நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பதவிகளையும் தாண்டிய பொறுப்புக்களை சுமக்க வேண்டும் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Friday, August 21st, 2020

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் எம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு நாமும் கடுமையாக உழைத்து ஒத்துழைப்பு வழங்குவதே எமதும் முக்கிய நோக்கமாக இருக்கின்றது. குறிப்பாக நாட்டின் பொருளாதார நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக பதவிகளையும் தாண்டிய பொறுப்புக்களை சுமக்க வேண்டியிருப்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தள்ளார்.

9 வது நாடாளுமன்றத்தை ஆரம்பித்து வைத்து மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் ஆற்றிய கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் இன்றையதினம் (21) நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்

மேலும் – இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் நான் வெற்றி பெற்றதும் எமது புலம்பெயர் உறவுகளுக்கு ஓர் அழைப்பினை விடுத்திருந்தேன். அதாவது இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்வருமாறு அழைப்பு விடுத்திருந்தேன்.

எமது புலம்பெயர் உறவுகள் இந்த நாட்டிலே பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதற்கு ஆவலாக இருக்கிறார்கள். எனினும் கடந்த காலங்களில் அவர்கள் முதலீடு செய்வதற்காக இந்த நாட்டுக்கு வருகை தந்திருந்தபோது அவர்களிடம் ஒரு சில தரப்புகளினால் கையூட்டங்கள் கோரப்பட்டதால் அந்த புலம்பெயர் உறவுகள் இந்த நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளாமல் திரும்பிச்சென்ற நிலைமைகள் உண்டு.

ஆனால் தற்போதைய இந்த அரசாங்கத்தில் அத்தகைய முறைகேடுகள் இடம்பெறாது என்;ற எனது நம்பிக்கையை நான் புலம்பெயர் உறவுகளுக்கு எடுத்துக் கூறி எமது நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றேன்.

வெளிநாடுகளில் பல வருட காலமாக வாழ்ந்து வருகின்ற நிலையில் பல்வேறு மாற்று அனுபவங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப அறிவாற்றல்களுடன் இத்தகைய புலம்பெயர் உறவுகள் எமது நாட்டிலே முதலீடுகளை மேற்கொள்கின்றபோது சர்வதேசத்துடன் போட்டி போடக் கூடிய பல்துறை உற்பத்திகளை இந்த நாட்டில் உற்பத்தி செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது என்றார்.

Related posts: