நாட்டில் அறிவுப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் விஞ்ஞான முறைமையின் தேவை மிக அவசியம் – டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Tuesday, March 19th, 2019

வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் கதைக்கின்ற நீங்கள் அதற்கேற்ற – அதாவது வெளிநாட்டு முதலீட்டாளர்களது தொழில் தன்மைகளுக்கு ஏற்ற தொழிற்படையினை உருவாக்குவதிலிருந்து பின்நிற்கின்ற செயற்பாடுகள் நீங்க வேண்டும என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டுக்கான வரவுசெலவு திட்ட விவாதத்தில் பொது தொழில் முயற்சி, கண்டிய மரபுரிமை மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் பற்றிய அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சு, விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பற்றிய அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்-

இலங்கை புள்ளிவிபரத் திணைக்களம் கடந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு தொடர்பில் வெளியிட்டிருந்த புள்ளிவிபரங்களுக்கமைவாக, இந்த நாட்டில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரத்திற்குக் கீழ் கல்விகற்றவர்களில் சுமார் 1,37, 615 தொழில்வாய்ப்புகளின்றி இருக்கின்றனர் என்றும்,

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரம் வரையில் கல்வி கற்றவர்களில் சுமார் 73,571 பேர் தொழில் வாய்ப்புகளின்றி இருக்கின்றனர் என்றும் தெரிய வருகின்றது.

இந்த நாட்டின் தொழில் வாய்பில்லாதோரின் மொத்த எண்ணிக்கையில் 7.6 வீதமான இவர்களுக்கு பொருந்தக்கூடிய தொழில்வாய்ப்புகள் கிடைக்கும் என்பதை உறுதியிட்டுக் கூற முடியாது.

கிட்டத்தட்ட 2,11,186 பேர்களாகிய இவர்கள் தினமும் தங்களுக்கான தொழில் வாய்ப்புகளைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். பெரும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் எதிலும் இவர்கள் ஈடுபடாததால் இவர்களது பிரச்சினை என்பது பெரிதாக இந்த நாட்டில் கண்டுகொள்ளப்படாமலேயே இருக்கின்றது என்றாலும், பெரும் பிரச்சினைகளுக்கு இவர்களது தொழில் இன்றிய நிலைமைகளும் காரணமாகின்றது.

கல்விப் பொது தராதர உயர்தரம் அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகைமை கொண்டவர்களில் சுமார் 1,70,642 பேர் தொழில்வாய்ப்புகளில்லாத நிலையில் இருப்பதாகத் தெரிய வருகின்றது. முழு தொழில்வாய்ப்புகள் அற்றோர்; எண்ணிக்iகியல் 8.9 வீதமாக, தொகையில் அதிகமான இவர்கள் தங்களுக்கான தொழில்வாய்ப்புகளைக் கோரி அடிக்கடி ஆர்ப்பாட்டங்களில் – ஊர்வலங்களில் ஈடுபடுபவர்களாக இருக்கின்றனர்.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அறிவுக்கும், தொழில்நுட்பத்திற்கும் அதிகூடிய பங்குகள் இருப்பதை நாம் உலக நாடுகளை உதாரணங்காட்டி தெரிந்து வைத்திருக்கின்றோம். நம் நாட்டில் அது இல்லையே என எவரும் கவலைப்படுவதாக இல்லை.

ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் தொழிலுக்கான ஊதியங்கள் அதிகரித்திருக்கின்ற அதே நேரம், அவர்களது உற்பத்திப் பொருட்களினதும், சேவைகளினதும் பெறுமதியும், உற்பத்திறனும் அதிகரித்தக் காணப்படுகின்றது.

இந்த நாட்டின் இன்றைய நிலையினை எடுத்துக் கொண்டால், தொழிற்படை குறுகிச் செல்கின்ற நிலையில், பயிற்றப்படாத தொழிற் படைக்கான ஊதியத்தை அது ஆளணி உள்வாங்கலுக்காக அதிகரிக்கின்ற நிலை தோன்றும். அத்தகைய நிலையில், உற்பத்திப் பொருட்களின் திறன் குறைந்து – பெறுமதி குறைந்து சர்வதேச சந்தையில் போட்டியிட இயலாத நிலையேற்படும். மறுபக்கத்தில் தற்போதுபோல் – இதைவிட உள்நாட்டுச் சந்தையில் பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டு, பணவீக்கத்துடன் அதிகளவிலான பொருளாதார பின்னடைவுகள் ஏற்படக்கூடும்.

நீங்கள் தேயிலையையும், ஆடை உற்பத்தித் துறையையும் நம்பியிருக்கிறீர்கள். இது எதிர்காலத்தில் எந்தளவிற்கு – எவ்வளவு தூரம் சாத்தியம் என்ற கேள்வி இருந்தாலும், தற்போதே தேயிலைத் தோட்டங்கள் காடு மண்டி, பெரும்பாலான நிலங்கள் தேயிலை உற்பத்தியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிலையிலும், சரியான பராமரிப்புகளற்ற நிலையில் தரம் பற்றிய கேள்விக்குறிகளுடனும் இருக்கின்ற அதேவேளை அத்துறை சார்ந்த ஆளணிகள், பல்வேறு தொழில் ரீதியிலான பிரச்சினைகள் காரணமாக அதிலிருந்து ஒதுங்கி வருகின்ற நிலையும் காணப்படுகின்றது.

ஆடை உற்பத்தித் துறையை எடுத்துக் கொண்டாலும் அதற்குரிய ஆளணிப் பற்றாக்குறையானது மிக அதிகமாகவே காணப்படுவாதாகத் தெரியவருகின்றது.

எனவே, இந்த நாட்டில் மனித வள மூலதனத்துடன் இணைந்ததாக பயிற்சியும், அறிவும், தொழில்நுட்பமும், இணைகின்ற வாய்ப்புகள் உருவாக்கப்படல் வேண்டும்.

எனவே, இந்த நாட்டில் அறிவுப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் விஞ்ஞான முறைமையின் தேவை மிக அவசியம் என்பதால், விஞ்ஞான, தொழில்நுட்ப, ஆராய்சி சார்ந்த இந்த அமைச்சுக்களின் பங்களிப்புகள் மேலும் கணிசமானளவு தேவை என்பதைக் கருத்தில் கொண்டு, அரசு இந்த அமைச்சுக்களின் கீழான நிறுவனங்களை மிக அதிகமாகவே வலுப்படுத்த வேண்டும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

Related posts:

நலன்புரி முகாம்களை மூடுவதால் மட்டும் மீள்குடியேற்றம் முடிந்துவிட்டதாகக் கருத முடியாது! - டக்ளஸ் தே...
புலம்பெயர்ந்த எமது மக்கள்முக்கிய தேர்தல்களில் வாக்களிக்கும் வசதி வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா
இலங்கை கடல் உணவு , நன்னீர் மீன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தி...

முன்னாள் போராளிகளின் கடன் இரத்தாகும் : டக்ளஸ் எம்.பி.யின் கோரிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்...
வேலணை, அராலித்துறையில் தனியார் முதலீட்டுடன் இறால் மற்றும் நண்டுப் பண்ணைகளை உருவாக்குவதற்கான ஏற்பாடுக...
அரசியல் வேறுபாடுகளின்றி நன்மைகள் மக்களை சென்றடைய வேண்டும் - தமிழ் பிரதிநிதிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் அ...