நடைமுறை சாத்தியமான வழிமுறைகளை இதயசுத்தியுடன் செயற்படுத்த முன்வாருங்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா அறைகூவல்!

Thursday, November 2nd, 2017

எமது நாட்டைப் பொறுத்த வரையில், அனைத்து இன மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில், முன்னெடுக்கப்படக்கூடிய நடைமுறைச் சாத்தியமான வழிமுறை தொடர்பில் நாம் ஆரம்பத்திலிருந்தே கூறி வந்துள்ளோம். அந்தவகையில் நடைமுறை சாத்தியமான வழிமுறைகளை முன்னெடுப்பதற்கும், அவ்வாறு முன்னெடுக்கப்படுகின்ற முயற்சிகளை இதயசுத்தியுடன் செயற்படுத்துவதற்கும் முன்வாருங்கள்  என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் அறைகூவல் விடுத்துள்ளார்.

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஆற்றிய உரையாற்றுகையிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கடந்தகால ஆட்சியில் வன்முறைக்கு தீர்வு காணப்பட்ட போதிலும், தேசிய நல்லிணக்கமானது வெற்றிபெற்றிருக்கவில்லை. அந்த வகையில் எமது நாட்டு மக்களிடையே சகோதர, சமத்துவ சூழலை ஏற்படுத்துவதற்கும், நல்ல நோக்கங்களை முன்வைத்து, தமிழ் மக்களை முன்னேற்றகரமான பாதையில் இட்டுச் செல்வதற்கும், ஜனாதிபதி அவர்களும், பிரதமர் அவர்களும் மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளுக்கு தமிழ் தலைமைகளும் ஆரோக்கியமான ஒத்துழைப்புகளை வழங்க முன்வர வேண்டும்

கடந்தகாலங்களில் எமது மக்களுக்குக் கிடைத்திருந்த பொன்னான வாய்ப்புகளை எல்லாம் தமிழ் தலைமைகள் எமது மக்களுக்காகப் பயன்படுத்தத் தவறிவிட்ட வரலாறுகளையே நாம் கண்டு வந்துள்ளோம். இந்த நிலையில் இப்போதாவது மாற்றம் தேவை.

அதுவே எமது மக்களுக்கு நன்மையைக் கொண்டு தரும். அந்த வகையில், புதிய அரசியல் யாப்பு தொடர்பிலான உள்ளடக்க விடயங்கள், அதனது தேவை என்பன குறித்த விடயங்களை வெறும் வாய்ப் பேச்சுடன் நிறுத்திக் கொள்ளாமல், மக்களிடையே கொண்டு செல்வதற்கு தமிழ் அரசியல் தலைமைகள் முன்வர வேண்டும்.

உத்தேச புதிய அரசியல் யாப்பு கொண்டுவரப்பட்டாலும், அல்லது தற்போதுள்ள அரசியல் யாப்பில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தாலும், சட்டவாக்கங்கள், ஒழுங்குவிதிகள் கொண்டு வரப்பட்டாலும், தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் கொண்டு வரப்படுகின்ற விடயங்கள் யாவும் முழுமையாக செயற்படுத்தப்படுகின்றன எனக் கூறுவதற்கில்லை.

குறிப்பாக, 1987ஆம் வருடத்தில் அரச கரும மொழிகள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையின் அரச கரும மொழி சிங்கள மொழியாதல் வேண்டும். தமிழும் அரச கரும மொழி ஒன்றாதல் வேண்டும் என எமது அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது, சிங்களமும், தமிழும் இலங்கையின் அரச கரும மொழியாதல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். எனினும், இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு, இன்று 30 வருடங்கள் ஆகின்றன. இந்த 30 வருடங்களில் அரச கரும மொழிகள் சட்டம் முழுமையாக செயற்படுத்தப்பட்டுள்ளதா? இல்லை.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலமான 13வது திருத்தச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள அதிகாரங்கள் முழுமையாக இதுவரையில் மாகாண சபைகளின் ஊடாக செயற்படுத்தப்பட்டுள்ளனவா? இல்லை! காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை.

எமது பகுதிகளில் இருக்கின்ற தனியார் காணி, நிலங்கள்கூட எவ்விதமான சட்ட ஏற்பாடுகளும் இன்றி கையகப்படுத்தப்பட்டு, சொந்த காணி, நிலங்களை விடுவித்துக் கொள்வதற்காக எமது மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.

இப்படியே போனால், எமது மக்கள் தங்களது சொந்த காணி, நிலங்களில் வாழ்ந்ததைவிட, அந்த காணி, நிலங்களுக்காகப் போராடி வீதியில் வாழ்ந்திருக்கும் காலமே அதிகமாக இருக்கும் நிலையே தோன்றியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்ஹ பிரேமதாச அவர்களது காலத்தில், அரச நியமனங்களில் இன விகிதாசாரம் பேணப்பட வேண்டும் என 1990/15ஆம் இலக்க சுற்றறிக்கை கொண்டு வரப்பட்டது, அது இன்று செயற்படுத்தப்படுகின்றதா? இல்லை!

இத்தகையதொரு நிலையில், தமிழ் மக்களுக்கு ஒருமித்த நாடு என்றும், சிங்கள மக்களுக்கு ‘ஏக்கீய ராஜ்ய’ – ஒற்றையாட்சி என்றும் கூறிக் கொண்டு, ஈரின மக்களையும் சந்தேகங்களுக்கு உட்படுத்தி, எதிரிகளாக்கி, பிரித்து விடாமல்,

நடைமுறை சாத்தியமான வழிமுறைகளை முன்னெடுப்பதற்கும், அவ்வாறு முன்னெடுக்கப்படுகின்ற முயற்சிகளை இதயசுத்தியுடன் செயற்படுத்துவதற்கும் முன்வாருங்கள் என்றே நான் கேட்டுக் கொள்கின்றேன்.

எமது நாட்டைப் பொறுத்த வரையில், அனைத்து இன மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில், முன்னெடுக்கப்படக்கூடிய நடைமுறைச் சாத்தியமான வழிமுறை தொடர்பில் நாம் ஆரம்பத்திலிருந்தே கூறி வந்துள்ளோம்.

புதிய அரசியல் யாப்பு குறித்து அல்லது தற்போதுள்ள அரசியல் யாப்பில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து முன்னெடுக்கப்படுகின்ற முயற்சிகள் சாதகமான நிலையை எட்டுவதைவிட, பாதகமான நிலைக்கே அது இன்று தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில்,

இதற்கான இதுவரை காலமானதும், மேலதிகமானதுமான முயற்சிகள் அனைத்தும் வீண்விரயமாகிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், தொடர்ந்தும் காலத்தை வீணடிக்காமல், நாம் கூறி வருகின்ற நடைமுறைச் சாத்தியமான வழிமுறை பற்றி ஆராயுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

தற்போது இங்கு முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையானது, 13வது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சில அம்சங்களில் கூடிய முன்னேற்றங்களைக் கொண்டிருந்தாலும், குறிப்பிட்ட சில விடயங்களில் 13வது திருத்தச் சட்டத்தைவிட பாதகமான அம்சங்களைக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, இது முழுமைப்படுத்தப்பட்ட புதிய அரசியல் யாப்பாக உருவாகும் நிலையில், மேற்படி பாதகத் தன்மைகள் அகற்றப்பட வேண்டும்.

இருப்பினும், அத்தகையதொரு புதிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்படுவது சாத்தியப்படாத நிலை ஏற்படுமானால், நாங்கள் தொடர்ந்து முன்வைத்து வருகின்ற நடைமுறைச் சாத்தியமான வழிமுறை குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts:


வடக்கு போக்குவரத்து சபைகளில் இடம்பெற்ற பதவி உயர்வு முறைகேடுகள் இன்னமும் உரியவாறு விசாரிக்கப்படவில்லை...
வடக்கில் அதிகரித்துவரும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் – டக்ளஸ்...
எமக்கு ஆதரவான மக்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் நிலை தடுமாற மாட்டார்கள் – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்...