தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் எமது மக்களின் சொந்த காணி நிலங்கள் சூறையாடப்படுகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Monday, March 18th, 2019

எமது மக்களின் சொந்த காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாத நிலைமை குறித்த எமது நீண்டகால கோரிக்கைகள் இன்னமும் முழுமையாகவே தீர்க்கப்படாத நிலைமையைக் காணக்கூடியதாகவே இருக்கின்றது. இது தொடர்பில் அண்மையில்கூட கொழும்பிலும் ஒரு கவனயீர்ப்பு பேரணி நடத்தப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு கேப்பாப்புலவு, யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு, பலாலி, மன்னார் சிலாவத்துறை, பள்ளிமுனை, முள்ளிக்குளம், சம்பூர், பாணம, அஸ்ரப் நகர் போன்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல பகுதிகளிலும் மக்கள் மேற்படி காணி விடுவிப்பு தொடர்பில் தங்களது போராட்டங்களை இன்னமும் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்ற நிலையில், அவை தொடர்பில் ஆளுக்காள் இழுத்தடிப்புகளை செய்கின்ற நிலைமைகளும் தொடர்கின்றன.

எமது மக்களின் சொந்த இருப்பிடங்கள் மட்டுமல்லாது வாழ்வாதார இடங்களும் இத்தகைய காணி, நிலங்களுக்குள் அகப்பட்டிருப்பதால், குடியிருக்கவும் வழியில்லாமல், தொழில் செய்யவும் வழியில்லாமல் எமது மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர்.

2017ஆம் ஆண்டில் உலக வங்கியானது நிலம் மற்றும் வறுமை குறித்து நடத்திய மாநாட்டில், காணி உரிமையைப் பாதுகாத்தல் என்பது வறுமையைக் குறைப்பதற்கும், நாட்டினதும், குடும்பத்தினதும் பகிரப்பட்ட செழிப்பினை மேம்படுத்திக் கொள்வதற்கும் மிக அவசியமானது என்ற தொனிப் பொருளை வெளிப்படுத்தியிருந்தது.

அந்த வகையில் இன்று தங்களது சொந்தக் காணிகளே இல்லாத நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ள எமது மக்கள் மத்தியில் வறுமைநிலை என்பது பாரிய சவாலினைத் தோற்றுவித்துள்ளது.

எமது மக்கள் மீது இவ்வாறு வலிந்து திணிக்கப்பட்டுள்ள வறுமையானது, மறுபக்கத்தில் இன்னமும் எமது மக்களுக்கு மறுக்கப்படுகின்ற எமது மக்களின் காணி, நிலங்களின் ஊடாக பொருளாதார இலாபங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில் பார்க்கின்றபோது, தேசிய பாதுகாப்பு என்ற பெயரைக் கூறிக் கொண்டு எமது மக்களின் சொந்த காணி, நிலங்கள் படையினருக்கான பொருளாதார ஈட்டல்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற நிலையில், வரவு – செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு மேலும் அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டு வருகின்ற நிலையும் சொந்த, காணி நிலங்கள் அற்றுஇ வாழ்வாதாரங்களும் அற்று, பொருளாதார ரீதியில் நலிவடைந்து, எதிர்காலமே இருளாக்கப்பட்டு வருகின்ற எமது மக்களுக்கு கடன் திட்டங்களைத் தருகின்ற நிலையும் இந்த நாட்டில்தான் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டுக்கான வரவுசெலவு திட்டத்தின் காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு, தொலைத் தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு ஆகியன தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

இந்த நிலையில், யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் காங்கேசன்துறை மத்தி மற்றும் நகுலேஸ்வரம் கிராம சேவையாளர் பிரிவுகளில் தனியார் காணிகள் உள்ளடங்களாக 167 ஏக்கர் காணி காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கும், அங்கிருக்கின்ற ஜனாதிபதி மாளிகை உள்ளடங்களாக 65 ஏக்கர் காணி சுற்றுலா அதிகார சபைக்கும் என மொத்தமாக 232 ஏக்கர் காணி சுவீகரிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவித்தலை தெல்லிப்பளை பிரதேச செயலகம் ஒட்டி இருப்பதாகவும், மேற்படி பிரதேச சபைக்குக் கிடைத்துள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பையடுத்தே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிய வருகின்றது.

மேற்படி காணி சுவீகரிப்பு விடயம் காணி அமைச்சின் ஊடாகவே கையாளப்பட வேண்டும் என்றும், இந்த சுவீகரிப்பு விடயத்தை உடனே கைவிட உத்தரவிடுகின்றேன் என்றும் கௌரவ பிரதமர் அவர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையிலேயே இந்த காணி சுவீகரிப்பு ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகக் கூறப்படுகின்றது. எனவே, இந்த விடயத்தின் உண்மை நிலை என்ன? என காணி அமைச்சர் அவர்களிடம் கேட்க விரும்புகின்றேன்.

Related posts:

தவறுகளிலிருந்து கற்றுக் கொண்டு எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவோம் – மேதின செய்தியில் செயலாளர் நாயகம் ட...
எமது பாதை சரியானது என்பதை வரலாறு நிரூபித்திருப்பதாக ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்டளஸ் தேவானந்தா...
போக்குவரத்து நெருக்கடிகளை நிவர்த்திப்பதற்கு ஏற்பாடுகளை செய்துதருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ...