நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஆணைக்குழுக்கள் அமைக்கப்ப டுகின்றன என்றால்  நாட்டைக் கெடுப்பவர்கள் யார்? -டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, November 17th, 2017

நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன என்றால்  நாட்டைக் கெடுப்பவர்கள் யார்? என்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி முன்னிலையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் அடங்கலாக 24 நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதி மைத்திரிபாலவும் நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகி இருந்து உரைகளைக் கேட்டுக்கொண்டிருக்கையில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரித்துள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய செயலாளர் நாயகம் அவர்கள்,

சுயாதீன ஆணைக்குழுக்களின் தேவை என்ன? என்ற கேள்வி எழுகின்றபோது, நாட்டை நல்ல முறையில் கட்டியெழுப்புவதற்காக! என்றொரு பதிலும் கிடைக்கின்றது. அப்படியானால், நாட்டைக் கெடுப்பவர்கள் யார்? என்றொரு கேள்வி எழுகின்றது! அதற்கு அரசியல்வாதிகள் என்றொரு பதிலும் முன்வைக்கப்படுகின்றது. இந்த அரசியல்வாதிகள் யார்? தேர்தல்களில் மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற மக்களது பிரதிநிதிகள் என்பதே இதற்கான பதிலாகும். தேர்தல் என்பது எமது நாட்டில் ஜனநாயகத்தைப் பலப்படுத்துகின்ற ஒரு முறைமையாக இருக்கின்றது.

மக்களால் கோரப்படுகின்ற அனைத்தையும் அரசியல்வாதிகளால் சுயாதீனமாக மேற்கொள்ள முடியாது என்ற நிலையிலேயே சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர். இவ்வாறு மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்து கிடைப்பதில்லை எனக் கருதப்படுகின்ற சுயாதீனமானது, அதிகாரிகளின் மூலமாக மக்களுக்கு நியாயமான முறையில் கிட்டுமா? என்பதுவும் ஒரு சாரார் மத்தியில் நிலவுகின்ற கேள்வியாகவே இருக்கின்றது.

இந்தக் கேள்வி எழுவதற்குக் காரணமாக, அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு தொடர்பிலான விடயம் முன்வைக்கப்படுகின்றது. இந்த மூன்று கைதிகளின் வழக்கு வவுனியா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்துள்ள நிலையில், சாட்சிகளின் பாதுகாப்பு கருதி என்கின்ற காரணத்தைக் காட்டி, இந்த வழக்கினை அனுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றுகின்ற விடயம் குறித்தே இத்தகையதொரு நிலை எமது மக்களிடையே எழுந்துள்ளது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின்போது, ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும், விசாரணை மேற்கொள்ளப்படுகின்ற கட்டிட வளாகத்திற்கும், சாட்சிகளுக்கும், சாட்சிகளின் குடும்பங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படுகின்ற நிலையில், மேற்படி மூன்று தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான வழக்கின் சாட்சிகளுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு வழங்க முடியாதா? பாரபட்சங்கள்… புறக்கணிப்புகள், தவறுகள்… எங்கிருந்து ஏற்படுகின்றன? ஏன்?.. என்றே கேட்கத் தோன்றுகின்றது.

அரசியல்வாதிகள் சுயாதீனமாக செயற்படுவதில்லை என்ற நிலையிலேயே சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற நிலையில், ஸ்தாபிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் மீது அரசியல் அழுத்தங்கள் செலுத்தப்படுகின்றனவா? என்ற கேள்வியும், செலுத்தப்படுகின்றன என்றால், பிறகேன் இந்த சுயாதீன ஆணைக்குழுக்கள்?… என்ற கேள்வியும் எழாமல் இருக்க வழியில்லை.

எமது நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்பிருந்த நிலைமைகளையும், சுயாதீன ஆணைக்குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இன்றுள்ள நிலைமைகளயும் ஒப்பிட்டுப் பாரக்க வேண்டும்.

மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா?… அந்த மாற்றங்கள் எமது மக்களுக்கு என்னென்ன பயன்களை அளித்துள்ளன?.. என்பவை தொடர்பில் முன்னேற்ற  விபரங்கள் ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டும். அவ்வாறின்றி, ஸ்தாபித்தோம், கைவிட்டோம் என்ற நிலை இருக்குமானால், மேலும், மேலும் மக்களது நிதியையே நாம் வீண் விரயம் செய்து வருகின்றமைக்கு ஆட்பட்டு விடுவோம்.

‘சுயாதீன ஆணைக்குழுக்கள் அரசியலில் இருந்து விலகி செயற்பட வேண்டும். நீதி, நியாயம், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் முறையாகப் பேணப்படுவது முக்கியமாகும். சட்டம் அனைவருக்கும் சமமாக இருப்பது அவசியமாகும்’ என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வலியுறுத்தியுள்ளமையை இங்கு மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

Related posts:


வடக்கின் நீர்நிலைகளை ஆழமாக்கி நீர்வாழ் வளங்களை அதிகரிக்க நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆ...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய உறுதி மொழியை அடுத்து டிக்கோவிற்ற கடற்றொழிலாளர்களின் போராட்டம் கைவி...
யாழ் மாவட்ட நிலைமைகள் தொடரில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரைய...