நாங்கள் சொல்வதைத்தான் அரசாங்கம் செய்கிறது என்றால் அரசு எதையுமே செய்யாதிருப்பதற்கும் இவர்களே பொறுப்பேற்க வேண்டும் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Thursday, July 11th, 2019

தாங்கள் சொல்வதைக் கேட்டுதான் இந்த அரசாங்கம் அனைத்தையும் செய்யும் என இந்தத் தமிழ்த் தரப்பின் தலைமைகள் அன்றே கூறின. ஆக, இவர்கள் சொல்லித்தான் இந்த அரசு எமது மக்களுக்கு எதையுமே செய்யாதிருக்கின்றது என்று தானே எமது மக்களும் நம்புவார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

சொந்தக் காணி நிலங்களைக் கேட்டு எமது மக்கள் இன்னமும் நடுத்தெருவில் நிற்கின்றார்கள்.  தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரி அவர்களது உறவுகள் இன்னமும் கண்ணீருடன் காத்திருக்கின்றார்கள். காணமற்போன உறவுகளைக் கண்டறிவதற்காக அவர்களது உறவுகள் இன்னமும் நடுத்தெருவில் காத்துக் கிடக்கின்றனர்.

கடற்றொழிலாளர்கள் சுதந்திரமாக தங்களது தொழிற்துறைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட்டு வருகின்றன. நியாயமான விலையோ, ஒழுங்கான சந்தை வாய்ப்புகளோ இன்றி எமது விவசாய மக்கள் தங்களது உற்பத்திகளுடன் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு கையால் கொடுத்து, மறு கையால் பறிப்பது போல், விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற எமது மக்களின் காணி, நிலங்கள் வெவ்வேறு பெயர்களால் மீளவும் பறிக்கப்பட்டு வருகின்றன.வேiலாவய்ப்புகள் இன்றி ஆயிரக் கணக்கான எமது பிள்ளைகள் காத்துக் கிடக்கின்றனர்.

கைத்தொழிற்துறை முன்னேற்றங்கள் அறவே இல்லாத நிலையில் எமது மக்கள் தொழில் வாய்ப்புகளுக்காக அலைந்து திரிகின்றனர்.படுகடன்கள் அதிகரித்து, தற்கொலையை நாடும் அளவிற்கு எமது சமூகம் தள்ளப்பட்டு வருகின்றது.இவை எல்லாம் இன்று எமது மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளாகவும், அடிப்படைப் பிரச்சினைகளாகவும் அப்படியே தேங்கி நிற்கின்றன.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலகட்டங்களிலும் அதன் பின்னராக கடந்த பொதுத் தேர்தல் காலகட்டங்களிலும் எமது மக்களின் மேற்படி பிரச்சினைகள் தீர்க்கப்படும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. இன்று இருக்கின்ற அரசாங்கத்தாலும், இந்த அரசாங்கத்தைக் கொண்டு வந்ததாகக் கூறிக் கொள்கின்ற தரகுத் தமிழ் அரசியல் தரப்பாலும் அந்த வாக்குறுதிகள் எமது மக்களுக்கு வழங்கப்பட்டன.

தங்களது நியாயமான கோரிக்கைகளைக் கேட்டு, அவற்றை நிறைவேற்றித் தருவார்கள் என நம்பி வாக்களித்திருந்த எமது மக்களின் கைகளில் நான்கு வருடங்கள் சென்ற நிலையில் வெறும் கடன் அட்டைகளே கைகளில் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்குக் கூட ஒருவரிடம் இருந்து ஐந்நூறு ரூபா வீதமாக வசூலித்துக் கொண்டுள்ளீர்கள்.

வெறும் அறிக்கை அரசியல் செய்து கொண்டிருக்கின்ற தமிழ்த் தரப்பு போல், இங்கே வெறும் அறிக்கை அரசாங்கமே நடந்து கொண்டிருப்பதுபோல்தான் எமது மக்கள் காண்கின்றனர்.ஒரு வண்டி. இரண்டு சாரதிகள். இரண்டு பேருமே தான், தான் செல்வதுதான் சரி என்றால், இறுதியில் அதில் பயணிப்போரின் நிலை தான் இன்று இந்த நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

திக்குத் தெரியாத காட்டில் மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள். தங்களது துயரங்களை யாரிடம் போய்ச்; சொல்வதென்றே தெரியாத நிலையில் இருக்கிறார்கள்.

அரசியல் கட்சிகள் பிரிந்திருக்கலாம். ஆளுங் கட்சியும், எதிர்க்கட்சியும் பிரிந்திருக்கலாம். அரசாங்கமே பிரிந்து நின்றால், எப்படி இந்த நாடு முன்னேறப் போகின்றது? என்பது தொடர்பில் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

பூநகரி, சோலைநிலா குடியிருப்பு  பகுதிக்கு மின்சாரம் பெற்றுக்கொடுக்க  டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!
தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு அறநெறிக் கல்வியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் தேவை - டக்ளஸ் ...
கொக்குவில் கிழக்கு மகமாஜி சனசமூக நிலைய நிர்வாகத்தினர் டக்ளஸ் எம்.பி.யிடம் விடுத்துள்ள கோரிக்கை!

சுகாதார தொண்டர்களின் நிரந்தர நியமனத்தை விரைவுபடுத்த வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரி...
நாட்டின் முக்கியத்துவம் மிக்க பகுதிகள் பிற நாடுகளின் தேவைகளுக்காக விற்கப்படுமானால் நாட்டின் எதிர்கா...
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் கொரியத் தூதுவர் இடையே விஷேட சந்திப்பு!