நாட்டில் பதற்றங்கள் ஏற்படவேண்டும் என்ற கொள்கையிலேயே பலரும் இருக்கின்றீர்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Friday, June 7th, 2019

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்திற்கும், தேசிய பாதுகாப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உண்மைக்குப் புறம்பான செய்திகளையும், வெறுப்புணர்வான கருத்துக்களையும் வெளியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் தண்டனை சட்டக் கோவையிலும், குற்றவியல் வழக்கு ஒழுங்கு விதிகளிலும் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளதாகத் தெரிய வருகின்றது.

இப்போதல்ல, இத்தகைய ஏற்பாடுகளை எப்போதோ கொண்டு வந்திருக்க வேண்டும். சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்தபோது, மதங்களுக்கும், இனங்களுக்கும் இடையில் வெறுப்புணர்வுகளை – முரண்பாடுகளை தோற்றுவித்து, நாட்டில் அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் தொடர்பில் ஆராய்ந்து சட்ட நடவடிக்கைள் எடுப்பது தொடர்பிலும் ஓர் ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இந்த நாட்டில் முதன் முதலாக நாம் முன்வைத்திருந்தோம்.

எமது அந்தக் கோரிக்கையை அப்போது நீங்கள் அவதானத்தில் கொள்ளவில்லை. ஏன்? உங்களுக்கும் இத்தகைய மத, இன முரண்பாடுகள் நாட்டில் தேவைப்பட்டது. நாட்டில் தொடர்ந்து ஏதாவது பதற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற கொள்கையில் பலரும் இருந்தீர்கள். இருக்கிறீர்கள். இன்னும் பலர் எதையுமே கண்டு கொள்ளாத மனப்பாங்கினைக் கொண்டிருந்தீர்கள். கொண்டிருக்கின்றீர்கள். இறுதியில் அது, பல உயிர்களைக் காவு கொள்ளும் வரையில் சென்றுவிட்டது.

இந்தத் தாக்குதலுக்குப் பின்னர் அதாவது – கடந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுக்குப் பின்னர் இந்த நாட்டில் எவரும், எதையும் பகிரங்கமாகப் பேசலாம் என்றொரு நிலை ஏற்பட்டிருக்கின்றது. அது இன்னமும் தொடர்கின்ற நிலையினையே காணக்கூடியதாகவும் இருக்கின்றது.

அரசியல் சார்ந்தவர்கள், மதங்கள் சார்ந்த பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநதிகள், பொது மக்கள் என இந்த நாட்டிற்கென ஓர் அரசியல் யாப்பு இருக்கின்றது என்பதை மறந்துவிட்டு, கதைக்கின்றனர். இவர்களில் பலரது கதைகள் இந்த நாட்டில் மீண்டுமொரு இரத்த ஆறு ஓட வேண்டும் என்பதை நோக்கிய வன்மங்களாகவே தொனிக்கின்றன.

இன்று இந்த நாட்டின் பொருளாதார நிலை மறக்கடிக்கப்பட்டு விட்டுள்ளது. மக்களது வாழ்க்கைச் சுமைகள் மறக்கப்பட்டுவிட்டுள்ளன. உல்லாசப் பிரயாணத்துறை பற்றியோ, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பற்றியோ கவலை இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக, இனவாதம் – மதவாதம் என்கின்ற அடி பாதாளத்தை நோக்கியதாக நாடு முன்னெடுக்கப்பட்டுச் செல்கின்றதையே காணக் கூடியதாக இருக்கின்றது.

ஆளுக்காள் அடித்துக் கொண்டால், ஆட்சியார்களுக்குக் கொண்டாட்டம் என்ற நிலை இருக்கக் கூடாது. ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கின்ற மக்களை, அந்த ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளாமல் விட்டால், அது மக்களாட்சி ஆகாது.

இன்று இந்த நாட்டைப் பொறுத்தவரையில், பல்வேறு அந்நியச் சக்திகளின் ஆக்கிரமிப்புத் தளமாக நாடு மாறி வருகின்றது. இவை பற்றி எல்லாம் நாடாளுமன்ற மன்றத்திலே கேள்விகள் கேட்கப்படும்போது, அந்தக் கேள்விகளை நகைச்சுiவையாக்கி, கேலிக்கூத்தான பதில்களே வழங்கப்படுகின்றன. அந்த வகையிலான கேலிக்கூத்தாகவே இன்று நாடும் மாறிக் கொண்டிருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts:

வடக்கு, கிழக்கில் செயற்படுகின்ற  நிதி நிறுவனங்களின் கொள்கை என்ன? - விளக்குமாறு சபையில் டக்ளஸ் தேவானந...
ஆபத்தில் தவித்தவர்களை விரைந்து மீட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மீண்டவர்கள் நன்றி தெரிவிப...
அழிந்த வாழைகழுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு ஜ...

நாம் ஒருபோதும் பிரதி உபகாரங்களுக்காக எமது மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்தது கிடையாது - சாவகச்சேரியில...
அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயற்பாடுகள் “வந்தபின் காப்போம்” என்றிராது “வருமுன் காப்போம்” என்றிருக...
வடக்கு - கிழக்கில் கடலட்டை உற்பத்தி கிராமங்களை உருவாக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யோசனைக்கு அ...