நாட்டில் அரசியல் குடும்பிச் சண்டை நீடிக்கின்றதே அன்றி மக்கள் நிம்மதியாக வாழக் கூடிய சூழல் இன்னமும் உருவாக்கப்படவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, June 18th, 2019

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். அதுபோலவே இன்று இந்த நாட்டில் ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பு என்பது பிளவுபட்டுள்ள நிலையில், அது இனவாதிகளுக்கும், அடிப்படைவாதிகளுக்கும் மதவாதிகளுக்கும் கொண்டாட்டங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 2000ஆம் ஆண்டின் 43ஆம் இலக்க காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் கீழான கட்டளைகள் – மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான மூன்று அறிவித்தல்கள் தொடர்பில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

பெற்றோர்கள் காவல் இருக்க பிள்ளைகள் பாடசாலைகளில் கல்வி கற்க வேண்டிய நிலையும், மத வைபவங்களைக் கூட மித மிஞ்சிய பாதுகாப்புடன் நடத்த வேண்டிய நிலையும் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்தகையதொரு நிலை இந்த நாட்டில் உருவாக வேண்டிய அளவிற்கு ஆட்சி நிர்வாகம் அசமந்தப் போக்கில் இருந்துவிட்டு, எல்லாமே நடந்து முடிந்த பின்னர் இன்றும்கூட – கிட்டத்தட்ட இரு மாதங்கள் ஆகின்ற நிலையிலும், இன்னும் உங்களது அரசியல் குடும்பிச் சண்டையே நீடிக்கின்றதே அன்றி, மக்கள் நிம்மதியாக வாழக் கூடிய சூழல் இன்னமும் உருவாக்கப்படவில்லை என்றே தோன்றுகின்றது.

இன்று காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் கூறப்படுகின்றது. கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் முடங்கிவிட்ட பல்வேறு தொழில்துறைகள் இன்னும் ஒழுங்குபடுத்தப்படாமலேயே இருக்கின்றன.

அத்தகைய துறைகளை ஒழங்கபடுத்துவதாக அரச தரப்பில் கூறிக் கொண்டாலும், அரசின் நிச்சயமற்ற தன்மை காரணமாக அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் அத்தகைய துறைகளைக் கட்டியெழுப்புவதற்கு எந்த வகையில் கிடைக்கின்றன? என்பதும் தொடர் கேள்விக் குறியாகவே இருக்கின்றது.

உங்களது பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக அரச அதிகாரிகள் தங்களது பதவிகளை விட்டே ஒதுங்குகின்ற, அல்லது ஓரமாகி நிற்கின்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

புதிது புதிதாக பிரச்சினைகளை உருவாக்கி, தொடர்ந்தும் அவற்றின் நிழலில் இருந்து கொண்டு, பிழைக்கப் பார்க்கின்ற நிலையில், எமது மக்களது அடிப்படை, அன்றாட, அத்தியாவசியப் பிரச்சினைகள் யாவும் அடித்தட்டுக்குப் போடப்பட்டு விட்டுள்ளன.

புதிது புதிதாகத் திட்டங்களைக் கொண்டு வருகின்றீர்கள். அழகழகான பெயர்களை அவற்றுக்கு சூட்டுகின்றீர்கள். ஆடம்பரமாக அறிமுகஞ் செய்து வைக்கின்றீர்கள். அவற்றினால் ஏதும் பயன் கிடைக்கின்றனவா? எனப் பார்த்தால், எமது மக்கள் வெறும் அச்சிட்ட அட்டைகளை கையில் வைத்துக் கொண்டு அலைந்து திரிகிறார்கள்.

ஏற்கனவே பல்வேறு கடன் திட்டங்களை அறிமுகஞ் செய்து, அரச வங்கிகள் ஆட்டங் கண்டு கொண்டிருக்கின்ற நிலையில், தற்போது சமுர்த்தி கடன் அட்டைகளைக் கொடுத்து சமுர்த்தி வங்கியும் ஆட்டங் காணப் போகின்றது என்றே மக்கள் பொதுவாகவே கதைக்கின்ற அளவுக்கு உங்களது திட்டங்கள் மக்கள் மத்தியில் நன்றாகவே எடுபட்டுப் போயுள்ளன.

இத்தகைய திட்டங்கள் கnhண்டு வரப்படுகின்றபோது, தேசிய நல்லிணக்கம் பேசுகின்ற நீங்கள் அத் திட்டங்களின் பெயர்களுக்கேற்ற தமிழ்ச் சொற் பதங்களை அதனுடன் இணைத்து வழங்குவதில்லை. கேள்வி கேட்டால், அது வர்த்தகப் பெயர் எனக் கூறுகிறீர்கள். ஆக, எல்லாவற்றிலும் நீங்கள் வர்த்தகம் செய்து கொண்டிரக்கிறீர்கள். இந்த அரசாங்கத்தைக் கொண்டு வந்ததாகக் கூறும் தமிழ்த் தரப்பும் தங்களது கட்சிப் பெயரில் மாத்திரம் தமிழை வைத்துக் கொண்டால் போதும், இந்த நாட்டில் வேறு எதற்குமே தமிழ்ப் பெயர் தேவையில்லை என்ற போக்கில் வாய் மூடிக் கொண்டு இருக்கின்றது.

Related posts: