நித்திய வெளிச்சத்தில் தேசம் விடியட்டும் – நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, December 25th, 2018

உலகத்தின் ஒளியாக கருணை மைந்தன் யேசுபாலன் பிறப்பெடுத்து வந்த  நத்தார் தினத்தின் வருகை நித்திய வெளிச்சத்தை தேசமெங்கும் பரப்பட்டும் என  ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நத்தார் தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த செய்தியில் –

இது எமக்கென்று வாக்களிக்கப்பட்ட பூமி. அதன் உரிமையை வெல்லும் திசை நோக்கி மக்களை வழிநடத்திசெல்லவே  நாம் இந்த பூமிக்கு வரவழைக்கப்பட்டவர்கள். எமது நிலங்கள் எமது மக்களுக்கே சொந்தம். எமது மக்களின் மனங்களில் நித்திய மகிழ்ச்சியும், எமது வரலாற்று வாழ்விடங்கள் தோறும் நிரந்தர சமாதானமும் நீடித்து நிலவ வேண்டும்.

எமது மக்களின் நியாயமான உணர்வுகளுக்காக நாம் என்றும் பரிசுத்தமாகவே உழைத்து  வருகின்றோம்.

ஆகவேதான்,..  துயரச்சிலுவைகளை எமது மக்கள் சுமந்து நடந்த இரத்தப்பலிகளுக்கு மத்தியிலும் எமது மக்களுடனேயே நாமும் இடையறாது வாழ்ந்து வந்திருக்கிறோம்.

முட்களிலும் கற்பாறைகளிலும் நடந்து வந்து வதைபட்ட  எமது மக்களின் பாதங்களின் வலிகள் தடவி,.. பசுந்தரையின் பாதை நோக்கி அவர்களை  அழைத்துவர நாம் அயராது உழைத்து வந்திருக்கிறோம்.

எமது மக்களை நேசித்து நாம் கட்டியெழுப்ப நினைக்கும் சமத்துவ  சாம்ராச்சிய கனவுகளுக்காக,.. நாம் கொண்டிருக்கும் கருத்துக்களும், கொள்கைகளும், அதற்கான  யதார்த்த பூர்வமான நடைமுறைகளும்,  எமது தீர்க்கதரிசனங்களும் மழை நீரால் அரித்துச் செல்லப்படும்  மணல் மீது இடப்பப்பட அத்திவாரங்கள் அல்ல.

மாறாக எந்த காட்டாற்று வெள்ளத்தாலும் அசைக்க முடியாத  கல்மலை மீதுதே எமது கொள்கைகளின் அத்திவாரங்களை  நாம் கட்டியெழுப்பியிருக்கின்றோம்.

புறாக்களைப்போல் கபடமில்லாமலும்,. சர்ப்பத்தைப்போல்  கேள்வியுள்ளவர்களாவும் எமது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அப்போதுதான் இனி வரும் காலம் நல்ல கனிதரும் காலம் என்ற  நம்பிக்கைகளை வெல்ல முடியும்.

நாம் சொல்லும் கருத்துக்கள் சத்திய வாக்குகள் போன்றவை. வானமும் பூமியும் ஒழிந்து போனாலும்
நாம் கொண்டிருக்கும் கருத்துக்களும் எமது வழிமுறைகளும் ஒரு போதும் தோற்காது.

எமது தீர்க்கதரிசனங்களும், நம்பிக்கை தரும் சாத்தியமான எமது வழிமுறைகளுமே இன்று எல்லோராலும் ஏற்கப்பட்டு  வெல்லப்பட்டும் வருகின்றன.

நிரந்தர சமாதானம்,. நீடித்த சமவுரிமை,.. வரலாறெங்கும் துயரச்சுமைகளை சுமந்த எமது மக்களுக்கு ஒரு நியாயத்தீர்ப்பு,… பஞ்சம்,. பசி,..பட்டினி இல்லாத,..  எமது சொந்த நிலங்களை இழந்து வாழும் துயர்கள் இல்லாத,.. எவரையும் எவரும் அடிமைகள் என்று கொள்ளாத,.. யாரும் சிறைகளில் வாடும் கொடுமைகள் இல்லாத, அபிவிருத்தி இல்லையென்ற அழுகுரல்கள் கேட்காத புதியதொரு சமாதான இராட்சியத்தையே நாம் விரும்புகின்றோம். இவைகளே எமது மக்களின்  ஆழ்மன விருப்பங்களும் ஆகும்.

ஆனாலும் எமது மக்களின் விருப்பங்கள் யாவும் வெறும் கற்பாறைகளில் மட்டும் விதைக்கபட்ட விதைகளாகவே இருந்து வந்திருக்கின்றன.

நிரந்தர சமாதானத்தை நோக்கிய எமது மக்களின் விருப்பங்கள் யாவும் சாத்தான்களின் தடைகளால் நிறைவேறாத கனவுகளாகவே இன்று வரை முடங்கிப்போயிருக்கின்றன.

எமது நிலத்தில், இனி எமக்கு மக்கள் வழங்கும் ஆணையின் பலத்தில்  ஒளி பிறந்த தேசமாக எமது சொந்த பூமியை மாற்றிட உறுதி கொண்டு எழுவோம்..

இவ்வாறு தனது நத்தார் தின வாழ்த்து செய்தியில் தெரிவித்திருக்கும்  ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலார் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்  பிறந்திருக்கும் நத்தார் தினத்தை நம்பிக்கையோடு கொண்டாடி மகிழ்வோம்  என்றும் தெரிவித்துள்ளார்.

Website-2-1024x576

Related posts:

அரிசி தட்டுப்பாடு பற்றிய வாதப் பிரதிவாதங்களைவிட விவசாயிகளுக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள முன்வர வே...
பொருளாதார ஈட்டல்களுக்கான வாய்ப்புகளை தடுக்க வேண்டாம் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தோவானந்த...
சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தினால் இன்னல்கள் களையப்படும் என்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!