தொழிலாளர்கள் சார்ந்த சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Tuesday, September 17th, 2019

சுதந்திர வர்த்தக வலைய ஆடைத் தொழிற்சாலைகளில் பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்களது நிலைமைகளும் சம்பள விடயங்களைப் பொறுத்தமட்டில் மிகவும் பின்தங்கிய நிலையியே காணப்படுகின்றன. பொருளாதார நிலையில் மிகவும் பின்னடைந்த, வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழுகின்ற தூர இடங்களைச் சேர்ந்த பெரும்பாலான யுவதிகள் – பெண்கள் தங்களது வாழ்க்கை நிலையை ஓரளவுக்கேனும் வடிவமைத்துக் கொள்வதற்காக இத்துறையை நாடி வருகின்றனர்.

ஆனால், இவர்களது உழைப்பினை முடிந்தவரையில் உறிஞ்சுகின்ற நிர்வாகத் தரப்பினர், இவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற சம்பளம் தொடர்பிலோ, இவர்களுக்கான நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகள் தொடர்பிலோ அக்கறை கொள்ளாத நிலைமைகளே காணப்படுகின்றன. இந்தப் பெண் உழைப்பாளர்களது ஊதிய உயர்வுகள் தொடர்பில் ஊதிய நிர்ணய சபையினால் எத்தகைய ஏற்பாடுகளை மெற்கொள்ள முடியும்? என்கின்ற கேள்வி எழுகின்றது.

குறிப்பாக, தனியார்துறையைப் பொறுத்த மட்டில் ஊதிய நிர்ணய சபையானது மூன்றில் ஒன்றுக்கும் குறைந்த தொகையினருக்கே உரித்தாகின்றது எனவும் கூறப்படுகின்றது. ஏனைய பெரும்பாலான பணியாளர்களுக்கு இச் சபையானது உரித்தற்ற வகையிலேயே அமைந்துள்ளதாகவும் தெரிய வரும் நிலையில், தனியார்துறை பணியார்களது சம்பளப் பிரச்சினை தொடர்பில் பாதுகாப்பற்றதொரு நிலைமையே இந்த நாட்டில் காணப்படுவதாகத் தெரிய வருகின்றது.

இந்த சம்பள நிர்ணய சபையானது தனியார்துறைப் பணியாளர்களது சம்பளத்தை உயர்த்துகின்ற நிலையிலும், அந்த சம்பள உயர்வானது, புதிதாக இணைத்துக் கொள்ளப்படுகின்ற பணியாளர்களது ஆரம்ப சம்பளம் தொடர்பில் சம்பந்தப்படுகின்றதே அன்றி தற்போது பணியில் இருக்கின்ற பணியாளர்களது சம்பளத்தை உயர்த்துவதற்கு சம்பள நிர்ணயச் சபைக்கு உரிமை இல்லை எனவும் கூறப்படுகின்றது.

எனவே, இத்தகைய தொழிலாளர்கள் சார்ந்த சட்டங்கள் திருத்தப்பட்டு, அனைத்து உழைக்கும் மக்களுக்கும் போதிய பயன்களை அடையக்கூடிய வகையில் அவை மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

அனைத்தத் தனியார்துறை பணியாளர்களினதும் ஊதியம் உள்ளிட்ட தொழில் ரீதியிலான பாதுகாப்பினை முழுமையாக வழங்குவதற்குச் சட்டங்களால் இயலாதுள்ள நிலையில், தற்போது தனியார்துறை சார்ந்து நடைமுறையில் இருந்து வருகின்ற 54 தொழிலாளர் கட்டளைச் சட்டங்களுக்குப் பதிலாக ‘ஒற்றை தொழிலாளர் சட்டம்’ என்கின்ற தனி தொழிலாளர் சட்டம் ஒன்று கொண்டு வரப்படுவதற்கான ஆயத்தங்கள் தொடர்பிலும் அண்மைக் காலமாகப் பேசப்பட்டு வருகின்றது.

இந்தப் புதிய சட்டத்தைக் கொண்டு வருவதில் அமெரிக்க யூ. எஸ். ஏட் அமைப்பின் தலையீடு இருப்பதாகவும் பிரஸ்தாபிக்கப்பட்டும் வருகின்றது.

இந்தச் சட்டமானது தொழில் அமைச்சுக்குத் தெரியாத வகையில், அபிவிருத்தி மூலோபாய மற்றும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சானது யூ. எஸ். ஏட் அமைப்பின் உதவியுடன் இதனை மேற்கொண்டு வருவதாகவும், இதன் மூலம் தனியார்துறைப் பணியாளர்கள் தற்போது அனுபவித்து வருகின்ற சொற்ப உரிமைகளும் பறிக்கப்பட்டு விடும் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டும் வருகின்றது.

குறிப்பாக, தனியார்துறை தொழில்வாய்ப்புகள் தொடர்பிலான அனைத்து நிபந்தனைகளையும் வகுக்கின்ற அதிகாரத்தை முதலாளிமார்களிடம் வழங்குவது, இதற்கென சம்பள நிர்ணய சபையினை இரத்துச் செய்து தனியார்துறையின் அனைத்துத் தொழிற்துறை மற்றும் பணிகள் தொடர்பிலான குறைந்தபட்ச சம்பளத்தைத் தீர்மானிக்கின்ற அதிகாரத்தை முதலாளிமார்களிடம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை இந்த ஒற்றை தொழிலாளர் சட்டம் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகின்றது.

இத்தகைய ஏற்பாடானது, அடிப்படையில் தொழிலாளர் உரிமைகள் மற்றும் மனித உரிமைகளை மீறுகின்ற ஏற்பாடாகும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்ற நிலையில், தொழில் அமைச்சு இது தொடர்பில் என்ன விளக்கங்ளைக் கொண்டிருக்கின்றது? என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற சிரம வாசனா எனப்படுகின்ற உழைப்பு அதிஸ்ட நிதியம், சம்பளச் சபைகள் திருத்தச் சட்டமூலம் மற்றும் தொழிற்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழான கட்டளைகள் என்பன தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே  உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts:

வடக்கில் மீண்டும் விளைநிலங்கள் உயிர் பெறும் - விவசாயம் தளைத்தோங்கும்: வன்னியில் அமைச்சர் டக்ளஸ் திட...
நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் - எமது மக்கள் சார்ந்த நல்ல விடயங்களுக்காக ஜனாதிபதிக்கு தேவையான ஒத்...
கிளிநொச்சி சட்ட விரோத மணல் அகழ்வை தடுக்க நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் தலைமையிலான ஒருங்கிணைப்பு குழுக்...

சூளைமேட்டுச் சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை தெளிவுபடுத்தினார்  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்த...
இரணைமடு நீர்ப்பாசன திணைக்கள ஒதுக்கீட்டுக் காணியில் பயிர் செய்யும் விவசாயிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவா...
வேலணையில் உருவாகிறது நவீன இறால் வளர்ப்பு பண்ணை – அங்குரார்ப்பணம் செய்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவ...