நிர்வாகத்துறை முடக்கப்பட்டால் வளங்களை தொல்பொருள் துறை ஆக்கிரமிக்கும் ஆபத்து – எச்சரிக்கிறார் டக்ளஸ் எம்.பி.!

Tuesday, March 26th, 2019

இலங்கையின் கடவுச் சீட்டுகளைக் கொண்ட, இரட்டை பிரஜாவுரிமையுள்ள புலம்பெயர் எமது நாட்டு மக்களுக்கு இலங்கைத் தேர்தல்களில் வாக்களிக்கின்ற உரிமைக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான வழிவகைளை உருவாக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெற்ற வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு, உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

புலம்பெயர் எமது மக்களின் மொழி, கலை, கலாசார விழுமியங்களைப் பேணிப் பாதுகாக்கக்கூடிய வகையில் அந்தந்த நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரங்களில் ஒரு தனிப் பிரிவு உருவாக்கப்பட்டு, அதன் ஊடாக எமது பிரதேச உற்பத்திகளின் நுகர்வுகள் தொடர்பிலான ஊக்குவிப்பினை மேற்கொள்ளும் வகையிலும், பிரதேச ரீதியிலாக ஏற்படக்கூடிய பிரச்சனைகளைத் தீர்க்கக்கூடிய வகையிலான ஆலோசனைகள் – வழிகாட்டல்களை மேற்கொள்கின்ற வகையிலும் செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடிய வகையில் ஓர் ஏற்பாடு முன்னெடுக்கப்படல் வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த நாட்டில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அடைந்து வருகின்றதாக அரச தரப்பினர் கூறுகின்ற நிலையில், நேற்றைய தினம் தென்பகுதியிலே உல்லாசப் பிரயாணத்துறை சார்ந்த ஹோட்டல்கள் மிக அதிகமாக மூடப்பட்டு வருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஓர் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சுற்றுலாத்துறை அதிகளவில் முன்னேறி வருகின்றதெனில், இவ்வாறு ஹோட்டல்கள் மூடப்பட வேண்டிய அவசியங்கள் இருக்காது என்றே எண்ணுகின்றேன்.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடியதான பல்வேறு இடங்கள் மற்றும் விடயங்கள் இருந்தும் அத்துறை சார்ந்த அபிவிருத்திகள் இல்லாமை காரணமாக அவை அப்படியே தொல்பொருட்களைப் போல் காட்சியளிக்கின்றன. இப்படியே போனால் அவற்றை தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமித்துக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றே கூற வேண்டும்.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், இலங்கையின் பிற பகுதிகளிலிருந்து வருகைத் தருகின்றனவர்கள், இலங்கையின் பிற பகுதிகளிலிருந்து வருகைத் தருகின்ற சுற்றுலாப் பயணிகள், பிற நாடுகளிலிருந்து வருகை தருகின்ற சுற்றுலாப் பயணிகள், பிற நாடுகளிலிருந்து வருகை தருகின்ற எமது புலம்பெயர் உறவுகள் என நான்கு வகைப்பட்டவர்களது வருகைகள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில் இந்த நான்கு பிரிவினரையும் கவரக்கூடிய வகையில், அங்கு வாழுகின்ற எமது மக்களது மொழி, கலை, கலாசார, பண்பாட்டு விடயங்களை கருத்திற் கொண்டதாக சுற்றுலாத்துறை விருத்தி பெறுமானால், இலங்கை சுற்றுலாத்துறை வருமானத்தில் கணிசமானளவு பங்களிப்பினை வடக்கு மாகாணத்தால் ஈட்டிக் கொடுக்க முடியும்.

குறிப்பாக, வரலாறு சார்ந்த முக்கிய இடங்கள், கடல் சார்ந்த இயற்கை இடங்கள், குளம் சார்ந்த இயற்கை இடங்கள், சரணாலயங்கள், மதங்கள் சார்ந்த தலங்கள் என சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய பல இடங்கள் வடக்கு மாகாணத்திலே எமது மக்களைப் போலவே கைவிடப்பட்ட நிலையிலேயே இருக்கின்றன. இவை மேம்படுத்தப்பட்டு, நவீன வசதிகளுக்கு உட்படுத்தப்படுவதன் ஊடாக வடக்கின் சுற்றுலாத்துறையை விருத்தி செய்ய முடியும்.

Related posts: