நச்சு விதைகளா நல்ல கனி தரும் விதைகளா? – மன்னாரில் அமைச்சர் டக்ளஸ்!
Thursday, October 12th, 2023
~~~~~
நாம் சொல்லும் கருத்துக்கள் சத்திய வாக்குகள் போன்றவை.
அவை என்றும் தோற்பதில்லை.
வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் நாம் கொண்டிருக்கும் கருத்துக்களும் அதற்கான வழிமுறைகளும் ஒரு போதும் தோற்காது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்திற்கான விஜயத்தினை இன்று(12.10.2023) மேற்கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, பல்வேறு மக்கள் சந்திப்புக்களிலும் கலந்து கொண்ட போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும்,
“எமது தீர்க்கதரிசனங்களும், நம்பிக்கை தரும் எமது சாத்தியமான வழிமுறைகளுமே இன்று வெல்லப்பட்டிருக்கிறது,.
எமது சத்திய நியாயங்களையே வரலாறு இன்று சரியென்று ஏற்றிருக்கிறது,..
அதை ஏற்பது போல் எல்லோருமே வந்திருக்கிறார்கள்,..
ஆனாலும் மக்களாகிய நீங்கள் புறாக்களை போல்
கபடமற்றவர்களாக இருந்தாலும் சர்ப்பங்களை போல்
விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்,..
ஏனெனில் சமாதானத்தின் எதிரிகள் எல்லா இடங்களிலும் இருப்பார்கள்,
அவர்கள் புறாக்களைப்போல் வேடமிட்டு உங்களிடம் வருவார்கள்,..
மீண்டும் உங்கள் வாழ்வின் மீது துயரச்சுமைகளை சுமத்த எத்தனிப்பார்கள்.
நல்லவர்கள் போல் நடித்து நாளுக்கு நாள், வாரத்திற்கு வாரம் புதிய புதிய பிரச்சினைகளை உருவாக்குவார்கள்.
குழப்பங்களுக்கு தீர்வு காண எத்தனிக்காமால்
குழப்பங்களை வைத்து கூச்சலிட்டு அடுத்த தேர்தலுக்கான
அத்திவாரத்தை கட்டுவார்கள்,..
கடந்த காலங்களில் கற்பாறைகளில் விதைத்து
நச்சுக்கனி தரும் மரங்களை உங்களுக்கு தந்தது போல் இனியும்
அவர்கள் எத்தனிப்பார்கள்,..
பசுந்தரைகளில் விதைத்து நல்ல கனிதரும் விதைளையே
உங்கள் மத்தியில் நாம் விதைத்து வருகின்றோம்.
நிரந்தர சமாதானம்,. நீடித்த சமவுரிமை,.. துயரச்சுமைகளை சுமந்த எமது மக்களுக்கு ஒரு நியாயத்தீர்ப்பு,.. இதுவே எமது இலட்சியம்.” என்று தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|