நாம் மக்களுக்காகவே அரசியலை முன்னெடுத்துவருகின்றோம் – முகமாலையில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Friday, February 15th, 2019

அழிவு யுத்தத்திற்கு முகம் கொடுத்த எமது மக்களைப் பாதுகாத்து அவர்களுக்கு சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுத்ததுடன் அரசியலுரிமையையும் வென்றெடுத்துக் கொடுப்பதற்காகவே நாம் அரசியலை முன்னெடுத்து வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இன்றையதினம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முகமாலை வடக்கு பகுதியில் மக்கள் குறைகேள் நிகழ்வொன்றை மேற்கொண்டிருந்தார். மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிந்து கொண்ட பின் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட எமது பிரதேச மக்களிடம் பல தேவைப்பாடுகள் காணப்படுகின்றன. ஆனால் அவை முழுமையாகப் பெற்றுக் கொடுக்கப்படாத நிலையே காணப்படுகின்றது. ஆனால் அத்தகைய வறிய நிலையில் வாழும் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் எதுவிதமான தேவைப்பாடுகளும் இதுவரை பெற்றுக் கொடுக்கப்படாதிருப்பது அவர்களது கையாலாகாத்தனமாகவே பார்க்கப்படுகிறது.

வெறுமனே தேர்தல் வெற்றிக்காகவும் அரசியல் சுகபோகங்களுக்காகவும் அரசியல் செய்பவர்கள் நாங்களல்ல. நாங்கள் மக்களின் வலிகளை உணர்ந்தவர்கள். அந்தவகையில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதற்காகவே நாம் அர்ப்பணிப்புடன் அரசியல் செய்து வருகின்றோம்.

இந்தப் பகுதி ஒரு மீள்குடியேற்றப்பட்ட பகுதியாகக் காணப்படுவதால் இப்பகுதி மக்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு நாளாந்தம் முகம்கொடுத்து வருகின்றனர். இவற்றிற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க நாம் முடியுமானவரை முயற்சிகளை மேற்கொள்கின்றோம்.

அந்தவகையில் மக்களுக்காகவே எமது அரசியல் பயணம் முன்னெடுக்கப்படுவதால் இவ்வாறான பிரச்சினைகளுக்கு மட்டுமல்லாது அரசியலுரிமைக்கான பிரச்சினைக்கும் எம்மால் தீர்வு பெற்றுத் தரமுடியும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. ஆனால் அதற்கான அரசியல் பலம் எம்மிடம் போதாதிருக்கின்றது. இனிவரும் காலங்களில் மக்கள் எம்மிடம் அரசியல் பலத்தை தருவார்களேயானால் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வை மிகவிரைவில் எம்மால் பெற்றுத் தரமுடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இப்பகுதி மக்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளாக குடிநீர் வசதியின்மை, மலசலகூடம், வீட்டுத்திட்டம், வாழ்வாதார தேவைப்பாடுகள் பல உள்ளிட்ட பிரச்சினைகளுடன் வாழ்ந்து வருவதாகவும் இவற்றிற்கான தீர்வைப்பெற்றுத்தருமாறும் டக்ளஸ் எம்.பியிடம்  கோரிக்கைவிடுத்திருந்தனர். மக்களது பிரச்சினைகளை கருத்திற் கொண்ட செயலாளர் நாயகம் அவற்றிற்கான தீர்வைப் பெற்றுத் தருவதாக கூறியமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகச் செயலாளர் வை. தவநாதன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் உடனிருந்தனர்.  

 

Related posts:

நாச்சிக்குடா புனித யாகப்பர் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட...
இலங்கை தமிழர் தொடர்பாக சர்வதேச தளத்தில் இந்தியாவின் பரிந்துரை வரவேற்கத்தக்கது - அமைச்சர் டக்ளஸ் கிளி...
அச்சுறுத்தலுக்காக முடங்கி இருக்க முடியாது - வளங்களை ஒருங்கிணைக்க வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் !