நாட்டில் மானுடம் வாழுகின்றவரை சந்திரசிறி கஜதீர சகோதரயாவின் நாமம் என்றென்றும் நிலைத்திருக்கும் – அனுதாபப் பிரேரணையில் டக்ளஸ் எம்.பி. புகழாரம்!

Friday, September 20th, 2019

இலங்கை கம்யூனிஸக் கட்சி சார்பில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தியிருந்த அமரர் சந்திரசிறி கஜதீர சகோதரயா அவர்கள், இந்த நாட்டில் தேசிய நல்லிணக்கம் வலுப்பெற வேண்டும் என்பதற்காகத் தனது இறுதி மூச்சு வரையிலும் கடினமாக உழைத்தவர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், அமரர் சந்திரசிறி கஜதீர அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

தனது பல்கலைக்கழகப் பருவத்திலேயே இடதுசாரிக் கொள்கையுடன் பின்னிப் பிணைந்த அமரர் சந்திரசிறி கஜதீர சகோதரயா அவர்கள், தனது அரசியல் வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் ஓர் இடதுசாரித் தலைவராக – வழிகாட்டியாக வாழ்ந்து மறைந்துள்ளார்.

அமைச்சராகவும், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராகவும், பிரதி அமைச்சராகவும் பல்வேறு பொறுப்பகளை வகித்துள்ள அன்னார், சிசை;சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் சிறைச்சாலைகள் நூதனசாலை ஒன்றினை இந்த நாட்டில் அமைப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்தார்.

அந்தக் காலகட்டத்திலே புனர்வாழ்வு பெற்றிருந்த முன்னாள் இயக்க உறுப்பினர்கள் 12,500 பேர்களை விடுவித்து அவர்களை பெற்றோர்களிடம் ஒப்படைக்க நாம் எடுத்த முயற்சிகளுக்கு அவர் பெரிதும் துணையாக இருந்தவர்.

அதேவேளை புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களின் வாழ்வாதார உரிமைகள் தொடர்பில் நாம் எடுத்த கரிசனையில் முடிந்தளவு அக்கறையுடன் செயற்பட்டிருந்தவர் சந்திரசிறி கஜதீர சகோதரயா அவர்கள்.

அது மட்டுமன்றி யுத்தம் முடிந்த பின்னர் கிளிநொச்சி அறிவியல் நகர் உட்பட பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை படையினரிடமிருந்து விடுவித்து அதை நாம் எமது மக்களிடம் மீள ஒப்படைத்த போது,.. எமது நிலம் எமது மக்களுக்கே சொந்தம் என்ற எமது கொள்கைக்கு பலம் சேர்த்தவர் சந்திரசிறீ கஜதீர அவர்கள்.

நில மீட்பு மட்டுமன்றி,. தமிழ் பேசும் மக்களுக்கான சமுர்த்தித் திட்டம், வாழ்வாதார உரிமைகள்,. மீள்குடியேற்றம்,. பல்லாயிரம் தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம், பல்லாயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு, எமது முயற்சியால் இந்தியாவின் உதவியுடன் கிடைத்த ஐம்பதினாயிரம் வீட்டுத்திட்டம், மதவாச்சியில் இருந்து மன்னாருக்கும், ஓமந்தையில் இருந்து காங்கேசன்துறை நோக்கியும் புகையிரதப்பாதைகள் புனரமைக்கப்பட்டு புகைவண்டிப் பயணத்தை நாம் மூன்று தசாப்தங்களுக்கு பின்னர் மறுபடியும் தொடக்கி வைத்த போது எமக்கு பக்க பலமாக நின்று ஆதரவளித்தவர் அவர்.

தமிழ் மக்களின் அரசியலுரிமை குறித்து நாம் நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் பதின் மூன்றாவது திருத்தச் சட்டத்தை மேலும் பலப்படுத்தி அதிலிருந்து தொடங்கும் எமது இலட்சியக் கனவுகளுக்குத் தனது ஆதரவை நல்கியவர் அவர்.

அதை நடைமுறைக்குக் கொண்டுவரத் தமிழ் பேசும் மக்களின் ஆணை எமக்குக் கிடைக்க வேண்டும் என நான் அவரிடம் கூறிய போது அமரர் சந்திரசிறி கஜதீர அவர்கள் என்னுடன் மனம் விட்டுப் பேசி எனக்களித்த சிறந்த ஆலோசனைகளை நான் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.

தமிழ் மக்களுக்கு அரசியல் சமவுரிமை உண்டு எனத் தமது கட்சி மாநாட்டில் பகிரங்கத் தீர்மானம் எடுத்து அறிவித்த இலங்கை கம்யுனிஸ் கட்சியின் பிரதான தூண்களில் ஒருவராகத் திகழ்ந்த அமரர் சந்திரசிறி கஜதீர அவர்களின் தமிழ் மக்கள் மீதான நேசிப்பை நான் எனது ஆழ்மனதில் இருந்து மீட்டுப் பார்க்கிறேன்.

எமது மக்கள் கடந்தகால யுத்தத்தில் கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைவு கூறுவதற்கே சுதந்திரம் இருந்திராத ஒரு காலகட்டத்தில், எமது மக்கள் கொல்லப்பட்ட தங்களது உறவுகளை நினைவு கூர்ந்தால், அதை இனவாதமாகத் தென்பகுதியிலே பிரச்சாரப் படுத்திக் கொண்டிருந்த இனவாத அரசியல்வாதிகள் கோலோச்சிக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், யுத்தத்தால் கொல்லப்பட்டவர்களை நினைவு கூறுவதில் எந்தத் தவறும் இல்லை எனத் தென்பகுதியிலே பகிரங்கமாக எடுத்துக் கூறிய தலைவராக அவர் திகழ்ந்தார்.

அது மட்டுமன்றி அதற்கான பொது நினைவு சதுக்கத்தையும் பொது தினத்தையும் வலியுறுத்தி நான் நாடாளுமன்றத்தில் வாதாடி அதற்கான அங்கீகாரத்தைப் பெற்ற போது தனது தார்மீக ஆதரவை எனக்கு வழங்கியவர் அவர்.

தென்பகுதியிலே சிங்கள சகோதர மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும், குறுகிய இனவாத அரசியலின் பக்கமாகத் தனது இறுதிக் காலம் வரையிலும் நாட்டம் காட்டியிராத சந்திரசிறி கஜதீர சகோதரயா, இந்த நாட்டின் அனைத்து மக்கள் குறித்தும் வெகு அக்கறையுடன் செயற்பட்டிருந்தார்.

சிறைக் கைதிகளும் மனிதர்களே என்ற வாசகத்தை மெய்ப்பித்துக் காட்டிய ஓர் அமைச்சராக அவர் திகழ்ந்திருந்தார்.

மரண தண்டனை பெற்ற சிறைக் கைதிகளுக்கு தலதா மாளிகையைத் தரசிக்கின்ற ஒரு வாய்ப்பினையும் அவர் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

அந்த வகையிலே, இந்த நாட்டில் மானுடம் வாழுகின்ற வரையில் சந்திரசிறி கஜதீர சகோதரயாவின் நாமம் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

மக்களின் வாக்குகளைப் பெற்று, அந்த மக்களை மறந்துவிடாமல், அந்த மக்களுக்கு உதவியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்திருந்த அமரர் சந்திரசிறி கஜதீர சகோதரயாவின் மறைவால் துயர் கொண்டிருக்கின்ற அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், இலங்கை கம்யூனிஸக் கட்சியின் தலைவர் உள்ளிட்ட கட்சித் தோழர்கள் அனைவருடனும், எமது மக்கள் சார்பாகவும், எனது கட்சி சார்பாகவும் துயரங்களைப் பகிர்ந்து கொள்கின்றேன்

Related posts: