தேயிலை உற்பத்தியையும் விரைவில் இழக்க வேண்டி நிலை ஏற்பட்டுவிடும் –  டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, March 22nd, 2018

உரிய பராமரிப்புகள் இன்றிய நிலையில் இன்று தேயிலைத் தோட்டங்கள் வெறும் காடுகளாக மாற்றப்பட்டு வருகின்றன. மரங்கள் வெட்டப்பட்டு மண்சரிவுகள் அதிகமாக ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலை தொடருமானால், இன்று இருக்கின்ற குறிப்பிட்ட அளவு தேயிலை உற்பத்தியையும் நாம் விரைவில் இழக்க வேண்டி ஏற்பட்டுவிடும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தீவிர பொறுப்பு சட்டமூலம், கொழும்பு பங்குத் தொகுதிப் பரிவர்த்தனையை பரஸ்பரமயமாக்கல் சட்டமூலம், வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தின் கீழான கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டபின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

எமது நாட்டைப் பொறுத்த வரையில், இந்த வருடத்தின் முதல் 53 நாட்களில் கொழும்பு பங்குச் சந்தைக்கான வெளிநாட்டு உள்வாங்கல் 15 பில்லியன் ரூபாவினால் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டு, உள்நாட்டு முதலீட்டாளர்கள் மூலமாக 1.1 பில்லியன் ரூபா முதலீடுகள் கிடைக்கப் பெற்றதாகவும் குறிப்பிடப்படுகின்ற நிலையில், அதன் பின்னரான அண்மைக் காலத்தில் அம்பாறை மற்றும் திகன பகுதிகளில் ஏற்பட்ட இனவாத வன்முறைச் செயற்பாடுகள் காரணமாக, அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டதன் விளைவாக, பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று கடந்த வருடம் ஏற்றுமதி வருமானத்தில் அதிகரிப்பு காணப்பட்ட போதிலும், இறக்குமதி செலவீனமானது மிகவும் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், குறிப்பாக எரிபொருள் இறக்குமதிக்கென ஒதுக்கப்பட்டிருந்த நிதியைவிட மேலதிகமாக 900 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட நேரிட்டமை மற்றும், தங்க இறக்குமதி நிறுவனங்களுக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை அதிகமாக விடுவித்தமை காரணமாக அந்நியச் செலாவணி பாதிப்பும் ஏற்பட்டிருந்தது.

இதன் காரணமாக வங்கிகளின் ஈட்டல் வட்டி வீதங்களை அதிகரிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டின் பொருளாதார நிலைமை மேலும், மேலும் மோசமான திசையை நோக்கிப் பயணத்திக் கொண்டிருப்பதையே காணக்கூடியதாக இருக்கின்றது.

இத்தகைய நிலையில் நாட்டின் உற்பத்தி செயற்பாடுகளை பலப்படுத்தாமல், கடன்களை நோக்கியே நாடு  சென்று கொண்டிருக்கின்றது. முதலீடுகளுக்கான வழிகளை நோக்கிச் செல்வதாகக் கூறப்பட்டாலும், அது இன்னமும் போதிய இலக்கினை எட்டாத நிலையே காணப்படுகின்றது. எனவே, இந்த நாட்டின் உற்பத்தித்துறை சார்ந்து, குறிப்பாக எமது பகுதிகளில் காணப்படுகின்ற வளங்கள் சார்ந்து அவதானங்’களை செலுத்துவது பொருத்தமாகும் என நினைக்கின்றேன்.

தேயிலை, புடவை மற்றும் ஆடைகள், பெற்றோலிய உற்பத்திகள் போன்றவற்றின் குறிப்பிட்ட அளவு அதிகரிப்பு காரணமாகவே கடந்த ஆண்டு ஏற்றுமதி பொருளாதாரத்தில் 11.4 பில்லியன் அமெரிக்க டொலர் கொண்ட வரலாற்று ரீதியிலான பெறுமதியினை இந்த நாடு எட்ட முடிந்துள்ளதாகத் தெரிய வருகின்றது.

இதில், தேயிலையும் ஒன்று என்பதை நாம் அவதானத்தில் கொள்ள வேண்டும். அதே நேரம், எமது நாட்டில் இன்று தேயிலை உற்பத்தித் துறையில் ஏற்பட்டு வருகின்ற கவனிப்புகள் அற்ற நிலைமையினையும் நாம் அவதானத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

Related posts:


நாட்டின் நலன்களுக்காக ஊடகங்கள் செய்யும் பங்களிப்பு வரவேற்கத்தக்கது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி!
ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் திருத்தங்கள் வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி வலியுறுத்து!
'யானைக்கு தும்பிக்கையாக இருப்பவர்கள் வாக்களித்த எமது மக்களுக்கு நம்பிக்கையாக இல்லை” – டக்ளஸ் எம்.பி...