நியாயமான போராட்டத்தின் மூலம் பெறப்பட்ட மாகாண சபை முறைமை நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் ஆட்சியின் கீழேயே கொண்டுவரப்பட்டது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Thursday, October 22nd, 2020

எமது அர்ப்பணத்துடன்கூடிய நியாயமான போராட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட மாகாண சபை முறைமைக்கு வழிகோலும் 13 வது திருத்தச் சட்டமானது, அன்று ஆட்சியில் இருந்த பிரதமர் உள்ளடங்கலான பிரபல தலைவர்களதும், எதிர்க்கட்சியினதும் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், அதற்கெதிரான தென்பகுதியின் ஆயுதமேந்திய வன்முறைகளுக்கு மத்தியிலும், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாபதியின் ஆட்சியின் கீழேயே கொண்டுவரப்பட்டது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்’து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

அன்றைய அதே பிரதமர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியானதும், அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டிருந்த இந்திய சமாதானப் படையினர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

நாடாளுமன்ற மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களுக்கான வெட்டுப் புள்ளியானது 12 விகிதத்திலிருந்து 5 விகிதம் வரையில் குறைக்கப்பட்டதும் சிறுபான்மை கட்சிகளினது பிரதிநிதித்துவம் அதிகரிப்பதற்குமான சந்தர்ப்பம் வழங்கப்பட்டதும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியின் போதாகும்.

தமிழர் வரலாற்றில் மாபெரும் போராட்டங்களில் ஒன்றாக சித்தரிக்கப்படுகின்ற ஸ்ரீ எதிரப்புப் போராட்டத்தினாலும் அகற்றப்படாது போயிருந்த வாகனங்களில் காணப்பட்ட ஸ்ரீ எழுத்து ஒரே இரவில் அகற்றப்பட்டதும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினால் ஆகும்.

அளுத்கம பகுதியில் சகோதர முஸ்லிம் மக்களது உடமைகள் அழிக்கப்பட்டு, வன்செயல்கள் பாரியளவில் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த சமயத்தில் வெளிநாட்டிலிருந்த அப்போதைய ஜனாதிபதி மதிப்பிற்குரிய மகிந்த ராஜபக்ச அவர்கள் உடனடியாக நாடு திரும்பி, ஒரே இரவில் அந்த வன்செயல்களைக் கட்டப்படுத்த கட்டளையிட்டதும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சியின் போதாகும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை உள்ளிட்ட 1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு மசோதா தொடர்பில் இந்தச் சபையிலே அன்று கருத்துத் தெரிவித்திருந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் அண்ணர் அவர்கள், ‘இந்தப் புதிய அரசியலமைப்பு மசோதாவிலுள்ள ஏற்பாடுகள், கடந்த 22 வருடங்களாக இருந்த நிலையைவிட சற்று முன்னேற்றகரமானது என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன்’ எனத் தெரிவித்திருந்தார்.

அவர் மட்டுமல்லாமல், தமிழ், முஸ்லிம் மக்களது தலைவர்களான அமரர்களான கௌரவ சௌயமியமூர்த்தி தொண்டமான், கௌரவ எம். எச். எம். அஷ்ரப் ஆகியோரும் தெட்டத் தெளிவாகவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஏற்றிருந்தனர்.

20வது திருத்தச் சட்டம் தொடர்பில் சாதகமான அல்லது பாதகமான கருத்துக்கள் இருப்பின் அவற்றை முறைப்படி முன்வைப்பது வரவேற்கத்தக்கது. அதைவிடுத்து, இதை ஒரு மாபெரும் பயங்கரத் திட்டமாக சித்தரித்து, மக்கள் மத்தியில் ஒரு மாயையை ஏற்படுத்துவது அவர் அவர்களது தனிப்பட்ட, சுயலாப நிகழ்ச்சி நிரலையே எடுத்துக் காட்டுவதாக அமைகின்றதுஎன்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts:

முப்படைகளுக்குமான ஆளணியின்போது இன விகிதாசாரம் பேணப்பட வேண்டும் -  நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வல...
இலங்கை போதைப் பொருள் கடத்தல் நாடாக மாற்றியிருக்கின்றதா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!
தேசிய பாடசாலையாக பளை மத்திய கல்லூரி அங்குரார்ப்பணம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பிப்பு!