தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கைக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் –  டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்!

Monday, October 17th, 2016

தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளக் கோரிக்கைக்கு நியாயத்தின் அடிப்படையில் தீர்வு காணப்படவேண்டும். கம்பனிகள் இலாபத்தில் இயங்குகின்றபோது அந்த இலாபத்தை தொழிலாளர்களுடன் பங்கிட்டுக் கொண்டதில்லை. அதுபோலவே கம்பனிகள் நட்டத்தில் இயங்குகின்றன என்றால் அதற்கு தொழிலாளர்கள் பொறுப்பேற்க முடியாது. எனவே கம்பனிகள் தமது திறனற்ற செயற்பாட்டினால் ஏற்படுகின்ற பின்னடைவை தொழிலாளர்கள் மீது சுமத்தி தொழிலாளர்களின் கோரிக்கையை நிராகரிக்க முடியாது என்று செயலாளர்  நாயகம் டக்ளஸ் தேவானந்தா  தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வுக் கோர்க்கைக்கு ஆதரவு தெரிவித்து ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே செயலாளர் நாயகம் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்திருப்பதுடன் மேலும் அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  தொழிலாளர்கள் அவர்களுக்குரிய நேரத்திற்குள் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள அளவில் தேயிலையை பறித்தெடுக்கும் வேலை பங்கீடுகளை கடுமையான நடைமுறைகளின் கீழாக செயற்படுத்தும் கம்பனிகள் அவர்களின் உழைப்புக்கு ஏற்ற சம்பளத்தை வழங்கவேண்டும்.

ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வுப் போராட்டத்தை காலத்துக்குக் காலம் தொழிலாளர்கள் வலியுறுத்திப் போராடி வந்திருக்கின்றார்கள். தற்போதைய விலைவாசி உயர்வுகள், பொருளாதார நெருக்கடிகள், ஆகியவற்றை எதிர்கொள்வதற்கு சம்பள உயர்வு வழங்கப்படுவது அவசியமாகும்.

இவ்விடயத்தில் அரசியல் தலைமைகள், தொழிற்சங்கங்கள் என்பவற்றோடு இணைந்து அரசாங்கமும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கைக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். கம்பனிகள் சாதகமான பதிலளிப்பைச் செய்யவில்லை என்றால் அந்தக் கம்பனிகளை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்.

பராமரிப்பில்லாமல் இருக்கும் தோட்டங்களை தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிப்பதுடன் அவர்களுக்கு தேயிலைச் செடிகளை நடுகை செய்வதற்கும், அதனை உகந்தவாறு பராமரிப்பதற்கும் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். புதிய அணுகுமுறையுடன் தேயிலை வளத்தை பாதுகாப்பதற்கும், லாபத்தை நோக்கி தேயிலைத் தொழில்துறை முன்னேற்றுவதற்கும் விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் வேண்டும்.

அதேபோல் வடக்கு மாகணத்திலும் வயல் வேலைகளிலும், தோட்ட வேலைகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த சம்பளமே வழங்கப்படுகின்றது. 500 ரூபாவுக்கும் குறைவான சம்பளமே நாளாந்த சம்பளமாக வழங்கப்படுவதாக பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் எனது கவனத்திற்கு தெரியப்படுத்தியிருக்கின்றார்கள்.

பெரும்பாலும் பெண்களையே வயல் வேலைகளிலும், தோட்ட வேலைகளிலும் அமர்த்துவோர் அவர்களுக்கு மிகக் குறைவான சம்பளத்தையே வழங்குகின்றனர். எனவே தொழிலாளர் நலன் மற்றும் நியாயமான சம்பளம் என்ற விடயத்தில் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரமல்லாது நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளவர்கள் தொடர்பாகவும் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தவேண்டும்.

dd

Related posts: