தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்படும் வீடமைப்புக் கடன் தொகையை  பொருளாதார சூழலுக்கேற்ப அதிகரிக்க முடியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம் பி கேள்வி!

Thursday, August 9th, 2018

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கீழ் தற்போது வழங்கப்பட்டு வருகின்ற வீடமைப்பிற்கான கடன் தொகையினை தற்போதைய பொருளாதார சூழலுக்கேற்ப அதிகரிக்க முடியுமா? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போதே வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களிடம் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில் –

கடந்த கால யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்திருந்த கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் கடந்த 2009ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்டதையடுத்து, 2011ஆம் ஆண்டு அம் மாவட்டத்தை அண்டிய கோணாவில் யூனியன்குளம் பகுதியில் 100 குடும்பங்களுக்கும்   பொன்னகர் பகுதியில் 60 குடும்பங்களுக்கும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கீழான கடன் அடிப்படையில் வீடமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் கோணாவில் யூனியன்குளம் பகுதியில் 23 குடும்பங்கள் மாத்திரமே முன்வந்து மேற்படி வீடமைப்புத் திட்டத்தினைப் பெற்றுக் கொண்டன.

இக் குடும்பங்களில் தற்போது 5 குடும்பங்கள் மாத்திரமே மேற்படி திட்டத்தின் கீழான வீடுகளை அமைத்து வாழ்ந்து வருகின்றன என்றும் தெரிய வருகின்றது. மேற்படி திட்டத்திற்கென அப்போது தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா கடனாக வழங்கப்பட்ட நிலையில் இத் தொகையைக் கொண்டு வீடுகளை முழுமையாக அமைக்க முடியாத நிலையில் பொருளாதாரத்தில் மிகவும் நலிவுற்றுள்ள ஏனைய குடும்பங்கள் தங்களுக்கான வீடுகளை பாதியளவில் அமைத்துவிட்டு அவற்றில் குடியேற முடியாமல் அவற்றைக் கைவிட்டுள்ளதாகவும் குடியிருக்கக் கூடிய வகையில் ஓரளவிற்கு வீடுகளை அமைத்துக் கொண்டவர்கள் வேறு கடன்களைப் பெற்றே அவ் வீடுகளை அமைத்துக் கொண்டுள்ளனர் என்றும் தெரிய வருகின்றது.

இந்த நிலையில் தற்போதும்கூட பொருளாதார விருத்திகள் எதுவுமில்லாமல் மிகுந்த பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ள மேற்படி மக்கள் பெற்றுள்ள கடனை வீடமைப்பு அதிகார சபையினர் அறவிட்டு வருவதாகவும் வீட்டுத் திட்டம் கைகூடாத நிலையிலும், பொருளாதார வசதிகள் இல்லாத நிலையிலும் தங்களால் மேற்படி தொகையினை செலுத்த முடியாதுள்ள நிலையில் தங்களது பிணையாளிகளிடம் அத் தொகையினை அறவிட முனைவதால் தங்களுக்கும் தங்களது பிணையாளிகளுக்கும் இடையில் மோதல் நிலைமைகள் உருவாகி வருவதாகவும் இம் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதே நேரம் தற்போது ஏனைய அரச மற்றும் இதர வீடமைப்புத் திட்டங்களுக்கு சுமார் 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்ற நிலையில், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கீழான வீடமைப்புத் திட்டங்களுக்கென வழங்கப்படுகின்ற 5 இலட்சம் ரூபாவைக் கொண்டு வீடுகளை முழுமையாக அமைக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்ற வடக்கு மாகாணத்தின் பயனாளிகள் இத் தொகையினை அதிகரித்து தற்போதைய பொருளாதார சூழலுக்கேற்ப வழங்கினால் தங்களால் தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் உரிய பயன்களைப் பெற இயலும் என சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாச அவர்களது முயற்சியினால் வடக்கு மாகாணத்தில் பல்வேறு வீடமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. யாழ்ப்பாணத்தில் நாவற்குழி, குருநகர் பொம்மைவெளி, மாதகல் இராசகிராமம் போன்ற வீடமைப்புத் திட்டங்களும்; இவற்றில் அடங்குகின்றன. இத்திட்டத்தின் கீழான வீடுகள் தற்போது மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலும் அடிப்படை வசதிகளற்ற நிலையிலுமே காணப்படுகின்றன.

மேற்படி விடயங்கள் தொடர்பில் எனது பின்வரும் கேள்விகளுக்கான பதில்களையும் எடுக்கப்படக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன என மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: