தொழிலாளர்கள் சட்டங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா? – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி. கேள்வி!

Wednesday, June 6th, 2018
தொழிலாளர்கள் தொடர்பில் வகுக்கப்படுகின்ற சட்டங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கும், அவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா? என்பது தொடர்பில் தொடர் கண்காணிப்பகளை மேற்கொள்வதற்கும் உரிய ஏற்பாடுகள் அவசியம்  என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற  கடை, அலுவலக ஊழியர்கள் – ஊதியம் மற்றும் ஊழியம் ஒழுங்குபடுத்தல் திருத்தச் சட்டமூலம், மகப்பேற்று நன்மைகள் திருத்தச் சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளர்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
இன்று எமது நாட்டைப் பொறுத்தவரையில் ஒரு பக்கம் தொழில்வாய்ப்புகளற்ற நிலையில் பல்லாயிரக் கணக்கானோர் இருக்கின்ற நிலையில், சீனா, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டு, தொழில்களில் ஈடுபடுத்துகின்ற நிலைமையே உருவாகியிருக்கின்றது. இத்தகைய நிலைமைக்கு காரணம் யாது? என்பது கண்டறியப்படாத நிலைமையிலேயே இந்த நாட்டின் கொள்கை வகுப்புகள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.
இருக்கின்ற வேலைவாய்ப்புகளுக்கேற்ற ஆளணிகள் இல்லை. வேலைவாய்ப்புகளற்று இருப்போருக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் இல்லை.மறு பக்கத்தில் பார்க்கின்றபோது, எமது பகுதிகளில் அரச தொழிற்துறைகள் அற்ற ஏனைய தனியார்த்துறைகள் சார்ந்து செயலில் இருக்கின்ற தொழிற்துறைகளில் எவ்விதமான தொழில் முறை சட்டங்களும் பின்பற்றப்படாத நிலையே பெரிதும் காணப்படுகின்றது.
வேலை நேரம் தவிர்ந்த மேலதிக நேரங்களில் பெறப்படுகின்ற வேலைகளுக்கென மேலதிகக் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை. ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பன வழங்கப்படுவதில்லை.
அதிக ஊதியம் வழங்கப்பட வேண்டிய காரணங்களால், ஆண்களை அமர்த்த வேண்டிய வேலைகளில், குறைந்த ஊதியங்களில் பெண்கள் தொழிலில் அமர்த்தப்பட்டு, அவர்களது உழைப்பு சுரண்டப்படுகின்ற நிலைமைகளும், இத்தகைய பெண் தொழிலாளருக்குரிய அத்தியாவசிய விடுமுறைகளும்கூட வழங்கப்படாத நிலைமைகளும்  ஏராளமாகும்.
குறிப்பாகக் கூறப்போனால், எமது பகுதிகளில் தொழிலாளர்கள் அடிமைகளைப் போன்றே நடத்தப்படுகின்ற நிலைமைகளையே மிக அதிகமாகக் காணக்கூடியதாகவுள்ளது.
அதேநேரம், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு என இந்த அரசு போசாக்கு திட்டங்களை அறிவித்துள்ள போதிலும், அத் திட்டமானது எமது பகுதிகளைப் பொறுத்தவரையில் வேண்டா வெறுப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவே தெரிய வருகின்றது. பாவனைக்குதவாத பொருட்கள் போசாக்கு என்ற போர்வையில் வழங்கப்படுகின்றன.
எனவே, தொழிலாளர்கள் தொடர்பில் வகுக்கப்படுகின்ற சட்டங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கும், அவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா? என்பது தொடர்பில் தொடர் கண்காணிப்பகளை மேற்கொள்வதற்கும் உரிய ஏற்பாடுகள் அவசியம் என்பதையும், சட்டங்கள் மீறப்படுகின்ற நிலையில், அதற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கூடிய வலுவான ஏற்பாடுகளும் அவசியமாகும் என்பதையும் வலியுறுத்துகின்றேன்.

Related posts:

கைத்தொழிற்துறை ஊக்குவிப்பு தொடர்பில் பல முன்மொழிவுகள் : ஆரோக்கியமான நிலை  என்றே கருதுகின்றேன் -  டக்...
யாழ். இராமநாதன் நுண்கலை அக்கடமிக்கு உத்தியோகப்பூர்வ அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் -  நாடாளுமன்றில் டக்...
போதைப்பொருள் கடத்தலை கடற்படையால் கட்டுப்படுத்த முடியாதா? - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!