தேவைப்படும்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பெரும்பான்மையை நிரூபிப்பார் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, November 4th, 2018

இலங்கையில் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்ட பிறகு, அந்த அரசில் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கின் அபிவிருத்தி, இந்து மத அலுவல்கள் அமைச்சராகப் பதவியேற்றிருக்கிறார் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா. கொழும்பு நகரில் தனது நிர்வாக அலுவலகத்தில் வைத்து பி.பி.சியின் செய்தி சேவைக்கு வழங்கிய பேட்டியின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன் முழு வடிவம் வருமாறு –

கே. இலங்கையின் புதிய அரசியல் சூழலுக்கு பின்னணி என்ன?

. இலங்கையில் கடந்த காலத்தில் இருந்த அரசு பொருளாதாரத்தில் சரியாகக் கவனம் செலுத்தவில்லை. அதனால், விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கிறது. ஆட்சிக்கு வரும் முன் பல வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தது. ஆனால், அதை அவர்கள் நிறைவேற்றவில்லை. ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மக்கள் தங்கள் அதிருப்தியையே வெளிப்படுத் தியிருக்கிறார்கள்.

சிங்கள மக்கள், தமிழ் மக்கள், இஸ்லாமியர்கள் என எல்லோருக்குமே அதிருப்தி இருக்கிறது. வடக்கில் வலுவாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பல வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தது. ஆனால், வரவிருந்த அரசுடன் பேசி அந்த வாக்குறுதிகள் அளிக்கப்படவில்லை. வடக்கிலெல்லாம் பல மக்கள் வெடி கொளுத்தி சந்தோஷத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இது அரசின் மீதான அதிருப்தி என்பதைவிட கூட்டமைப்பின் மீதான அதிருப்தி என்றுதான் சொல்ல வேண்டும்.

கே. மக்களுக்கு அதிருப்தி இருந்தால், அதற்கு தேர்தலில் வாக்களித்துத் தோற்கடிப்பார்களே.. எதற்காக ஜனாதிபதியே இப்படிச் செய்ய வேண்டும்?

. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வென்றுவந்தபோது, ரணிலிடம் 43 இடங்களே இருந்தன. அப்போதைய பிரதமரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்கள் இருந்தன. இருந்தாலும் ரணில் பிரதமராக்கப்பட்டாரே..

கே. அப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பல எம்பிக்கள் ஆதரவளித்தார்கள்..

. அப்படியானால், இப்போது மஹிந்தவுக்கு ஆதரவில்லை என்று சொல்லவருகிறீர்களா? அப்போது எப்படி 43 இடங்களோடு ரணில் வந்து பெரும்பான்மையைப் பெற்றாரோ, அதேபோலத்தான் இப்போது மஹிந்த பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடுதான் வந்திருக்கிறார்.

பலரும் பிரதமரை பதவிநீக்கம் செய்ய ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லையென்கிறார்கள். அது உண்மையல்ல. 19வது திருத்தச் சட்டத்தின் சிங்கள, தமிழ் பிரதிகளில் குழப்பம் இல்லை. இந்தக் குற்றச்சாட்டை சுமத்துபவர்கள் எல்லாம் ஆங்கிலப் பிரதியை வைத்து குறை சொல்கிறார்கள்.

இந்த மூன்று மொழிகளில் சொல்லப்பட்டிருப்பதற்கு இடையில் முரண்பாடு வந்தால் சிங்களத்தில் சொல்லப்படுவதுதான் இறுதியாக எடுத்துக்கொள்ளப்படும். சிங்கள, தமிழ் பிரதிகளில் ஜனாதிபதிக்கு அந்த அதிகாரம் இருக்கிறது என்றே கூறப்பட்டிருக்கிறது. ஆனால், ஆங்கிலப் பிரதியை வைத்துக்கொண்டு இவர்கள் விவாதிக்கிறார்கள்.

“பிரதமர் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கும் பொதுத் தேர்தல் முடிவுறுத்தலுக்கும் இடைப்பட்ட காலம் தவிர, இறப்பதன் மூலம், பதவியிலிருந்து அகற்றப்படுவதன் மூலம், அல்லது பதவி துறப்பதன் மூலம் அல்லது வேறு வகையில் பதவி வகிக்காதொழிதல் மூலம்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. நான் ஏற்கனவே சொன்னதைப் போல சிங்களத்தில் இது தெளிவாக இருக்கிறது. அதைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்?

கே. மஹிந்தவுக்கு தற்போதைய சூழலில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. அவர் எப்படி பெரும்பான்மையைத் திரட்டப்போகிறார்?

. ரணில் முதலில் பிரதமராகும்போது எப்படி மற்ற கட்சிகள் ஆதரவளித்தனவோ, அதேபோல மஹிந்தவுக்குப் பெரும்பான்மை தேவைப்படும்போது அதை அவர் நிரூபிப்பார்.

கே. இலங்கையில் புதிய அரசியல் யாப்பு குறித்த விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. மஹிந்த பிரதமராக நிலைபெற்றுவிட்டால் தமிழர்களுக்கான உரிமைகளை வழங்கும் வகையிலும் அபிலாஷைகளை பெற்றுத்தரும் வகையிலும் அது இருக்குமா?

. புதிய அரசியல் யாப்பு தொடர்பாக விவாதங்கள் நடந்திருக்கின்றன. ஆனால், இதுவரை தமிழ் தலைமைகள் அதனை சரியாக கையாளவில்லை. எந்த ஒரு ஆட்சியும் புதிதாக வரும்போது ஆறு மாதம் – ஒரு வருடத்திற்குள் முக்கியமான விவகாரங்களைப் பேசித் தீர்த்திருக்க வேண்டும். அதை இவர்கள் செய்யவில்லை. இவை தற்போது பெரிதாகிவிட்டன. இனி அவற்றைத் தீர்ப்பது கடினம்.

காமென்வெல்த் கூட்டம் சில வருடங்களுக்கு முன்பாக இங்கே நடந்தபோது, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இங்கே வரக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர் வந்திருந்தால் 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பார். இப்படித்தான் பல சமயங்களில் தவறு இழைத்தார்கள் தமிழ் தலைமைகள்.

கே. நீங்கள் அமைச்சராக பதவியேற்றிருக்கிறீர்கள். புதிய அரசியல் யாப்புக்கான விவாதம் நடந்தால், தமிழர் உரிமைகளுக்கு வலியுறுத்துவீர்களா?

. ஏன் புதிய அரசியல் யாப்பைப் பற்றியே பேசுகிறீர்கள்? இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை செயல்படுத்தினாலே போதுமே? தமிழ் தலைமைகள் ஒழுங்காக இருந்திருந்தால் வடக்கும் கிழக்கும் ஒரே அலகாக இருந்திருக்கும். காவல்துறை அதிகாரம், காணி அதிகாரம் ஆகியவை கிடைத்திருக்கும்.

கே. மஹிந்த தன் தரப்பு ஆதரவைத் திரட்டிக்கொண்டிருக்கும்போது, நீங்கள் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது கூட்டமைப்பு தன் ஆதரவைத் தர தடையாக இருக்குமா?

. இது ஒரு பிரச்சனையே அல்ல. மஹிந்தவுக்கு போதிய அளவுக்கு ஆதரவு இருக்கிறது. அவர்களும் ஆதரித்தால் சந்தோஷம். இவர்கள் ஆக்கபூர்வாக செயல்படுவார்கள் என்றால் நானே பதவியிலிருந்து விலகிவிடுவேன். ஆனால், இவர்கள் ஆக்கபூர்வமானவர்கள் அல்ல.

கே. வடக்கில் நடந்துவந்த வீடமைப்புத் திட்டத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளால் அதில் தொடர்ந்து இழுபறி நீடித்துவந்தது. நீங்கள் இப்போது வடக்கு அபிவிருத்தி அமைச்சர். என்ன செய்யப் போகிறீர்கள்?

. இந்த நவம்பர் மாதமே திட்டத்தைத் துவங்கப் போகிறோம். 15 ஆயிரம் வீடுகளுக்கு அஸ்திவாரம் போடப்போகிறோம். இதை விரைவில் கட்டி முடிப்போம்.

Untitled-1 copy

Related posts:


கீரிமலை வலித்தூண்டல்றோ.க.த.க.பாடசாலையின் செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் ...
மன்னார் மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்ட அலுவலகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந...
மன்னார் விரிகுடா எதிர்கொள்ளும் விவகாரங்களும் பிரஸ்தாபிக்கப்பட வேண்டும் - வங்காள விரிகுடா கலந்துரையா...