நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். எதிர்காலத்தை வளம் மிக்கதாக கட்டியெழுப்ப நம்பிக்கையுடன் அணி திரண்டு வாருங்கள்’ – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, September 15th, 2016

‘எனக்கும் பிரபாகரனுக்கும் இலக்கு ஒன்றுதான் ஆனால் அதற்கு பிரபாகரன் கொடுத்த வடிவமும், முன்னெடுத்த அணுகுமுறையும், நான் வகுத்துக்கொண்ட வடிவமும், முன்னெடுத்த அணுகுமுறையுமே வேறானவை என்று முன்னாள் புலிப்போராளிகளுக்கு தன்நம்பிக்கை கொடுத்து நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். எதிர்காலத்தை வளம் மிக்கதாக கட்டியெழுப்புவோம் நம்பிக்கையுடன் என்னுடன் அணி திரண்டு வாருங்கள்’ என்று கூறி தனது கொள்கை நோக்கி அழைத்த தோழர் டக்ளஸ் தேவானந்தா, தான் ஒரு தளராத கொள்கைப் பற்றாளர் என்பதை எமக்கு உணர்த்தியுள்ளார் – என முல்லைத்தீவு மக்களுடனான கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருவரது முகநூலில் பதிவிடப்பட்டுள்ளது. குறித்த பதிவை எமது EPDPNEWS.COM இணையத்தள வாசகர்களுக்காக பதிவிடுகின்றோம்.

அண்மையில் முல்லைத்தீவிலிருந்து தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து தமது தேவைகளையும், வாழ்வியல் துயரங்களையும், தாம் எதிர்கொள்ளும் அரசியல் புறக்கணிப்புக்களையும் எடுத்துக் கூறுவதற்காக பொது மக்களும், முன்னாள் புலிப் போராளிகளும் வருகை தந்திருந்தார்கள்.

அவர்களில் யுத்தத்தில் அங்கங்களை இழந்தவர்களும், கணவனை இழந்தவர்களும், உறவுகளை இழந்தவர்களுமாக இப்போதும் யுத்த வடுக்களை சுமந்து கொண்டிருப்பவர்களே அதிகமாக இருந்ததைக் கண்டேன்.

ஆரம்பத்தில் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் வருவதற்கே பின் நின்றோம், ஆனால் நீங்கள் அமைச்சராக அதிகாரத்தில் இருந்தபோதே உங்களைத் தேடி அல்லது நீங்கள் அணி திரண்டு வாருங்கள் என்று அழைத்தபோது உங்களுடன் வராமலிருந்த தவறை இப்போது உணர்ந்து கொண்டவர்களாகவே வந்திருக்கின்றோம் என்று அவர்கள் நேர்மையாக கூறிய வார்த்தைகளை கேட்டு நெகிழ்ந்துபோனேன்.

சுமார் நான்கு மணி நேரமாக முல்லைத்தீவிலிருந்து வந்திருந்தவர்களுக்கும், தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் இடையே இடம்பெற்ற பரஸ்பர கலந்துரையாடலுக்குப் பிறகு இப்படி ஒரு பதிவை எழுத எண்ணினேன்.

தனது கண்ணை இழக்க காரணமானவனையும் கட்டியணைத்து மன்னித்த மக்கள் தலைவர். தமிழ் மக்களுக்கு உரிமைகளுடன் கூடிய ஒளிமயமான எதிர்காலம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்து ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கி ஜனநாயக வழிமுறையூடாக தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கும் தோழர் டக்ளஸ் தேவானந்தா ஒற்றைக் கண்ணுடன் உலா வந்தாலும் தமிழ் மக்களின் துயரங்களையும், தேவைகளையும் ஆயிரம் கண்களால் அறிந்து கொள்பவர்.

காரைநகரில் கடற்படையுடனான மோதலில் ஈழப் போராடத்தில் களப் பலியான முதல் பெண் போராளியான சோபா, டக்ளஸ் தேவானந்தாவின் தங்கை. புலிகளால் கடத்திக்கொலை செய்யப்பட்டவர்களில் தனது உடன் பிறந்த சகோதரன் பிரேமானந்த் என்பவரையும் இழந்தவர்.

தோழர் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களாகவும், கண்களாகவும், பாதுகாப்பு அரண்களாகவும் தோள் கொடுத்து நின்ற சக தோழர்களை புலிகள் கொலை செய்தபோது அந்த இழப்புக்களையும், வலிகளையும் சுமந்து, சுரந்த கண்ணீரை தனக்குள்ளேயே சேமித்துக் கொண்டு ஏனைய தோழர்களுக்கு தைரியம் போதித்த உருக்கு மனிதன்.

விடுதலையின் பெயரால் அப்பாவித் தமிழ் மக்கள் பலியாவது கண்டும், சகோதரப் படுகொலையில் தமிழரின் போராட்டச் சக்திகள் சுட்டு சரிக்கப்பட்டது கண்டும் பொங்கியெழுந்து மனித உரிமைகள் தொடர்பாகவும்,

கருத்துச் சுதந்திரம் தொடர்பாகவும் மாற்றுக் கருத்தை முன்வைத்த தோழர் டக்ளஸ் தேவானந்தா பயங்கரவாத இருளுக்குள்ளும் பிரகாசித்த தமிழர்களின் ஜனநாயக அடையாளமாகத் திகழ்ந்தவர்.

தன்னை கொன்றொழிக்கும் நோக்கத்துடன் தற்கொலைக் குண்டுதாரியை அழைத்துவந்த சதிலீலாவதியை ‘ நான் மன்னிக்கிறேன் அவரை விடுதலை செய்யுங்கள்’ என்று நீதிமன்றத்தில் தோன்றி வாக்குமூலம் வழங்கிய மன்னிப்பின் மறுவடிவம் தோழர் டக்ளஸ் தேவானந்தா.

களுத்துறைச் சிறையில் 1998ஆம் ஆண்டு விடுதலை கோரி சாகும்வரை உண்ணாவிரதமிருந்த தமிழ்க் கைதிகளின் வலிந்த அழைப்பை ஏற்று, அவர்களைப் பார்க்க நேரில் சென்று ‘விடுதலை பெற்றுத் தருகின்றேன்.

உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள். அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்கு மூன்று மாதகால அவகாசம் தாருங்கள்’ என்று கேட்டுக்கொண்டு சாகும் தருவாயில் இருந்தவர்களுக்கு தண்ணீர் குடிக்கச் செய்த தோழர் டக்ளஸ் தேவானந்தாவை கைதிகளாக சிறைக்குள்ளிருந்த புலிகள் சூழ்ந்து சாகும்வரை தாக்கினார்கள்.

அந்தத் தாக்குதலில் மூன்று நாட்கள் அசைவற்றுக்கிடந்த தோழர் டக்ளஸ் தேவானந்தாவை காப்பாற்றும் முயற்சியில் நம்பிக்கை இழந்து வைத்தியர்களே கையை விரித்தபோதும், வரம்வாங்கி தோழர் டக்ளஸ் தேவானந்தா மக்களுக்காக மறுபிறவி எடுத்து வந்தார்.

புலிகள் நடத்திய கொலைகார தாக்குதலானது தலைக்கு வந்தது ஒற்றைக் கண்ணோடு போன வரலாறாகிப் போனது இன்றளவும் ஒற்றைக் கண்ணுடன், தோழர் டக்ளஸ் தேவானந்தா தன் கடமைப்பொறுப்பை உறுதியோடு முன்னெடுத்து வருகின்றார்.

களுத்துறையில் தன் மீது தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரான பாஸ்கரன் எனும் முன்னாள் புலிப் போராளியை அன்மையில் சந்தித்தபோது, புன்முறுவலோடு அவரை அருகில் அழைத்து அவரின் கைகளை பற்றிப் பிடித்து ‘ நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.

எதிர்காலத்தை வளம் மிக்கதாக கட்டியெழுப்புவோம் நம்பிக்கையுடன் என்னுடன் அணி திரண்டு வாருங்கள்’ என்று கூறி தன்னை கொலை செய்ய வந்தவனையும் கொள்கை நோக்கி அழைத்த தோழர் டக்ளஸ் தேவானந்தா தான் ஒரு தளராத கொள்கைப் பற்றாளர் என்பதை உணர்த்தியவர்.

‘எனக்கும் பிரபாகரனுக்கும் இலக்கு ஒன்றுதான் ஆனால் அதற்கு பிரபாகரன் கொடுத்த வடிவமும், முன்னெடுத்த அணுகுமுறையும், நான் வகுத்துக்கொண்ட வடிவமும், முன்னெடுத்த அணுகுமுறையுமே வேறானவை என்று முன்னாள் புலிப்போராளிகளுக்கு தன்நம்பிக்கை கொடுத்து அரவணைப்புச் செய்யும் தோழர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு இப்போது முன்னாள் புலிகள் கூறியது ‘நாங்கள் பெரியப்பாவை இழந்துவிட்டோம்.

இப்போது சித்தப்பாவாகிய நீங்கள்தான் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும்’ என்பதுதான். சித்தப்பா அதாவது தோழர் டக்ளஸ் தேவானந்தா அழிவுக்கு வழிகாட்டமார் என்ற பெரு நம்பிக்கையும்,ஆக்கத்திற்கும், ஒளி மயமான எதிர்காலத்திற்கு வழி காட்டுவார் என்ற அனுபவ நம்பிக்கையுமே முன்னாள் புலிப் போராளிகளிடம் தற்போது மேலோங்கி இருப்பதை காண முடிகின்றது.

தற்போதுள்ள தமிழ் அரசியல் தலைமைகளிடையே போராட்டங்களை முன்னெடுத்த தலைமையாகவும், போராட்டத்தில் தனது அங்கத்தையும், தனது உடன் பிறப்புக்களையும்,உடன் பிறவா சக தோழர்களையும் இழந்த வலியையும், போராட்ட வடுக்களையும் சுமந்த தலைவராகவும் இருப்பவர் தோழர் டக்ளஸ் தேவானந்தா மட்டும்தான் என்பதால் அவருக்கே தமது வலிகளையும்,

வாழ்வியல் துயரங்களையும் புரிந்து கொள்ள முடியும் என்றும் முன்னாள் புலிகளிடையே ஏற்பட்டுள்ள புரிதல் காரணமாகவே தோழர் டக்ளஸ் தேவானந்தாவை சித்தப்பா என்று உரிமையோடு அழைக்கத் தொடங்கியிருக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன்.

DSC05392

Related posts:

மாகாணசபை முறைமை உரிமை போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட...
தீவகத்தில் கடலட்டை வளர்ப்பு தொடர்பில்  நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!
மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் கிறிஸ்தவ பாடநெறிக்கு தெரிவு செய்யப்பட்ட யாழ். மாவட்ட ஆசிரியர்கள் அ...