நன்றிக்கு தலை வணங்கும் நாளாக தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம் – வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, January 13th, 2022

சூரியனுக்கு பொங்கி படைத்து நன்றிக்கு தலை வணங்கும் பண்பாட்டு நாளாக தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த வாழ்த்து செய்தியில் –

“நன்றிக்கு தலை வணங்குதல் என்பது தொன்று தொட்டு நிலவி வரும் தமிழர் பண்பாட்டு வழிமுறையாகும்.

உழுதுண்டு வாழும் உழவர் மக்களின் விளை நிலங்கள் யாவும் செழித்து வளர உதவிய சூரியனுக்கு நன்றிக்கடன் செலுத்துவதோடு மட்டுமன்றி எமது மக்கள் தம் வாழ்வெங்கும் தம்மோடு கூடவே இருந்து தம் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து வருவோர்க்கும்.

அறம் சார்ந்த, அவலங்கள் இல்லாத யதார்த்த வழிமுறையில்  தம்மை வழி நடத்தி செல்வோருக்கும் நன்றி செலுத்தும் பண்பாட்டையும் இன்னமும் அதிகமாக நேசிக்க வேண்டும்.

தை பிறந்தால் வழி பிறக்கும்,.. வழி பிறந்தால் தம் வாழ்வு செழிக்கும், இதுவே எமது மக்களின் ஆழ்மன நம்பிக்கை.

ஆனாலும், நம்பிக்கைகளும் அதற்கான வேண்டுதல்களும் மட்டும் இருந்தால் போதாது. குறையிலா உயிர்கள் வாழும் மகிழ் காலத்தையும் தமது எதிர் காலத்தையும் எமது மக்கள் தாமே உருவாக்கும் தீர்மானங்களை தம் கைகளில் எடுக்க வேண்டும்.

உங்கள் இலட்சியத்தில் தோற்றீரானால் சூட்சுமத்தை மாற்றுங்கள், இலட்சியத்தை அல்லஎன்ற கீத தர்ம உபதேசங்களை ஏற்று.

எமது மக்கள் தமது கனவுகளை எட்டுவதற்கு இதுவரை முயன்று தோற்றுப்போன  வழிமுறைகளை கைவிட்டு,..நாம் சொல்லும் நடை முறை சாத்தியமான நற்சிந்தனைகளை இன்னமும் ஏற்று நடந்தால்,..பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ நீதியின் உரிமை நோக்கி வெற்றியின் நம்பிக்கையோடு நடக்க முடியும்.

உலக நாடுகளெங்கும் சூழ்ந்திருக்கும் கொடிய நோயின் தாக்கங்கள் இலங்கை தீவையும் சூழ்ந்திருக்கிறது,. சூழ்ந்து வரும் துயர்களை உடைத்து சுபீட்சமான சுதந்திர வாழ்வை சகலரும் பூரணமாக அனுபவிக்கும் மகிழ் காலத்தை விரைவில் வென்றெடுப்போம்.

அறம் காப்போரை அறம் காக்கும். அறம் வெல்லும். அநீதி தோற்கும். எமது மக்களின் நம்பிக்கைகள் வெல்லட்டும்.” இவ்வாறு தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்  செயலாளர் நாயகமும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா எதிர்கால நம்பிக்கையோடு தைப்பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழும் சகல மக்களுக்கும் புது வாழ்வு பூக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts:

நெடுந்தீவு இறங்குதுறை விரிவாக்கம் நெடுந்தாரகையின் இலவச போக்குவரத்து குறித்து செயலாளர் நாயகம் டக்ளஸ் ...
பாதுகாப்பற்ற இரயில் கடவைக் காப்பாளர்களது பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிட்டனவா? டக்ளஸ் எம்.பி. நாடாளும...
அண்ணமார் சிவகாமி அம்பாள் ஆலய கட்டுமாணப்பணிகள் மட்டுமல்லாது இப்பகுதி மக்களது அபிவிருத்திக்கும் முழு...