நிர்வாகக் கட்டமைப்புகள் தொடர்பில் பெண்கள் அதிக ஈடுபாடுகளைக் கொள்வதற்கு  உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, November 29th, 2016

எமது நாட்டைப் பொறுத்த வரையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மகளிரின் பங்களிப்புக்கள் – சேவைகள் அடிப்படையில் பாரியளவில் இருப்பதை மறுக்க முடியாதுள்ளது. அந்த வகையில், வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள், பெருந் தோட்டத்துறை, ஆடைத் தொழிற்சாலைகள் என மகளிரின் சேவைகள் தொடர்பிலான பங்களிப்புகளே அதிகமாகக் காணப்படுகின்றன என்பதை நான் இங்கு அவதானத்தில் கொண்டுவர விரும்புகின்றேன். அதே நேரம், இந்த மகளிரின் பங்களிப்புக்கள் நாட்டின் ஏனைய நிர்வாகக் கட்டமைப்புகளில் அதிகமாகக் காணப்படுவதில்லை என்றே தெரிய வருகிறது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் செலவுத் திட்டம் தொடர்பிலான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு, நாடாளுமன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

1931ம் ஆண்டு சர்வசன வாக்குரிமையின் அடிப்படையில் ஒரு பெண் பிரதிநிதி தெரிவான நிலையில், 1977ஆம் ஆண்டு 168 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 11 பெண் உறுப்பினர்கள் உள்ளடங்கியிருந்தனர். கடந்த 2015ம் ஆண்டு பொதுத் தேர்தலில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவான நிலையில் 13 பெண் உறுப்பினர்களே உள்ளடங்குகின்றனர்.

அதாவது, இன்று நூற்றுக்கு 5.8 வீதமான பெண்களே நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர். எமது நாட்டில் மகளிர் பற்றிய ஆய்வுகளைச் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் அடிக்கடி நடத்துகின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில், தமக்குச் சட்டத்தில் இடமில்லை எனப் பல பெண்கள் கூறி வருவதாகவும், உள்ளூராட்சி சபைகள் பற்றிக்கூட பல பெண்கள் அறியாமல் இருப்பதாகவும் தெரிய வருகிறது.

அந்த வகையில், 1946ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட உள்ளூராட்சி சபைத் சட்டத்திற்குத் தற்போது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதால், இவ்வாறான துறைகள் உட்படப் பல்வேறு நிர்வாகக் கட்டமைப்புகள் குறித்து மகளிருக்கு தெளிவுபடுத்துக் கூடிய விழிப்புணர்வுத் திட்டங்களை ஏற்படுத்துவதற்கும்,

நிர்வாகக் கட்டமைப்புகள் தொடர்பில் பெண்கள் அதிகமான ஈடுபாடுகளைக் கொள்வதற்கு  உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும், இந்த அமைச்சு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அதே நேரம், கடந்தகால யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது சுமார் 80,000க்கும் மேற்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

இவ்வாறு குடும்பங்களைத் தலைமையேற்று வாழ்ந்து வருகின்ற பெண்கள், சமூகப் பாதுகாப்பின்மை காரணமாகவும், சமூக வழிகாட்டல்கள் ஒழுங்குற இல்லாத நிலையிலும், பாரிய பொருளாதார நெறுக்கடிகளுக்கு மத்தியிலுமே வாழ்ந்து வருகின்றனர் என்பதை நான் மீண்டும் இந்தச் சபையில் வலியுறுத்த விரும்புகின்றேன்.

எனவே, இந்தப் பெண்களுக்குச் சமூகப் பாதுகாப்பை உரிய முறையில் வழங்குவதற்கும், உரிய முறையில் ஒழுங்கான சமூக வழிகாட்டல்களை மேற்கொள்வதற்கும்,

அதே நேரம், தற்போதுள்ள அரச நிவாரணத் திட்டங்களால் அப் பெண்களது பொருளாதாரப் பிரச்சினைகளை உரிய முறையில் – போதிய அளவு தீர்க்க முடியாது என்பதால், இந்தப் பெண்களது பொருளாதார நிலையைப் போதிய அளவில் உயர்த்தும் நோக்கில் ஒரு விN~ட திட்டமொன்;றை வகுத்து, அதனை நடைமுறைப்படுத்துவதற்கும்,

அத்துடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்ற புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளிகள் தொடர்பில் விN~ட அவதானம் செலுத்த வேண்டியுள்ளதை நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

இவர்களுக்கும், குடும்பங்களைப் பொறுப்பேற்றுள்ள பெண்களுக்கும் இயலுமான வரையில் இவர்களது தகைமைகளுக்கு ஏற்ற வகையில் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும், சுய தொழில் முயற்சிகளின்பால் இவர்களை ஈர்த்து, அதற்கான உதவிகளை மேற்கொள்வதற்கும்,

சமூகத்தில் உரிய பாதுகாப்பு விழிப்பூட்டல்களை மேற்கொண்டு, சமூகத்தில் அவர்களது கௌரவத்தை நிலை நிறுத்துவதற்கும்,

அதே நேரம், பல்வேறு சமூகக் குற்றங்கள் தொடர்பில் சிறைத் தண்டனைகளை அனுபவித்து வருகின்ற பெண்களில் பலரும் சமூகத்தில் உரிய வரவேற்புகளைப் பெறக் கூடியவர்களாக இல்லாத நிலையில், அவர்களைப் பராமரிப்பதற்கான கட்டமைப்புகள் இருந்தும், அது தொடர்பில் உரிய தெளிவின்மைகள் காரணமாக, அப் பெண்கள் இந்த வாய்ப்புகளைத் தவறிவிடுகின்ற நிலையும் காணப்படுகிறது.

எனவே, இது தொடர்பில் உரிய விழிப்பூட்டல்களை மேற்கொள்வதற்கும்,

உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கௌரவ அமைச்சர் சந்திராணி பண்டார அவர்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.

கடந்த காலத்தில் மகளிர் விவகாரங்கள் தொடர்பிலான அமைச்சுப் பொறுப்பினை ஒரு பெண் அல்லாதவர் வகித்ததாலோ – பெண்கள் தொடர்பிலான பல பிரச்சினைகள் தீரக்கப்படாத நிலை காணப்படுகின்றது எனத் தெரியவரும் நிலையில், தற்போது தாங்கள் அதற்குப் பொறுப்பான அமைச்சராக நியமனம் பெற்றிருப்பது தொடர்பில் எனது வாழ்த்துக்களை இந்தச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

அதே நேரம், வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த வரையில் கல்வி கற்க முடியாத நிலையில் சிறுவர்கள் பலர் காணப்படுகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் 1989ம் ஆண்டு சிறுவர் உரிமைகள் பற்றிய கொள்கையானது, 18 வயதுக்கு உட்பட்ட அனைவரும் சிறுவர்களே எனக் குறிப்பிட்டுள்ள நிலையில், இவ் வயது எல்லைக்கு உட்பட்ட பல சிறுவர்கள் அப் பகுதிகளில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து, பல்வேறு சமூக விரோதச் செயற்பாடுகளின்பால் ஈர்க்கப்படுகின்ற வகையிலான ஒரு நிலையைக் காணக்கூடியதாக இருக்கிறது.

அதே நேரம், வறுமை நிலை காரணமாகப் பல சிறுவர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையும் நாட்டில் காணப்படுகின்றது. இந்த நிலையிலும் மாற்றங்கள் கொண்டுவர வேண்டிய தேவை இருக்கிறது. இவ்வாறான குடும்பங்களை இனங்கண்டு, அவற்றின் வாழ்வாதாரங்களுக்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கின்ற அதே நேரம், இந்தச் சிறுவர்களை கல்வியின்பால் கொண்டு வரத்தக்க எற்பாடுகளும் தேவை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எனவே, இவர்களை இந்த சமூகச் சீர்கேட்டு விடயங்களின்பால்; தள்ளாத வகையிலும், தொழில்த் துறைகளின் செல்லச் சந்தர்ப்பங்கள் எற்படாத வகையிலும் அவர்களை நேர்வழிப்படுத்தி, கல்வியின்பால் ஆர்வங் காட்டக்கூடிய வகையிலான ஒரு விழிப்புணர்வுத் திட்டத்தை இந்த அமைச்சும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

அதே நேரம், இந்த நாட்டில் காணப்படுகின்ற பல சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படாத நிலையில், கவனிப்பாரற்ற நிலையிலேயே காணப்படுவதால் இது தொடர்பிலும் கௌரவ அமைச்சர் அவர்கள் உரிய அவதானம் செலுத்த  வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

Untitled-2 copy

Related posts: