நாட்டுக்கு தேசிய பொருளாதார கொள்கை அவசியம் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Tuesday, October 9th, 2018

‘முதற் கோணல் முற்றிலும் கோணல்’ என்பதுபோல் இந்த நாட்டின் பொருளாதார நிலைமை ஆகிவிட்டிருப்பது வேதனையைத் தருகின்றது. எனவே இப்போதாவது இந்த நாடு ஒரு தேசிய பொருளாதாரக் கொள்கையினை வகுத்து செயற்படுவதற்கு முன்வர வேண்டிய அவசியமே உணர்த்தப்பட்டு வருகின்றது என்றே கருதுகின்றேன். இந்த நாட்டுக்கு தேசிய பொருளாதாரக் கொள்கையின்மையே முதற் கோணலாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் 2018ஆம் ஆண்டின் அரையாண்டு அரசிறை நிலைமை தொடர்பான அறிக்கை பற்றிய சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இந்த நாடு இன்று மிக முக்கியமானப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளது.  இந்த நாட்டின் மொத்த தேசிய உற்பத்திக்கு சமாந்திரமான வகையில் அரச வருமானமானது விரைவான குறைபாட்டினைக் கண்டிருக்கின்றது. இது அரசின் பொதுச் சேவைகளை முன்னெடுப்பதில் தடையாகவுள்ளது. இத்தடையானது எமது மக்களையே பெரிதும் பாதிக்கின்றது. குறிப்பாக வடக்கு – கிழக்கு போன்ற கடந்தகால யுத்தப் பாதிப்புகளுக்கு நேரடியாக முகங்கொடுத்து பாரிய பின்னடைவுகளைக் கொண்டுள்ள பகுதி வாழ் மக்கள் பெரிதும் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.

ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் இது பாதிப்பிக்கின்றபோது ஏற்கனவே பாதிப்புகள் அனைத்தும் நிலுவையில் இருக்கின்ற வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு மேலும் அரச சேவைகளின் தேவைகள் நிறைகின்ற நிலையில்  இது மீள் செலவிடப்பட வேண்டிய மிகைத் தொகையாக அமைந்துவிடுகின்றது.

இந்த நிலைமையில் அரச முதலீடுகளை நாம் எதிர்பார்ப்பதைவிட – அதற்கான வலியுறுத்தல்களை மேற்கொள்வதைவிட – அரச வருமானத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்தே மிக முக்கிய அவதானங்களைச் செலுத்த வேண்டியிருக்கின்றது. இதனைச் செய்தால்தான் அரச செலவீனங்களை மேற்கொள்ள முடியும் என்பது பொதுவாகவே பொருளாதார நிபுணர்கள் முன்வைக்கின்ற விடயமாக இருக்கின்றது.

இங்கு அரச செலவினங்களைக் குறைத்தல் அல்லது கட்டுப்படுத்தல் என்கின்ற நிலை குறித்து பேசப்படுகின்றது. வீண் விரயங்கள் வீண் செலவினங்களால் இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருக்கின்றது என்று கூறப்படுகின்றது. இப்போதும்கூட இந்த வீண்விரயங்கள் வீண் செலவீனங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளனவா? என்ற கேள்வி எழாமல் இல்லை. அதேநேரம் மக்களுக்கான அரச சேவைகளை கட்டுப்படுத்துவதோ – குறைப்பதோ ஏற்றுக் கொள்ளத்தக்கதொரு விடயமல்ல.

அதற்காக பொருட்களின் விலைகளை அதிகரித்தும் மறைமுக – நேரடி வரி விதிப்புகளை அதிகரித்தும் மட்டுமே அரச வருமானம் ஈட்ட வேண்டும் என்கின்ற நிலைமையில் தங்கியிருக்கக்கூடாது. இவ்வாறான செயற்பாடுகளால் மக்களை பட்டினி போட்டு அதன் மூலம் சுரண்டப்படுகின்ற வருமானத்தால் அம் மக்களுக்கு சேவை செய்வது என்பது ஏற்புடைய செயலாகாது.

Related posts:


வடக்கில் சட்டவிரோத காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடியுமா? - ஜன...
எமது வாழ்வாதார போராட்டத்திற்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தாருங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் யுத...
யாழ். மாவட்ட இளைஞர் சமேளனத்திற்கான நிர்வாகக் குழு அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...