பொருட்களுக்கான விலைகள் அதிகரித்து வருகின்ற நிலையிலும், வரிச் சுமைகள் அதிகரித்து வருகின்ற நிலையிலும், இந்த நாட்டு மக்களுக்கு இன்று இலவசமாக – அதுவம் மிக இலகுவாகக் கிடைக்கின்ற சந்தைப் பொருளாக இந்த விவகாரம் மாற்றப்பட்டுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற ஆரம்பக் கைத்தொழில், சமூக வலுவூட்டல் அமைச்சு, பொது வழங்கல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு பற்றிய அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சு, விசேட பிரதேசங்கள் அபிவிருத்தி பற்றிய அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

யுத்தம் மற்றும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிலைமாற்று நீதியை நிலைநாட்டுவது இந்த நாட்டு அரசின் கடப்பாடாகும். மனமிருந்தால் இடமிருக்கும் என்பார்கள். இந்த நாட்டில் வலிந்து காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பிலான அலுவலகம் அமைப்பதும், இழப்பீட்டு அலுவலகம் அமைப்பதும், விரைவானதாகவும், அர்த்தமுள்ளவகையிலும், பாதிக்க்பபட்ட மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதாகவும், உண்மைகளைக் கண்டறிவதாகவும் அமையவேண்டும்.

அழுதும் பிள்ளையை அவளே பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது போல், எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ள வேண்டும். சர்வதேச நாடுகள் வேண்டுமென்றால் ஒரு பிள்ளைப் பிரசவித்தின்போது மருத்துவிச்சியின் பங்களிப்பு போல், பங்களிப்புகளை செய்யமுடியும். பிள்ளை பெற வேண்டியவளை ஒரு பக்கமாக ஒதுக்கித் தள்ளிவிட்டு, அந்தப் பிள்ளையை மருத்துவிச்சியினால் பெற்றுக் கொடுக்க முடியாது  என்பதையே இந்த விடயத்தில் நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.

இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அனைத்து இனங்களுக்கிடையிலான மோதல்கள், அரசியல் காரணங்களுக்கான மோதல்கள், மதங்களுக்கிடையிலான மோதல்கள், சமூகங்களுக்கிடையிலான மோதல்கள் தொடர்பில் பக்கச் சார்பற்ற, நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, உண்மைகள் வெளிப்படுத்தப்படல் வேண்டும் என்பதையே நாம் தொடர்ந்தும் வலியுறுத்துகின்றோம்.

Related posts:

இலங்கையின் மிக உயரமான மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் சிற்பத் தேர் கட்டுமாணங்களை செயலாளர் நாயகம் ட...
சங்கு மற்றும் மட்டி பதனிடும் தொழில் நிலையத்தினை உருவாக்கித் தாருங்கள் - தேவன்பிட்டி மாதர் அமைப்பின...
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - புங்குடுதீவு இறுப்பிட்டி கேரதீவு ஊடான போக்குவரத்து சேவை 35 வருடங்களின் ...