தொலை நோக்கில்லாமல் சுயநோக்குடனேயே திட்டங்கள் வகுக்குப்படுகின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, March 22nd, 2019

நம் நாட்டில் தொலைநோக்குடனான கொள்கைகள் தொடர்ந்து பேணப்படுவதில்லை. ஒவ்வொரு அமைச்சரும் தங்களது தனிப்பட்ட முத்திரை பதிக்கும் நோக்கோடு கொள்கைகளை மாற்றுகின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீர்வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

உணவு விவசாய சர்வதேச அமைப்பினரால் (குயுழு) வகுக்கப்பட்ட கொள்கைகள் திட்டங்கள் இங்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வெற்றிக்கு இதுவே வழிவகுக்கும். அமைச்சர்கள் இவற்றை துறைசார் தொலைநோக்கோடும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும்.

நம் நாடு 2020ஆம் ஆண்டில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஜ.நா சபை ஒவ்வொரு நாட்டிற்கும் மீன்பிடி பிரமாண ஒதுக்கீடுகளை ஏற்படுத்த விளைகின்றது. எமது மீன்பிடி புள்ளிவிபரப் பதிவுகளை ஏற்படுத்த நிர்ப்பந்திக்கப்படுவோம்.  நாம் எமக்கான ஒதுக்கீட்டை பெறாவிட்டால் அவற்றை அந்நியருக்கு தாரைவாத்து கொடுக்க வேண்டி இருக்கும்.

இது எமது கடற்றொழில் சார்ந்த சமூத்தினருக்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் மாபெரும் வீழ்;ச்சியை ஏற்படுத்தும். ஜ.நா சபை இதை கடல்சார் சட்டமாக ஏற்றுக் கொள்ள நாம் நிர்ப்பந்திக்கப்படுவோம். காரணம் ஜ.நா ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்களில் நம் நாடும் ஒன்றாகும்.

எனவே, பின்வரும் அனுகுமுறைகளை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன். நிரந்தர மீன்பிடி கொள்கை வகுத்தல். அவற்றை செயற்படுத்துதல். இதன் மூலம் ஆகக் கூடிய வருமானம் பெறும் உத்வேகத்தை ஏற்படுத்தல், நிதிக்கொள்கை, மீன்பிடி தொழில்நுட்பம் பற்றிய அறிவு போன்றவற்றை வலுவூட்டல் மூலம் பெற்றுக் கொடுக்க முனைய வேண்டும்.

இங்கு 55அடி நீளத்திற்கு கூடுதலான பெரிய கப்பல்களை கட்டுவதற்கான வல்லமை உடைய துறைசார் சிற்பிகள் உள்ளதாக மீன்பிடி துறைசார் நிபுணர்களிடம் இருந்து அறியக் கிடைத்துள்ளது.  இவற்றை உங்கள் கவனத்திற்கு எடுக்குமாறு கேட்டுக் கொள்வதுடன், வடக்கிலே தற்போது எமது கடற்றொழிலாளர்கள் முகங்கொடுத்து வருகின்ற சில முக்கியப் பிரச்சினைகள் உள்ளன.

குறிப்பாக, ஏற்கனவே தடைசெய்யப்பட்டுள்ள உள்ளூர் இழுவலைப் படகுகளின் பாவனை காரணமாக தீவகம் உட்பட்ட யாழ் மாவட்ட கடற்பரப்பில் ஏற்படுகின்ற வள அழிவுகள், பருத்தித்துறை கடற்பரப்பில் பிற மாவட்ட கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற டைனமைட் பயன்படுத்துகின்ற தொழில் முயற்சிகள், அதாவது, அட்டைத் தொழிலில் ஈடுபடுகின்ற பிற மாவட்ட கடற்றொழிலாளர்களால் புPளு கருவி மூலமாக தகவல்கள் வழங்கப்பட்டு, மீன்கள் அதிகமிருக்கும் இடங்கள் நோக்கி வருகின்ற பிற மாவட்ட கடற்றொழிலாளர்களால் டைனமைட் மற்றும் சுருக்கு வலைகள் பயன்படுத்தல் போன்ற தொழில் முயற்சிகள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும். இதனால் வளப் பாதிப்புகள் மட்டுமன்றி ஏனைய சிறு தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அத்துடன், கடல்சார்ந்து சரணாலயங்களை அமைத்து வருவதால் கடல் ஆறுகள் சார்ந்த தொழிற்துறைகளில் ஈடுபடுகின்ற கடற்றொழிலாளர்கள் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இது தொடர்பில் அவதானங்களைச் செலுத்தி, கடற்தொழிலாளர்களுக்கு தொழிலில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு, வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அதேநேரம், வடக்கு கடற்பரப்பிற்குள் அதிகளவிலான பிளாஸ்ரிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக, உள்ளூராட்சி நிறுவனங்களே இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவதால், பொது மக்களும் அதற்குப் பழக்கப்பட்டுள்ளனர். எனவே, இது தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அவை தடைசெய்யப்பட வேண்டுமெனக் கோரிக்கைவிடுகின்றேன். 

Related posts:

தூரநோக்குள்ள முன்னெடுப்புக்களை மேற்கொள்வதனூடாகவே பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணமுடியும் - வேலணை...
தலைமுறைகளுக்கு சொத்துச் சேர்க்கும் அக்கறை தமிழ் மக்கள் மீது இல்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெர...
வட பகுதியில் மேற்கொள்ளப்படும் அனைத்து சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராகவும் நடவடிக்கை - அமைச்சர் டக்...