நந்திக்கடல் பிரதேசத்தை நம்பி வாழும் குடும்பங்களின் வாழ்வாதார பாதிப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதா? – அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, July 6th, 2018

நந்திக்கடல் பகுதியை அபிவிருத்தி செய்வதற்கு ஏற்கனவே நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதனை இயற்கை ஒதுக்கிடமாக அடையாளப்படுத்துவதன் ஊடாக அதனை நம்பி வாழ்ந்து வருகின்ற சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதா? என அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது பிரதேச அபிவிருத்தி, நிலைபேறு அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

வடக்கு மகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டமனது தொடர்ந்து வறுமை நிலையில் இருந்து வருகின்ற நிலையில், சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் வகையில் முன்னாள் கடச்றொழில் மற்றும் நீரியல்; வளத்துறை அமைச்சராக இருந்த கௌரவ மகிந்த அமரவீர அவர்களிடம் நான் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க நந்திக்கடல் ஆற்றுப் பகுதியை அபிவிருத்தி செய்வதற்கு கடந்த வரவு – செலவுத் திட்டத்தின் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. மேற்படி நந்திக் கடலாற்றினை அபிவிருத்தி செய்வதன் ஊடாக சுமார் 10 ஆயிரத்திற்கும் மேலான கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு தங்களது வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகையதொரு நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல், வட்டுவாகல் மற்றும் நாயாறு போன்ற பகுதிகளை இயற்கை ஒதுக்கிடமாக அடையாளப்படுத்துவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

அந்தவகையில் நந்திக்கடல், வட்டுவாக்கல் மற்றும் நாயாறு போன்ற பகுதிகளை இயற்கை ஒதுக்கிடமாக அடையாளப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றனவா?

நந்திக்கடல் பகுதியை அபிவிருத்தி செய்வதற்கு கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் ஏற்கனவே நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதனை இயற்கை ஒதுக்கிடமாக அடையாளப்படுத்துவதன் ஊடாக அதனை நம்பி வாழ்ந்து வருகின்ற சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதா?

இயற்கை ஒதுக்கிடமாக மேற்படி பகுதிகள் அடையாளப்படுத்தப்படுமானால் எமது மக்களின் வாழ்வாதாரங்க்ள பாதிக்கப்படும் என்பதால், மேற்டித் திட்டத்தினை கைவிட்டு, எமது மக்களது வாழ்வாதாரங்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க முடியுமா? என்பதுடன் மேற்படி கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களையும் அமைச்சர் சரத் பொன்சேக்கா அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன்.

Related posts:


சிறந்த கல்வியியாளர்களை உருவாக்குவதற்கு நாம் தொடர்ந்தும் துணையிருப்போம் - டக்ளஸ் தேவானந்தா!
கட்டணம் செலுத்தும் பொதுமக்கள் மின்சாரத்தை வீண்விரயம் செய்வதில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்...
பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகி மீளக் கட்டியெழுப்பப்படும் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு செயல...