நாட்டில் நீதித்துறை கேள்விக்குட்படுத்தப்படுவது ஆரோக்கியமான நிலையல்ல –  நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா

Saturday, May 13th, 2017
நாட்டில் நீதித்துறையானது எல்லோருக்கும் சமம் என்ற வகையில் நடைமுறைப்படுத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், எமது நாட்டில் நீதி மன்ற உத்தரவுகளை மீறிய செயற்பாடுகள் தற்போது பரவலாக இடம்பெற்று வருகின்ற நிலை காணப்படுகின்றது. அண்மையில் நீதிமன்ற தடையுத்தரவையும் மீறி அம்பாறை, மாயக்கல்லி மலை பகுதியில் வழிபாட்டு நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கின்றன. அதற்கு முன்பதாக நீதிமன்ற உத்தரவை ஒரு பௌத்த மத குரு கிழித்தெறிந்த சம்பவமும் இடம்பெற்றிருக்கின்றது. இவ்வாறான செயற்பாடுகள் நீதி மன்றங்கள் குறித்து எமது மக்களுக்கு இருக்கின்ற நம்பிக்கையினை பழுதடையச் செய்வதாகவே அமைகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் குறித்து சட்டத்தரணிகள் போராட்டங்களை முன்னெடுத்தும், அது தொடர்பில் அலட்சியப் போக்கினை பொறுப்பு வாய்ந்தவர்கள் கடைப்பிடித்து வருவதானது கண்டித்தக்கதொரு விடயமாகும்.
நாட்டில் நீதித்துறையானது பொதுவாக எல்லோருக்கும் சமமானதாகவே செயற்படுதல் வேண்டும். அதைவிடுத்து, ஆளுக்காள் நீதிமன்ற உத்;தரவுகளை மீறி, நீதியை தம் கைகளில் எடுத்துக் கொண்டு செயற்படும் நிலையானது ஒரு ஜனநாயக நாட்டுக்கு ஆரோக்கியமானதாக அமையாது.
எனவே, இவ்விடயம் தொடர்பில் அரசு உரிய அவதானங்களைச் செலுத்தி, நீதித்துறை நடைமுறைகளை உறுதி செய்வதற்கு வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: