தேசிய நல்லிணக்கத்தை தமிழ் மக்களின் உணர்வுகளிலிருந்து கட்டியெழுப்ப கல்வி அமைச்சின் பங்கும் அவசியம் – டக்ளஸ் தேவானந்தா

Tuesday, May 23rd, 2017

எமது நாட்டில் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல் என்பது ஒரு பிரதான தலைப்பாக முன் வைக்கப்பட்டு, அதற்கான எற்பாடுகள் பல வழிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.

அந்த வகையில், தமிழ் மக்களுக்கு மலசலகூடங்களைக் கட்டிக் கொடுப்பதாலும், வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்துவதாலும், வீடுகளைக் கட்டிக் கொடுப்பதாலும், சிங்கள மக்கள் மத்தியில் போய், தமிழ் மக்கள் பரிதாபத்திற்குரியவர்கள் என்று கூறி வருவதனாலும் தேசிய நல்லிணக்கம் திடீரென ஏற்பட்டு, வலுவடைந்துவிடப் போவதில்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், அவர்களது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமையாகும்.

ஆனால், எமது மக்களிடையே தேசிய நல்லிணக்கத்தை வலுவுள்ளதாக – எமது மக்களின் உணர்வுகளுடன் ஒன்றியதாகக் கட்டியெழுப்ப வேண்டுமானால,; அதன் அடித்தள பங்களிப்பு கல்வி அமைச்சுக்கே உரியது என்பதையும் இங்கு நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.

அந்த வகையில், எமது மாணாக்கரிடையே அவர்களது சிறு வயது முதலே தேசிய நல்லிணக்கத்தை ஆழமாக வேரூன்ற வைக்க வேண்டியப் பொறுப்பினை கல்வி அமைச்சு இதய சுத்தியுடன் ஏற்றுக் கொள்ள முன்வர வேண்டும்.

எமது அரசியலமைப்பில் இருக்கின்ற சில ஏற்பாடுகளை முறையாக செயற்படுத்தினாலே எமது நாட்டில் இனங்களுக்கிடையில் நிலவி வருகின்ற பல்வேறு முரண் நிலைகளை அகற்ற முடியும். கடந்த காலங்களில் அவை செயற்படுத்தப்பட்டனவா? எனக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே, விதண்டாவாதங்கள் செய்து கொண்டிருக்காமல், தற்போதுள்ள சூழ்நிலையில் அவற்றைச் செயற்படுத்த முன்வராவிட்டால், பின்னர் எக்காலத்திலும் அவற்றைச் செயற்படுத்த முடியாத நிலையே ஏற்பட்டுவிடும்.

அத்துடன் கல்வித்துறை சார்ந்த நியமனங்களை மேற்கொள்கின்றபோது முன்னாள் ஜனாதிபதி மேன்மைதங்கிய ரணசிங்ஹ பிரேமதாச அவர்களது காலத்தில் கொண்டுவரப்பட்ட பொது நிர்வாக அமைச்சின் 15ஃ90 ஆம் இலக்க சுற்று நிருபத்தை முறையாகப் பயன்படுத்தி, இன விகிதாசாரம் பேணப்படல் வேண்டும் என்பதையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றத்தில் 2015ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழ் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனை அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:

காணிப் பிணக்குகளை தீர்ப்பதற்கு துரித கதியில் காணிக் கச்சேரிகள் நடத்தப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா...
அரச நியமனங்களில் இன விகிகதாசாரம் வழிமுறைகளை அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவும், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவும...
தற்துணிவுகளின் அடிப்படையில் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து நாம் வெற்றி கண்டுள்ளோம் - செயலாளர் ...

வன்முறை எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்- ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
மக்களின் தேவைகளை நிறைவேற்று வதற்காகவே நாம் மத்திய அரசுகளுடன் இணக்க அரசியலில் ஈடுபட்டோம்: சுய நலத்து...
தமிழ்த் தேசிய இனத்தின் அனைத்து உரிமைகளுக்கும் தீர்வு காணும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துங்கள் –நாடாள...