தேர்தல் முறை மாற்றம் என்பது மக்கள் நலன்சார்ந்ததாகவே அமையப்பெறல் வேண்டும் – ஊடக சந்திப்பில் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, September 17th, 2016

தேர்தல்முறையில் மாற்றம் ஏற்படுத்துவது என்பது அரசியல்வாதிகளது தேவைகருதிய மாற்றமாக அமையாது நாட்டு மக்களது அரசியல் உரிமைகள் மற்றும் தேவைகளை வலியுறுத்தியதான மாற்றமாக அமையப்பெறவேண்டும் என்பதுடன் அதற்கான நிரந்தர தீர்வுமாகவும் அமைய வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம் (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறை தொடர்பான விடயங்களில் மாற்றங்களை கொண்டுவருவதற்கான முயற்சிகள் நாடுதழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை நல்லதொரு விடயமாகவே நாம் கருதுகின்றோம். இதனூடாக கிடைக்கப்பெறும் தரவுகளை ஆராய்ந்து முடிவெடுக்கும் அதிகாரம் அரசியல் சாசன வழிநடத்தல் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் செயற்பட்டுவருகின்றது. இக்குழுவில் நானும் ஒரு அங்கத்தவராக இருந்துவருகின்றேன். இதனால் இக்குழுவினூடாக தேசிய  இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வுக்கு தொடர்ச்சியான அழுத்தத்தை கொடுக்க இருக்கின்றேன்.

தமிழ் மக்கள் தொடர்பில் ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை கொண்டுவரவேண்டும் என்று இலங்கை இந்திய ஒப்பந்த காலத்திலிருந்து நாம் வலியுறுத்தி வருகின்றோம். ஆனால் அத்தகைய தீர்வுத்திட்டங்களுக்கான சந்தர்ப்பங்கள் எல்லாம் ஏனைய தமிழ் அரசியல் தலைமைகளின் சிறுமைத்தனமான அரசியல் நகர்வுகளால் தட்டிக்கழிக்கப்பட்டு வந்துள்ளன. அதன் காரணமாக தமிழ் மக்கள் மிகப்பெரிய விலைகளை கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது என சுட்டிக்காட்டினார்.

மேலும், அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பு நடத்திய பொன்னையன் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்திய டக்ளஸ் தேவானந்தா அவரது சுய ஒப்புதல் வாக்குமூலம் தொடர்பாக தாம் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் கட்சியின் அரசியல் நிலைப்பாடு தொடர்பாகவும் இதன்போது தெளிவுபடுத்திய டக்ளஸ் தேவானந்தா ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

epdp news

Related posts: