தொல்பொருள் திணைக்களத்தின் தொல்லைக்கு கூட தீர்வு காணமுடியாதவர் எப்படி நிரந்தர தீர்வை பெற்றுத் தருவார்? – டக்ளஸ் எம்.பி கேள்வி!
Monday, August 26th, 2019யுத்தம் நிறைவுக்கு வந்தபின்னரும் எமது மக்களுக்கு தொல்லைகொடுத்துவரும் ஒரு தரப்பாக தொல்பொருள் திணைக்களம் இருந்துவருகின்றது. அந்த தொல்பொருள் திணைக்களத்தை தன்வசம் வைத்துள்ள அமைச்சர் ஒருவர் ஜனாதிபதியாக தான்தான் வரவுள்ளதாக மக்களிடையே கூறிவருகின்றார்.
சாதாரண தொல்பொருள் திணைக்களத்தின் பிரச்சினைகளுக்கே தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வை பெற்றுத்தராத அவர் எவ்வாறு தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கான தீர்வை பெற்றுத்தருவார் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
வடக்கில் அதிகமான காணிகளை தொல்பொருள் திணைக்களம் தனக்குரியதென சூரையாடி வருகின்றது. இதனால் எமது மக்கள் தமது பூர்வீகமாக வாழ்ந்துவந்த பல இடங்களை இழந்து வருகின்றார்கள். இது தொடர்பில் நான் பல தடவை குறித்த அமைச்சரிடம் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பி பதிலளிக்குமாறும் தீர்வு காணுமாறும் கோரியிருக்கின்றேன். ஆனால் இன்றுவரை அதற்கான பதிலையோ அன்றி தீரவையோ வழங்காது அவர் இருந்து வருகின்றார்.
ஆனால் அந்த அமைச்சரது கட்சிக்கே தமிழ் தேசியக் கூட்டமைப்பு முண்டுகொடுத்து வருகின்றது. இத்தகைய ஒருவர் எமது நாட்டுக்கு ஜனாதிபதியாக வந்தால் எவ்வாறு தமிழ் மக்களின் அபிலாசைகளை பெற்றுத்தருவார் என நம்ப முடியும்.
நாம் தேர்தலுக்காக எதனையும் கூறுவது கிடையாது. அன்றும் இன்றும் என்றும் தமிழ் மக்களின் தேவைப்பாடுகளை முன்வைத்தே எமது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றோம். அரசுகளுடன் நாம் பேரம் பேசுவதை இரகசியமாக நடத்துவது கிடையாது. ஒளிவு மறைவுகள் எம்மிடம் கிடையாது. அந்தவகையிலேயே இம்முறையும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் எதுவித ஒளிவு மறைவும் இன்றி எமது கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளோம் என்றார்.
இதனிடையே அதிகாரம் தனக்கு கிடைக்கப்பெற்றால் அடுத்த ஆண்டில் முள்ளிவாய்க்காலில் மரணித்தவர்களுக்கு உறவுகளுக்காக ஒரு நினைவுச் சதுக்கம் நிச்சயம் அமைக்கப்படும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|