தோழர் தா. பாண்டியனின் மரணம் வரலாற்றை எமக்கு திரும்பி பார்க்க வைத்திருக்கிறது – அனுதாபச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, March 1st, 2021

தண்ணீர் ஊற்றியா வளர்த்தோம்?..  எமது இரத்தமும் தசையுமாய் மட்டுமன்றி தோழர் தா. பாண்டியன்  போன்றவர்களின் அயலக உறவுகளின் ஆதரவுத்தளமும் கலந்து  வளர்ந்ததுதான் எமது அறம் சார்ந்த ஆரம்பகால நீதியான உரிமைப்போராட்டம்.

நெஞ்சில் உறுதி கொண்டு ஈழத்தமிழ் மக்களுக்கு  நேசக்கரம் நீட்டியவர் தோழர் த. பாண்டியன் அவர்கள்!… எமது நெடுங்கனவை வெல்லும் ஆதரவுத்தளம் தேடி அன்று நாம் தமிழகம் சென்று தங்கியிருந்த போது,நாம் எடுத்த முயற்சிகள் ஒவ்வொன்றிலும் தோழர் தா, பாண்டியனின் முகம் தெரிந்தது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தோழர் தா. பாண்டியன் அவர்களது மறைவு குறித்து விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த செய்திக் குறிப்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் –

ஈ.பி.ஆர்.எல்.எவ் என்ற சுதந்திர விடுதலை இயக்கத்தை நாம் கட்டியெழுப்ப நடத்திய பிரச்சாரக்கூட்டங்கள், கண்காட்சிகள், நிதிசேகரிப்பு நிகழ்வுகளெங்கும் தோழர் தா. பாண்டியனின் ஆதரவுக்கரம் நீண்டிருக்கிறது.

நாம் போகும் இடமெல்லாம் பொதுவுடைமை கொள்கை சார்ந்தவர்களையும் மனிதநேய உணர்வுமிக்கவர்களையும், போராட்ட உணர்வாளர்களையும்  எமக்கு அறிமுகம் செய்து வைத்தவர் தோழர் தா. பாண்டியன் அவர்கள்.

நீதியான ஒன்றாக எமது உரிமைப்போராட்டம் எழுச்சியுற்ற போது அவர் மகிழ்ச்சியுற்றவர். அது அழிவு யுத்தமாக மாறிய சூழலில் அது கண்டு துயருற்றவர். பாரத மற்றும் தமிழக மக்களின் உணர்வுகளை மட்டுமன்றி  ஈழத் தமிழ் மக்களின் உணர்வுகளையும் ஏந்தி நின்ற நெஞ்சுடனும் நிறம் மாறாத சிவப்பு சால்வையை சுமந்து நின்ற தோள்களுடனும் அவர் தனது உயிர் மூச்சை நிறுத்திக்கொண்டார்.

தோழர் தா. பாண்டியன் அவர்களுக்கு ஈழத்தமிழ் மக்களின் சார்பாக எனது அஞ்சலி மரியாதை!  அவரது இழப்பில் துயருறும் இந்திய கம்யுனிஸ் கட்சி தோழர்களுக்கும் தமிழக மக்களுக்கும் எனது ஆழ்மன ஆறுதல்!

அமைச்சர் (தோழர்) டக்ளஸ் தேவானந்தா

செயலாளர் நாயகம்,

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி.(ஈ.பி.டி.பி.)

Related posts: