நலன்புரி முகாம்களை மூடுவதால் மட்டும் மீள்குடியேற்றம் முடிந்துவிட்டதாகக் கருத முடியாது! – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, July 31st, 2016

யாழ்ப்பாணத்தில் உள்ள 32 நலன்புரி நிலையங்களிலுள்ள சுமார் 971 குடும்பங்களை மீள்குடியேற்றுவதுடன் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முற்றுப் பெற்றுவிட்டதாகக் கூற முடியாது. நலன்புரி நிலையங்களுக்கு வெளியில் வாடகை வீடுகளில், உறவினர்கள் மற்றும் நண்பர்களது வீடுகளில் வாழ்ந்து வருகின்ற மக்களும் மீள்குடியேற்றப்படல் வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், யாழ்ப்பாணத்தில் 32 நலன்புரி நிலையங்களிலுள்ள சுமார் 971 குடும்பங்கள் பல்வேறு வகைகளில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களது தற்காலிக இருப்பிடங்களை மேம்படுத்தும் நோக்கில் கடந்த காலங்களில் நாம் பல்வேறு ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தோம். அதே நேரம், அம் மக்களை அவர்களது  சொந்த இடங்களில் மீள்குடியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் சில முன்னெடுப்புகளை நாம் மேற்கொண்டிருந்தபோதும், ஒரு சில காரணங்களால் அது தாமதமாகிவிட்டது. இந்நிலையில் இப்போது அந்த மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்க விடயமாகும். அந்த வகையில் தற்போது நலன்புரி நிலையங்களிலுள்ள 971 குடும்பங்களில் 330 குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதற்கான காணிகள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், மேலும் 641 குடும்பங்களை மீளக்குடியமர்த்த வேண்டிய தேவையும் உள்ளது.

அதே நேரம், அரசின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் என்பது மேற்படி நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களை மாத்திரம் மீளக்குடியமர்த்துவதுடன் முடிந்துவிட்டதாகக் கருத முடியாது. வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சுமார் 8000 குடும்பங்களும்,  இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பிக் கொண்டிருக்கும் தமிழ் அகதி மக்களும், வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்களும் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும்.

இந்த விடயங்கள் பற்றி நான் ஏற்கனவே நாடாளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளேன். எனவே, உரிய அமைச்சு இதற்கான ஏற்பாடுகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: