தேசிய நல்லிணக்கத்தை அர்த்தபூர்வமாகக் கட்டியெழுப்புங்கள் – டக்ளஸ் தேவானந்தா

Monday, June 13th, 2016

புகையிரதத்தில் பயணம் செய்யும் அங்கவீனமுற்ற படையினருக்கு சிறப்பு பயண அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனைப் பயன்படுத்தி அவர்கள் சாதாரண பயணச்சீட்டில் 50 வீத சலுகையைப் பெற்று பயணிக்க முடியும் என்றும் புகையிரத திணைக்களத்தின் போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை வரவேற்கின்றேன். அத்துடன் போரினால் தமது அங்கங்களை இழந்த எமது நாட்டுப் பிரஜைகள் அனைவருக்கும் இதுபோல சலுகைகளும், முன்னுரிமைகளும் கிடைக்கப்பெற வேண்டும். இத்தகைய செயற்பாடுகள் ஊடாகவே தேசிய நல்லிணக்கத்தை அர்த்தபூர்வமாகக் கட்டியெழுப்ப முடியும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடந்த 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஒத்திவைப்புப் பிரேரணையில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது –

இன்னமும் விடுவிக்கப்பட வேண்டிய எமது காணி, நிலங்களை துரிதமாக விடுவிக்க வேண்டும். குறிப்பாக, செழிப்பான வளம் கொண்ட விவசாய நிலங்கள், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் போன்றவையும் இன்னும் விடுவிக்கப்படாத நிலையே காணப்படுகின்றது.

அத்துடன், மீள் குடியேறிய மக்களுக்கான வாழ்வாதார வசதிகள் மேலும் வளப்படுத்தப்பட வேண்டும். சிறைகளில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும்.

பொலிஸாரும், படையினரும் அந்தந்த மாவட்டங்களின் இன விகிதாசாரத்திற்கும், சனத்தொகைக்கும் ஏற்ற வகையில் நிலை கொண்டிருத்தல் வேண்டும்.

வீடிழந்த மக்களுக்கான வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட வேண்டும். இதன்போது கடைப் பிடிக்கப்படுகின்ற இறுக்கமான நடைமுறைகள் தளர்த்தப்பட வேண்டும். வேலையற்ற பட்டதாரிகள் வேலை கேட்டு தவமிருக்கிறார்கள். சுகாதாரத்தொண்டர்கள் வேலை கேட்டும் நிரந்தர நியமனம் கோரியும் தெருவில் இறங்கி போராட்டம் நடத்துகிறார்கள்.

விசேட திட்டம் என்ற வகையில், சமுர்த்தி நிவாரணங்கள் மக்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு அதிகரிக்கப்பட வேண்டும். சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கையும் மக்களின் வாழ்நிலைக்கு ஏற்றவாறு அதிகரிக்கப்பட வேண்டும்.

கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள், யுத்த அனர்த்தங்களினால் தமது உடலில் குண்டுத்துகல்களையும், ஆயுத சிதறல்களையும் சுமந்து வாழ்கின்றவர்களுக்கு அரசு விஷேட வைத்தியர்களைக் கொண்டு உதவிகளை வழங்கும் என்று அறிவித்திருப்பதை வரவேற்கின்றேன்.

அந்த அறிவிப்பு முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதையும், பாதிக்கப்பட்டவர்கள் நன்மையடைவதையும் உறுதிப்படுத்தடவும் அவசியமான நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கவேண்டும்.

யுத்தம் காரணமாக அங்கவீனங்களை எதிர்கொண்டுள்ளோர், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், முன்னாள் இயக்கங்களின் போராளிகள் போன்றோரது வாழ்வாதரங்கள் தொடர்பில் விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

புகையிரதத்தில் பயணம் செய்யும் அங்கவீனமுற்ற படையினருக்கு இன்று முதல் சிறப்பு பயண அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனைப் பயன்படுத்தி அவர்கள் சாதாரண பயணச்சீட்டில் 50 வீத சலுகையைப் பெற்றுக் கொண்டு பயணிக்க முடியும் என்றும் புகையிரத திணைக்களத்தின் போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை வரவேற்கின்றேன். போரினால் தமது அங்கங்களை இழந்த எமது நாட்டுப் பிரஜைகள் அனைவருக்கும் இதுபோன்ற சலுகைகளும், முன்னுரிமைகளும் வழங்கப்படுவது அவசியமாகும். ஆனால் இதுபோன்ற சலுகைகளும், முன்னுரிமைகளும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் கிடைக்கப்பெற வேண்டும். போரை வெற்றி கொள்ள படையினர் போராடியதைப்போல், போர் வெற்றி கொள்ளப்படுவதற்கு தமிழ் மக்கள் தம்மை அர்ப்பணித்திருக்கின்றார். அதில் பெறுமதிமிக்க உயிர்களையும், தமது அங்கங்களையும், உடமைகளையும் இழந்திருக்கின்றார்கள் என்பதையும் கவனத்தில் எடுப்பது அவசியமாகும்.

அதுவே தேசிய நல்லிணக்கத்தை அர்த்தபூர்வமாகக் கட்டியெழுப்பவும் தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுக்கவும் உதவும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.


தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கை வவுனியாவிற்கு மாற்றுவதற்கு தயங்குவது ஏன்? டக்ளஸ் எம்.பி. கேள்வி!
தீராப் பிரச்சினைகளுக்கு உரிய வகையில் தீர்வு காணப்படவேண்டும் என்பதில் அக்கறையுடன் உழைத்து வருகின்றோம்...
இரணைதீவு  மக்களை சொந்த இடத்தில் மீளக்குடியேற்ற வேண்டும் - ஜனாதிபதிக்கு டக்ளஸ் எம்.பி. கடிதம்!
சந்தை வாய்ப்பில்லாமையால் நடுத்தெருவில் விவசாயிகள் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ச...
இலஞ்சம் ஊழல் எழுதப்படாத சட்டமாகவே இருக்கின்றது - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்...