நல்லிணக்கம் என்றால் நல்லிணக்கம், கடும்போக்கு என்றால் கடும்போக்கு : இது நானும் பிரபாகரனும் மஹிந்தவிடம் கண்ட அனுபவங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, June 4th, 2020

அரசியலுக்காக நடிக்க விரும்பாத ஒரு அரசியல் தலைவர் மகிந்த ராஜபக்ச. நல்லிணக்கத்துடன் அணுகினால் அவர் நல்லிணக்கம் காட்டுவார். கடும் போக்கில் அணுகினால் கடும்போக்கையே கடைப்பிடிப்பார். இது நானும் பிரபாகரனும் அவரிடம் கண்ட அனுபவங்கள் என பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களின் ஐம்பதாண்டு அரசியல் வாழ்வின் நிறைவு குறித்து கருத்து தெரிவிக்கையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்-

நல்லிணக்கம் என்பது சரணாகதி அடைதல், அல்லது அடிமையாக இருத்தல் என்பதல்ல அர்த்தம். எமது நியாயமான கோரிக்கைகளை விட்டுக்கொடுகாமல், நாம் நாமாகவே இருந்து கொண்டு எமது அரசியல் பலத்தில் இணக்கமாக பேசி இழந்தவற்றை பெறுதலே ஆகும்.

அதற்கான வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் கடந்த மஹிந்த ஆட்சி காலத்திலும் சக தமிழ் தரப்பால் அதிகமாக இழக்கப்படிருக்கிறது.

2005  ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களுக்கு என்ன சொல்ல வேண்டும் என்று என்னிடம் அவர் கேட்டிருந்தார்.

நான் அவருக்கு சொன்னபடி யுத்தத்தை நிறுத்தி பிரச்சினைக்கு தீர்வு காண புலிகளின் தலைவர் பிரபாகரனோடு பேசுவேன் என பகிரங்கமாக கூறினார் மகிந்த ராஜபக்ச அவர்கள். அவர் அப்படி கூறியும் அது நடக்கவில்லை அது யார் தவறோ எமது மக்களுக்கு தெரியும்.

பதின்மூன்றாவது திருத்த சட்டத்தை நிறைவேற்றுமாறு கேட்டோம்.  கிழக்கிற்கு முதலிலும் வடக்கிற்கு பின்னரும் மாகாண சபை தேர்தல்களை நடத்தி அதை தமிழர் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்தார்.

சகதிக்குள் புதைந்திருந்த பதின்மூன்றாவது திருத்த சட்டத்தை, மாகாணசபை முறைமையை வெளியே இழுத்து வந்து நகரவைத்தார். அதுமட்டுமல்லாது வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதி கூடிய நிதியை ஒதுக்கியிருந்தார்.

சர்வகட்சி மாநாட்டின் மூலம் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணலாம் வாருங்கள் என அதற்கு ஆறு மாத கால அவகாசம் வழங்கி துணிச்சலோடு அழைத்தார்.

இன்று மகிந்தவால் மட்டுமே தீர்வு காண முடியும் என கூறும் சக தமிழ் தரப்பினர் எவரும் அப்போது இணங்கி வர மறுத்துவிட்டனர்,

மகிந்தராஜபக்ச அவர்களின் ஆட்சியிலேயே நான் அதிகப்படியான அபிவிருத்திகளை முன்னேடுத்திருந்தேன். கடும்போக்கானவர் என்று பலராலும் கருதப்படும் அவரை அணுகி பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை விடுவித்தேன்.

அறிவியல் நகரை மீட்டு அங்கு பொறியியல் பீடமும் விசாய பீடமும் அமைத்தேன்.

12 831  முன்னாள் புலி உறுப்பினர்களை விடுவிக்க பங்களித்தேன். போக்குவரத்து,. புகையிரதப்பாதை, வீடமைப்பு, கல்வி, சுகாதாரம், நீர் விநியோகம், நன்நீர்த்திட்டம்  மின்சாரம், மீள்குடியேற்றம், உட்கட்டமைப்பு, புனர்வாழ்வு, வேலை வாய்ப்பு, தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம், வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு, அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை. யாழ் கலாச்சார மண்டபம், பனை ஆராட்சி நிலையம், சீநோர் என தொடரும் பலதையும் என்னால் ஆற்ற முடிந்தது.

இவையனைத்தையும் அவர் ஆட்சியில் என்னால் ஆற்ற முடிந்திருக்கின்றதென்றால் யதார்த்த வழிமுறைக்கு சகலரும் ஒத்துழைத்து வந்தால்  தேசிய பிரச்சினைக்கும் தீர்வு காணலாம்.

இதுவரைகால ஆட்சியாலார்களில் மிக சக்தி வாய்ந்த ஒரு அரசியல் தலைவர். அவருக்கு நடிக்க தெரியாது. வல்லமையானவர். ஆம் என்றால் ஆம், இல்லை என்றால் இல்லை. வெளிப்படையாகவே கூறிவிடும் உண்மை மனிதர். இலங்கையின் பெரும்பான்மையான மக்களின் ஆணையை பெற்றவர்.

இவரது ஆட்சியிலேயே அரசியல் தீர்வு உட்பட சலக பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். அவரது ஐம்பது ஆண்டு கால அரசியல் வாழ்வு அதையும் கடந்து நீண்டு செல்ல வாழ்த்துகிறேன் என தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாம் நாமாக இருந்து எம் மீது நம்பிக்கை கொண்டால் வல்லமை மிக்கவர்களை வைத்தே நாம் எதையும் சாதிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நிரந்தர பொருளாதாரத்தை ஈட்டும் வழிவகைகளை செய்து தாருங்கள் – டக்ளஸ் எம்.பியிடம் பூநகரி மக்கள் கோரிக்கை...
கிராஞ்சி கடலில் மீனபிடிப்பது தொடர்பான குழப்ப நிலைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்...
காணிகள் பகிர்ந்தளிக்கப்படும்போது கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை - அமைச்சர் டக்ளஸ...

மக்கள் செலுத்துகின்ற வரித் தொகையானது அரசின் கடன்களையே செலுத்தப் போதாத நிலையில் மக்களின் தேவைகளைப் பூ...
ஊடகங்கள் கண்ணாடி போன்று பிரதிபலித்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் கணிசமான தீர்வை எட்டுவேன்– டக்ளஸ் எம்ப...
தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற பிரதேசங்களை இணைத்து உடப்பு தமிழ் பிரதேச சபையை உருவாக்க நடவடிக்கை எடு...